Wednesday, 30 September 2015

பாசுரங்கள் எழுத

மொழிகளும் சொல்ல மறந்ததை
விழிகளில் சொல்லிச் சென்றாள்
ஆழ்கடல் துள்ளும் மீனாய்
அபிநயம் செய்து நின்றாள்

கவிதைகள் புனைகவென்று
கண்களைத் திறந்து வைத்தாள்
ஆயிரம் பாசுரங்கள்
எழுதிட தன்னை ஈந்தாள்!

வாழ்த்து மடல்


வான்புகழும் வெற்றி பெற்ற
வீரத் திருமகன் வெற்றிசெல்வனின்
தூய மணி மார்பில்

வானுரையும் தேவர்களை
விஞ்சிய செவ்விளங்குமரி
கண்களிலே காதலுடன்,

கைகளிலே மாலையுடன்
விண்ணவரும், மன்னவரும்
போற்றிப் புகழுரைக்க
பொன்புலரும் காலையில்
வந்தனள்,
மாலையிட்டனள்,
நாணம் கொண்டனள்,
தேகம் பூத்தனள்.

வெற்றிசெல்வன் விரலும்,
வைஜயந்தி விரலும்
இணைந்த அத்தருணமே
இப்பூவுலகின் பொன்னேட்டில்
பதிந்ததன்றோ!

இப்படியோர் தம்பதியை
இவ்வுலகம் கண்டதில்லை.
உருவமே மாறி நிற்க
உணர்வுகளில் ஒன்றாகி
உனக்குள்ளே நான்,
எனக்குள்ளே நீயென்ற
உயர் நிலை அடைந்தவராய்
உத்தமராய் உள்ளவரை
என்றென்றும் வாழ
வாழ்த்துகிறேனிந்த
வாழ்த்து மடல் வழியே!

தவமிருந்தேன்

ஆழ்கடலில் மூச்சடக்கி
முன்னூறு வருடங்கள்
அவளைக்காண தவமிருந்தேன்.


மேனியெங்கும் செடி பூத்து
மேலுடையே புற்றாகி
ஆதி முதல்
அந்தம் வரை
அத்தனையும் காற்றாகி
அவளைத் தேடித் தேடி...


எங்கிருந்தோ ஓரு
மலர் வாசம்
உயிரின் வேரைத் தொட
திறந்தேன் கண்களை
எதிரிலென் தேவதை.


வெளிர் நிற ஆடையிலே
கூந்தலலை காற்றாக,
மலரிதழில் தேனூற,
கருவிழியாலெனைக் கவ்வ,
நின்றா: எதிரில்.


மூச்சடக்கிப் போனதனால்
மூச்சில்லாதவனாய்
பேச்சடக்கி இருந்ததனால்
பேசும் திறன் மறந்தவனாய்
புற்றும், செடியும், கொடியும்
புறந்தள்ளி எழ
முயற்சிக்க்க் கூட
இயலாமையால்


உள்ளத்து வேகத்தை
ஒருவகைப் படுத்தி
உந்தி எழுந்தேன்.
தொப்......
அம்மா,


பக்கத்து வீட்டு கடைக்குட்டி
குட்டிப் பிசாசு,
குறும்பின் சிகரம்,
என்மேல் கிடந்துறங்கிய
விஜிக்குட்டியும் நானும்
கட்டிலிலிருந்து
கீழே விழுந்து
முனகலானோம்.

தொலைந்து போனேன்

கவனமில்லா நேரத்தில்
காற்றென் நாசியைத்
தழுவாமல் கடந்தது


நினைவறியா நேரத்தில்
பூஞ்சிறகின் ஸ்பரிசம்
என் செவி மடலை
தொட்டுப் போனது.


கனவுலகின் தொடக்கத்தில்
மழையொன்று
எனை மட்டும்
நனைக்காமல் பெய்தது.


விடிவெள்ளியைத் தேடிய
விழியிரண்டில்
கருமைத் திடல்
காட்சியே படர்ந்தது.


ஆற்றாமையால் நான்
ஆறுதல் கொடி தேடி
அவசரமாய்
அன்றே தொலைந்து போனேன்.

