Tuesday 16 December 2014

உயர்ந்த கவிதை







வாசிக்கத் தொடங்கியவுடன்
தன்னை பொருத்திப் பார்க்கத் துடித்த மனம்
இறுதிவரி எட்டும்பொழுதில்
இமையுருக
விலக்க விரும்பியும் இயலாமல்
தவிக்கும் நொடியில்
அக்கவிதை உயர்ந்ததென
உச்சத்தில் நின்று

தன் தோளைத் தட்டிக்கொண்டது

வேண்டும்

















மழை நாளிலுந்தன் மடிசாய வேண்டும்
மலரொத்த விரலென் தலை கோத வேண்டும்
அழல் பூண்ட கண்கள் குளிர் காயவேண்டும்
அன்பென்னும் தேசம் நமை யாள வேண்டும்

மலையொத்த சுமைகள் மறைந்துதிர வேண்டும்
மனமெங்கும் மகிழ்ச்சி மனுவாக வேண்டும்
நிலைபெற்ற நேசம் நிதம் பெருக வேண்டும்
நினைவுக்குள் நீயே வரமாக வேண்டும்

உயிரோடு பேசும் விழி சேர வேண்டும்
உன் கோபம் அன்பின் விதையாக வேண்டும்
விடிவானத் தென்றல் இசைபாட வேண்டும்

விலகாது நாமும் இணைந்தாட வேண்டும்

இடைச்செருகல்

வாசிப்பின் ஒவ்வொரு வரியிலும்
உன்னைத் தேடுகின்றேன்
இடைச்செருகலாய் உனை எண்ணுவதாய்

ஏன் எண்ணிக்கொள்கின்றாய்?

ஓமெனும் மந்திரம்




















சாணம் தெளித்த முற்றத்தில்
வந்தவளின் முகஞ்சுளிப்பில்
அவளவஸ்தையை கண்டுகொண்டாரவர்

தலை தாழ்த்தி
விழியுயர்த்தி நோக்கியவர்
என்னவெனக் கேட்க
முதுகு பிடிப்பை
முக்கலோடு சொன்னாள்

மெழுகிய திண்ணையில் அமரச் செய்து
மண் சுவற்றை சுரண்டியெடுத்த
மண்ணுருண்டையை
முதுகில் மூன்றுமுறை
மந்திரமாகவேதோ முணுமுணுத்தவாறு
மேலிருந்து மீழாக உருட்டியவர்

சரியானது, போவெனச் சொன்னதும்
அம்மாஞ்சியாய் தலையாட்டிப் போனாள்

அத்தனையும் கண்கொட்டாமல்
பார்த்திருந்த பேரன்
என்ன மந்திரமது தாத்தாவென கேட்க
சரியாகணும் முருகாவெனும்
மந்திரத்தை ஓத

ஓமெனும் மந்திரத்தின்
உட்பொருளையன்று உண்ர்ந்தவனாய்
இன்றும் செபிக்கின்றான்

எச்சூழலிலும்,

நம்பிக்கைதானதன் சாராம்சமென அறிந்தும்..!

அகலொளி

















விழிப்பார்வைகள் மங்கி
வெளிச்சப் புள்ளிகள் தேய
இருளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான்

உணர்ச்சிகள் ஒன்றிணைந்து
நாசி, செவி வழியே
நிகழ்வுகளை உற்று நோக்கிக்கொண்டிருந்தன

தொலைவில் தடதடத்த
மோட்டார் வாகனச் சத்தமும்
வழக்கமாய் அடுத்திருக்கும் வீட்டில்
தெருவதிரக் கத்திக் கொண்டிருக்கும் அவனின் குரலும்

அம்மா வென ஓங்காரமிட்டழைத்துக் கொண்டிருக்கும் அஞ்சலிக்குட்டியின் அழுகையும்
தெருமுகனையில் திண்ணையில்
வாசம் செய்திருக்கும்
காமாட்சிப் பாட்டியின் வெற்றிலையிடிக்கும் சங்கீதமும்

ஊரின்னும் அடங்கும் வேளை
வரவில்லையென பறைசாற்றியது

அத்தனையும் தராத மன அழுத்தத்தை
அவன் மனைவியின் மௌனம்
அவனுள் தருவித்துக் கொண்டிருந்தது
கை நீட்டி அவளது செழுகன்னத்தைத் தடவியபோது

வழிந்திருந்த நீர்த்திவலைகள்
தனது பார்வை குறைபாட்டினையெண்ணி
அவள் தவிப்பதையுணர்த்தி
தனது விழியிருளின்
அகலொளியாயிருப்பாளென

சொல்லாமல் சொல்லியது

மோட்சம்



அத்தனை சாளரங்களும் எனக்கானவைதான்
தற்போது என்னை எரியூட்டிக் கொண்டிருக்கிறேன்
பொறுத்திரு தேவதையே,
உன் வசந்தப் பார்வைக்காக
பிற சாளரங்கள் பின்னொரு நாளில் திறக்கப்படலாம்

அன்று நான் மோட்சமும் பெறலாம்..!

மௌனம் கற்கே



















துள்ளிவிளையாடும் மீன்களுமற்ற
நிசப்த ஒலியுண்டு
நீண்ட மௌனத்தில் ஆழ்ந்திருந்த அக்குடில்
மௌன கதை கற்ப்பிப்பதற்காக
மந்தகாசமாய் எனையழைத்தது

நீள்மூச்சு வாங்கி
நடந்தே நான் வருவதாகக் கூற
காற்றுடன் அலைவரும்
கடுமழை உடன் வருமெனச் சொல்லி மறுத்தது

மூச்சுக் காற்றைப் புறந்தள்ளிப் புறப்பட
உயிரற்ற முடத்தின் மௌனம்
மௌனக் கதையைவிட சுவாரசியமென
காற்றென்னைக் கடத்திப் போனது

யாரேனும் மௌனம் கற்கே வேண்டுமெனில்
காற்றினிடம் வழிகேட்டு

இனி என்னிடம் வரலாம்..!