Saturday 1 June 2013

பாக்கியசாலி

அழகியல் இலக்கணத்தின்
அரிச்சுவடி நீயடி,
அன்பெனும் கவி புனைந்த
காப்பியம் நீயடி,
பண்பினை பாடமாக்கி
படைத்தவள் நீயடி,
பாசத்தை முறையாக்கி
தந்தவள் நீயடி.


இதழிலே குறு நகை
புரிந்திடும் பொழுதிலே,
இயங்க மறுத்திடும்
இதயமும் துடித்திடும்!
குரல்வழி தெறிக்கும்
குறிப்புகள் கொண்டென்
காதல் கவிதையின்
மெட்டுகள் மலரும்!

முத்துப் பல் வரி
முறுவலைக் கண்டிட
மின்னலும் தன்நிலை
விட்டொளி இழந்திடும்!
திலகம் தொட்டிடும்
நெற்றிச் சுட்டுடை
நெற்றியும் விண்திரை
முகமதி நீந்திடும்!

உன் முகம் மலர்ந்திட
என் துயர் பறந்திடும்,
கலங்கமில்லா உனைக்
காத்திட ஏங்கினேன்.
இத்தனை அழகுடை
பெண்ணிவள் என் மனை
பெற்றவன் நான் பெரும்
பாக்கியசாலியே!

No comments:

Post a Comment