Tuesday, 29 September 2015

அவ்வளவு


மாலை மயங்கும் வேளை
மந்திரமாய் மனதை
அசைக்கும் மழைக் காற்று
வந்தனள் என்னவள்

மல்லிகைப்பூவும்
மகிழ்ப்பூவும் சூடி
மெல்லியலாள்
அன்னம்போல் அசைந்து
அருகில் நின்றாள்

கண்டவுடன் கவிஞனுக்கு
காதல் கவியாக ஊற்றெடுக்க
கைகளால்
பரபரவென வரைந்து
கண்ணவளின்
கையில் கொடுத்தேன்

படித்தவள்
கண்கள் பனிக்க
உள்ளம் துடிக்க
உடனே
மீண்டுமென் இசைக் குயிலாய்
பிறப்பெடுத்தாள்.

பாடலாய் பாடி
என்னுளம் துளைத்தாள்.
ஆனந்தத்திலென் மனம்
அந்தரத்தில் சுழன்றது.

அருகில் வந்து கேட்டாள்.
என் பாடல் எப்படி
எவ்வளவு பிடித்தது
ஊரளவு, உலகளவு,
நீரளவு, நிலவளவு,
எவ்வளவென்று சொல்லுவேன்?

என் காதலுன்மீது
எவ்வளவோ
அவ்வளவு...!

அலைவரிசை தொடுவதில்லை
உன்னைத் தீண்டாத அலைவரிசை
என்னைத் தொடுவதில்லை,
உன்னுள் மூழ்காத நினைவலைகள்
என்னுள் பிறப்பதில்லை.
உன்னைச் சேராத கவிதைகள்
என்னுள் முகிழ்வதில்லை.
உன்னைக் காணாத பொன்னிலவு
எந்தன் வானிலில்லை.


வானம் பூக்காத பின்னிரவின்
வெள்ளித் தேரோட்டம் நீயெனவே,
கானப் பொன்னூஞ்சல் பின்னிவர
கண்ணில் பாவங்கள் நீ தரவே,
நாணம் கொண்டுந்தன் கால்தடமும்
நயன பாஷைகள் பேசிடவே,
நானுன் கரம் பற்றிக் காதலிசை
நாத மழையாக பொழிந்திடுவேன்!

Monday, 28 September 2015

வாசமும் நேசமும்


நீ விட்டுச் சென்றிருந்த வாசமும்
நான் பெற்றுக்கொண்ட நேசமும்
மழை நின்ற பின்னும்
மனதில் நிலை கொண்டே இருக்கின்றன

நமதென்று இருப்போம்நானென்னை அறிய விழைகிறேன்
அதற்காக என்னை கடக்கவும் முயல்கிறேன்

பிரபஞ்சப் பெருவெளியில்
துகளினும் துகளாய்
அளவிடவியலா அணுவாய் நானிருக்க

நான் நானில்லையெனும் நிலை
நானறியும்வரை
நானெனை உணரவியலுமா

ஐம்புலன்களின் வழியை மட்டும்
இறுகப் பற்றிக்கொண்டு
அதனுள் கண்டவற்றிற்கு
அர்த்தம் கண்டுகொண்டு

எல்லைதாண்டிய பெருஞ்சக்தியை
என்னுள்ளும் புறமும்
அறியும் வழியறியாமல்

நானறிந்தவற்றை மட்டும் உலகமென்றும்
எனை காப்பவரை மட்டும்
இறைவனெனக் கருதிக்கொண்டு

அளப்பறிய பெருஞ்சக்தியை
அறியாமலே இருக்கின்றேனே

நானெவ்விதமோ
அங்ஙனமே நீயுமிருக்க

எதற்கிந்த அழுக்காறு
ஏனிந்த கடுங்கோபம்

இருக்கும் சிலகாலமும்
எனதென்றும் உனதென்றும் இல்லாமல்
நமதென்று இருப்போமே

உனையறிய நீயும்
எனையுணர நானும்
முயற்சிப்போமே...!

காற்று நெய்த சேலை


பாலைவனச் சோலையில்
காற்று நெய்த சேலையை
உலர்த்தியது யார்

கவிதையே


உள்ளத்து உணர்வுகளை
தெள்ளெனப் புரியவைக்கும்
சிறுதுளி கண்ணீரும் கவிதையே

வளர்மதி சிவாகனடாவில் வாழும் இலங்கை தமிழரான இவர் எனக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக நட்பாக இருக்கின்றார். எனக்கு இவரை, இவரது எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது சரவணா ஹரி. மிக அற்புதமான பலப்பல கவிதைகளை இதுகாறும் படைத்திருக்கின்றார்.
மிகக் குறைவாகத்தான் எழுதுகின்றார். ஆனால் ஒவ்வொன்றுக்கும் இவர் தேர்ந்தெடுக்கும் களங்கள் அதியற்புதமானவை. வாசிக்கையில் நமது மனம் அப்படியே அக்களத்தில் அக்கணத்தில் லயித்துப் போகும்.
சுடச் சுட தேநீரும்
பத்திரிகைச் செய்தியுமாய்
நாட்டு நடப்புத் தெரிந்து கொள்ள
நாற்காலியில் அமர்ந்த கோமான்களே !
தொலைக்காட்சிப் பிரியர்களே!
சற்று நேரத்தில்
இறந்தவர் தொகை இன்னும்
எண்ணிக்கையில் அதிகரிக்கலாம்
இந்த மணித்துளியில்
காணாமல் போனவர்
பட்டியல் பெரிதாகியிருக்கலாம்
வன்புணர்வு செய்யப்பட்ட சகோதரிகள்
வாழ்வைத் தொலைத்துமிருக்கலாம்
ஒலி ஒளியோடு
மனித வேட்டைக் காட்சிகளை
மனிதம் தொலைத்த மனத்தோடு
உற்றுப் பார்க்கின்றீர்களா?
எதுகை மோனையுடன்
கற்பனை வண்ணம் கலந்தளித்த
கற்பழிப்புச் செய்தி
சுவாரஸ்யமாக இருக்கிறதா?
உயிருக்குப் போராடும்
ஜீவன்களின் கதறல்கள்
காதில் தெளிவாக விழவில்லையா?
இன்னும் ஒலியளவைக் கூட்டுங்கள்.
குருதி வெள்ளமா ?அதற்கென்ன?
அடுத்த சுற்றுலாப் பயணம்
அடுத்த கண்டத்தில் எங்கே போகலாம்?
தீர்மானியுங்கள் உணர்வற்ற தீரர்களே !
உயிர்த் துடிப்பு அடங்கும்வரை
சித்திரவதைச் செயல்கள்
கண்காட்சித் திருவிழாவாக இருக்கின்றதா?
ரசியுங்கள்
குழந்தைகள் குற்றுயிராக்கபடுகிறார்களா ?
கண்ணை மூடிக் கொண்டீர்களா?
அநீதி கண்டு பொங்கியெழ
அதற்கு மனிதம் வேண்டும்.
உயிருள்ளவரெல்லாம் மனிதரல்ல.
மனிதம் கொண்டவரே மனிதர்
என்னும் இக்கவிதையில் மனிதமிழந்த மனிதர்களின் குணங்களை சாடுகையில் வெட்கித் தலைகுனியத் தோன்றுகின்றது
வெற்றிடமாய் ஓரிடம்
---------------------------------------
சுப நிகழ்வுகளில்
முகூர்த்த நேரங்களில் மட்டுமே
தீய்ந்த வாசனை வருவதாய்
அடுக்களைக்கு அனுப்பப்படும் சாமர்த்தியம்
அறிந்தும் அறியாததுபோல் நடிக்கும்
அபலையவள்.
https://www.facebook.com/photo.php?fbid=858291740868247&set=a.470867989610626.110031.100000622888657&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் கைம்பெண்ணின் அவலக்குரல் கேட்டு மனம் கசியாதவர்கள் இருக்கமுடியாது
கண்டுபிடி......!!!
கயல்விழியாளே !
மறைந்திருந்து பார்க்கும்
மடி சுமந்த மல்லிகை மலரே!
என்னைக் கண்டு பிடி ...!!
https://www.facebook.com/photo.php?fbid=996246623739424&set=a.470867989610626.110031.100000622888657&type=1
எனத் தொடங்கும் இக்கவிதை நேற்று இவர் பதிவிட்ட்து. இனப்படுகொலையில் அழிந்த சமூகத்தின் வேதனை கண்ணாமூச்சி விளையாட்டின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது மனதை எனக்கு வெகுவாக பாதித்த்து.
வாசியுங்கள் தோழமைகளே, இவரது ஒவ்வொரு கவிதையும் களஞ்சியமே.

வாழ்க அன்னாரது எழுத்துப்பணி.

Sundara Pandianஎன்றும் என் மரியாதைக்குரிய குரு ஸ்தானத்தில் நான் வைத்து போற்றக்கூடிய தரம் வாய்ந்த நண்பர், ஐயா Sundara Pandian ஐ எனக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாகத் தெரியும்.
எனக்கு எழுதத் தொடங்கிய காலத்தில் இலக்கணம் தெரியாமலும், படிமமென்றால் என்னவெனப் புரியாமலும் எழுதிக்கொண்டிருந்த காலத்தில், நண்பரிடம் படிமம் குறித்து கேட்டு விளக்கம் பெறச் சொல்லி எனை என்றும் ஊக்குவிக்கும் தோழி Devi Rajan கூறினார். அவ்வாறு நண்பரிடம் கேட்டதற்கு அவர் நிறைய குறிப்புகளும், விளக்கமும் தந்தார். (அப்படியும் நான் கற்றுக்கொள்ளவில்லையென்பது வேறு கதை)
அவரும், தோழி ரேவா பக்கங்களும்தான் எனக்கு கவிதையெனில் தேவையற்ற சொற்கள் இருக்கக்கூடாது,. சொல்லவருவதை Crisp ஆக சொல்லவேண்டுமென சொல்லிக்கொடுத்தார்கள்
நண்பருடைய படைப்புகள் குறித்து சொல்ல எனக்கு தகுதி இல்லையென நான் நினைக்கிறேன். குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவருடைய எழுத்தை நான் எவ்விதம் கருத்தாய்வில் சொல்ல?
மிக அற்புதமானவை. சொல்ல வரும் கருத்தில் மிகுந்த ஆழமும் நுணுக்கமும் நிறைந்திருக்கும். சமூக உணர்வு மிகுந்த ஆக்கங்களும், இயல்பான நகைச்சுவை இழையோடும் படைப்புகளும் மிகுந்திருக்கும்.
பறவைகளின் அலகுகளை மாலையாக்கி
அணிந்து இருந்தான் ஒருவன்..
ஒவ்வொரு அலகும் ஒவ்வொரு விதம்...
அங்குலி மாலா கேள்விப் பட்டிருக்கிறேன்
அலகு மாலா வை இப்போது தான் பார்க்கிறேன்.
பறவைகளின் பால் எனது விருப்பம் ஒரு
பசுஞ்செடியின் நுனியில் இருந்து மலரும் தளிர்
போல துளிர்த்தது...
தயக்கம் தவிர்த்து அருகே சென்று
மெல்ல ஒவ்வொரு அலகாக விரல் தடவி பார்க்கிறேன்...
இனம் தெரியா பறவையின் அலகு ஒன்று உயிர் பெற்று
என் விரலை கவ்விக் கொண்டது...
வலியில் துடித்தேன்..
ஓ வென அலறி
கனவு கலைந்து எழுந்தேன்...
கை விரலில் சிறிய காயம்...
இதே போல தான் அவளும் கடிப்பாள்..
ஆசை துளிர்க்கும் போதெல்லாம்...
எனும் கவிதையிலும்
மனம்
தூக்கி எறிந்தாய்...
சத்தம் இல்லாமல் உடைந்தது
பல நூறு துண்டுகளாய்.
அத்தனையிலும் நீ....
படிக்கத் தகுந்த
மனிதர்கள் கிடைக்காத போது
புத்தகங்களை நாடுகிறேன்...
எனும் கவிதைகளிலும் இவரது அழகிய உணர்வினை காணலாம்.
சமீப காலமாக தமிழ் இலக்கியங்களில் இருந்து பல பாடல்களை எடுத்து விளக்கத்துடன் பதிவிட்டு வருகிறார்.
ஒரு ஞாயிறு அன்று மீன் வாங்கச் சென்ற நிகழ்வினைக்கொண்டு அழகிய குறுந்தொகைப் பாடலொன்றினுக்கு விளக்கம் தருகிறார் இப்பதிவி;. வாசித்துப் பாருங்கள்.
https://www.facebook.com/sundara.pandian.…/…/771231789662786
எனது குரு ஸ்தானத்திலிருக்கும் இவரின் உன்னத படைப்புகளை நீங்களும் படித்து பயனுறுங்கள்.

வாழ்த்தி வணங்குகிறேன். உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் வளர்ந்து சிறக்கட்டும்.

நால்வர்


அந்த நான்கு நண்பர்களும் ஒன்றிணைந்து தொழில் புனைய ஆசைபட்டனர். அவர்கள் நால்வருக்கும் வாகனம் ஓட்டத் தெரியும் என்பதாலும் உரிமம் உள்ளதாலும் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு மகிழுந்து வாங்கி அதை வாடகைக்கு ஓட்டி பணம் உண்டாக்க முடிவு செய்து ஒரு புதிய மகிழுந்து வாங்கி ஓட்டிக்கொண்டு புகைவண்டி நிலையம் முன்பாக தினமும் காலையில் கொண்டு நிறுத்தி வாடிக்கையாளர்கள் வருவார்களென எதிர் பார்க்க ஆரம்பித்தனர்.
யாரும் வாடிக்கையாளர்கள் அவ்வண்டியை அணுகவில்லை. சிறிது நாட்கள் கழித்து பேருந்து நிலையம் முன்பாக நிறுத்தத் தொடங்கினார்கள். அங்கும் சில நாட்கள் இருந்தும் யாரும் வாடிக்கையாளர்கள் வரவில்லை. அடுத்து கடைத்தெரு முன்பாக, பின்னர் சினிமா தியேட்டர் முன்பாக என ஒவ்வொரு இடமாக கொண்டு நிறுத்திப் பார்த்து இனி இது நமக்கு ஒத்துவராது என நினைத்தனர்.

ஒரு நாள் தங்கள் நண்பர் ஒருவரிடம் இந்த கவலையை சொல்லிக்கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலையில் அவர்களது மகிழுந்து நிறுத்தப்பட்டு வாடிக்கையாளரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நண்பர்களை கண்ட புதிய நண்பர் நால்வரின் அடுத்து வந்து, முதலில் நால்வரும் மகிழுந்தின் உள் அமர்ந்து காத்திருப்பதை விடுங்கள். பார்ப்பவர்களுக்கு மகிழுந்தில் வாடிக்கையாளர்கள் உள்ளதாக எண்ணமே வரும். அதனால் யாருமே உங்கள் மகிழுந்தை அணுக மாட்டார்களென சொன்னார்.

நினைவுப் பக்கங்கள்

நினைவுப் பக்கங்களில் நிறைந்தபின்
அடிக்கோடிடுதல் அவசியமில்லை

உணவை வீணாக்காதீர்மஞ்சள் காவியடித்து
மஞ்சம் புல்லால் கூரை வேயப்பட்டிருந்த
அவ்வகன்ற கிராமத்து வீட்டின்
கொல்லைப் புறத்தில்
வளைந்த மண் குலுமைகளிரெண்டில்
நிறைக்கப்பட்ட நெல்மணிகள் போக

காது வைத்த பெரிய அண்டாக்கள் நான்கிலும்
புகை மூட்டத்திற்கிடையில்
மாய்ந்து மாய்ந்து அவிந்து கொண்டிருக்க
விறகடுப்பின் வெக்கையில்
வெந்து கொண்டிருந்தனர்
நெல்லோடு அம்மாச்சியும் அம்மாவும்

பள்ளியிறுதி விடுமுறைக்கு போயிருந்த என்னை
முற்றத்துத் தரையில் கோரைப்பாயில்
மாமன்மகன் மோகனுடன்
தூங்கச் செய்திருந்தனர்

அவிந்த நெல்லின் வாசம்
நாசியைத் துளைக்க
நெடி தாளாது
உறக்கம் கலைந்து
மேல் கிடந்தவனின் காலை விலக்கி
பின்புறம் ஓடிப் பார்க்க

சூழ்ந்திருந்த புகைமண்டலத்தின் நடுவே
இருவரும் இருப்பதைக் கண்டு
தூக்கக் கலக்கத்திலிருந்த நான்
திகைத்த நொடி
போய்த் தூங்குடாக் குட்டி
என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு
மீண்டும் பாயில் உருண்டேன்

காலம் பல கடந்தாயிற்று
நாகரீகம் மாற்றிப் போட்டதில்
நகரத்தில் இன்று....

அடிக்கடி நினைவுகளில்
கிராமப் பெண்களின் கஷ்டநஷ்டங்கள்
கைகளில் சோறெடுக்கும் போதெல்லாம்
ஒவ்வொரு பருக்கைச் சோறும்
உணவை வீணாக்காதீர்களென
சொல்லிக் கொண்டே தான் இருக்கிறதின்றும்....

குயலவன் அன்றில்
அன்புச் சகோதரரான இவர் சற்றேறக்குறைய இரு வருடங்களாக எனது நட்பில் இருக்கிறார்.
சரவணா ஹரிதான் எனக்கு இவரை அறிமுகம் செய்தார்.
அன்றே இவரது அநாயாசமான எழுத்து நடையில் மயங்கித்தான் போனேன். கிராமத்து வாழ்க்கையை கண்முன்னே விரிய வைத்து எளிமையான மொழியில் கனமான நிகழ்வுகளை சொல்லிச் செல்வார்.
தனது தாத்தா, அக்கா, அம்மா என்று உணர்வில் என்றும் வாழும் உறவுகளுடனான இவரது வாழ்வை கவிதை வரிகளில் விவரிக்கும்போது நமக்கும் அதுபோன்ற அம்மா, அக்கா, தாத்தா வேண்டுமெனும் தவிப்பு மேலிடுவதை தவிர்க்கமுடிவதில்லை
"காய்ச்சலாவென என் கழுத்தில்
நான் கைவைத்துப் பார்க்கும்போது
அவை அம்மாவின்
கைகளாயிருந்தது.!!
என்னும் கவிதையில் அம்மாவின் கையை நமக்கும் ஒரு நிமிடம் உணரச் செய்கிறார்.
“என்ன எழுதி என்ன பிரயோஜனம்?
ஒருநாள் கூட அம்மாவின்
கை பிடித்து உள்ளங்கை
பார்த்ததில்லையே.!!”
என்னும் கவிதையில் இவர் தரும் ஏக்கவுணர்விற்கு ஈடு இல்லையே.
"நீச்சத்தண்ணியில குனிந்து
முகம் பார்க்கிறாள்.
பொட்டில்லா நெற்றி நோக்கி
நகருகிறது
மிதக்கும் புளியம்இலை.!!"
இக்கவிதையில் நான்கு வரிகளில் என்ன ஒரு அநாயாசமாக கைம்பெண்ணின் அவலத்தையும் அதற்கு இயற்கையும் இசைவதில்லையெனும் மாண்பையும் விவரிக்கின்றார்.
"அக்கா மழைப்பைத்தியம்.
மழைன்னாலே அவளுக்கு கருவாடு மொச்சக்கொட்டை குழம்பு
வறுத்த புளியங்கொட்டை
மழைன்னாலே அவளுக்கு
மழை நின்ற பின்னான புளியமரத்து மழை.
தாழ்வாரத்துச்சாரலில் கால்நீட்டி நனைக்கும் கொலுசு.
குளிருக்கு அப்பாவின் சாணிப்பச்சை சட்டை.
மழைன்னாலே பேய்க்கதை
மழைன்னாலே இருக்கும் ஒற்றைக்கம்பளியில் என்னை அணைத்துக்கொண்டு அம்மாவாகத் தூங்குவது.
மழைன்னாலே கடைசியா பார்த்த அம்மா முகம்.
சேகர் மச்சான் கல்யாணம்.
எனக்கு மழைன்னாலே அக்கா கடைசியா சிரிச்சது.
மழைன்னாலே அக்கா.!!"
இக்கவிதையினை வாசிக்கும்போது எனக்கு சகோதர சகோதரிகள் இல்லையெனும் ஆழ்மன ஏக்கம் வெடித்து பீறிட்டுக் கிளம்புவதை தவிர்க்க இயலவில்லை.
“நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்
அவள் கொலுசின் முத்துகள் நான்கு
உதிர்ந்து போயிருக்கின்றன.
கண்ணாடியில் கூட ஒட்ட பசையற்று
அவள் பொட்டுகள் உதிர்கின்றன.
அவள் செருப்பின் உயரம்
குறைந்து கொண்டே வருகிறது.
அவள் சீப்பில் வெள்ளிக்கம்பிகள்
சிக்கத் தொடங்கியிருக்கின்றன.
மாத பட்ஜெட்டிலிருந்து பூக்கள்
காணாமல் போய்விட்டன.
இந்தக் கவனிப்பின்மையைப் பற்றிய
வருத்தங்கள் கூட இல்லாது போய்விட்டன..
ஆனால் நீங்கள் கவனிக்கிறீர்கள்
கொதிக்கும் குழம்பில் ரெண்டுகல் உப்பு
கூடியிருப்பதை.!!
இக்கவிதையை வாசித்து என்ன சொல்லப் போகிறீர்கள்? நான் பேச்சற்று பல நிமிடத்துளிகள் தவித்தேன். வாழ்க்கையை, அதில் ஒரு பெண்ணின் வலியை எவ்வளவு அழகாக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.
இன்னும் எண்ணற்ற கவிதைகள் இவரது பக்கம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. வாசியுங்கள். வாசித்து வாழ்த்துங்கள் இம் மாபெரும் கவிஞனை.

அன்புச் சகோதரருக்கு ஒரு வேண்டுகோள். புத்தகம் படிக்கவும் சினிமாக்கள் பார்க்கவும் நேரம் அதிகமாக செலவு செய்யவேண்டியதுதான். அதற்காக உங்கள் இரசிகர்கள் எங்களை தவிக்கவைக்காதீர்கள். மேலும் மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.