Sunday, 29 September 2013

மலர் பொதிகை


விழிக் கதவின் வழி திறந்து
மலர் பொதிகை எனில் கலந்து
அடி பிறழா கவிதை என
அழகுறவே முன் வருவாள்.

உன்னில் தோய்ந்திடவா?


பண்ணின் சுகமனைத்தும்
விண்ணில் தெளித்திடவா?
என்னில் உனைச் சுமந்து
உன்னில் தோய்ந்திடவா?

நியாயங்கள்

புகலிடம் தேடாத
பூக்களாய் வாழ்ந்திடலாம்,
போர்க்களம் காணாத
மீன்களாய் நீந்திடலாம்,
காரிருள் கண்டாலும்
கண்ணிமை திறன் பெறலாம்.
யாரிடம் சென்றாலும்
என் நிலை நான் பெறலாம்,

நீர் நிலை மீதேறி
நடந்திடும் நாள் வரலாம்
ஓர் நிலை இல்லாது
உள்ளமும் தடம் விடலாம்
சேர் முறை சீராக
இல்லாத வாழ் பெறலாம்
நேர் நிலை நான் கொள்ள
நியாயங்கள் மீள் பெறலாம்!

முள்

மிடறுகையில் தொண்டைக்குள்
முள்ளாய் சில நினைவுகள்,
எடுத்துதிர்க்கக் கைவைத்தேன்,
எட்டவில்லை, ஆழத்தில்,
என்றுமினி அங்கேயே
இருந்துவிடு தவறில்லை.
எத்தனையோ உறுத்தல்களில்
இதுவும் ஒன்றெனக் கொள்வேன்..!

காதலாய்

பேரன்பு பலவாறாய் பெருகுது,
பாசமாயும், நேசமாயும்,
பெண்ணே உனைக் கண்டால் மட்டும்,
காதலாய்....!

உயிரணையும்


வாழ்க்கையின் வசந்தங்களில்
வரும் காதல்,
கோடையிலும், குளிரிலும்,
குலையாமலிருந்தாலதுவே
உயிரணையும்...

வண்ணத்துப்பூச்சிஎன் வீட்டுக் குளியலரையிலோர்
வண்ணத்துப்பூச்சி,
எப்படி வந்தது?
இறக்கையடித்து
வெளியேறத் துடித்து
அங்குமிங்கும் அலைமோதி
அங்கோர் மூலையில்
அடங்கியது.
பிடித்து வெளியில்விட
யத்தனித்தேன்.

சிக்காமல் மீண்டும்
சிறகடித்து
சுவர்களில் மோதி மோதி
அடங்கியது.
குணவாசல் சாளரத்தின்
கதிரொளியை கண்ட பின்பு,
எப்படியேனும்
வெளியேறும்,
என் எண்ணங்களாய்...!

காத்திருத்தல்


கனவுகளின் மாளிகையில்
காத்திருத்தல் சுகமே!
நித்தமும் நடக்கும்
நாடகமாய்
நீளாதவரை!

வாசம்


தொடுகையில் பாசம் பொங்கும்,
தூய உன் வாசம் எங்கும்,
மட்டிலா மகிழ்ச்சி என்னுள்
மாலையுன் மடியிலென்றே!

Saturday, 28 September 2013

தேவதை
தேவதை கூந்தல் வாசம்
தேனுண்ணும் வண்டு மயங்கும்.
நானதன் மென்மை கண்டு
தீண்டவே தேகம் சிலிர்க்கும்.
பாரதி பாடல் கண்ட 
பெண்ணென மெல்லத் துலங்கும்.
ஈரடி குறளில் சொன்ன
அத்துணை குணமும் தஞ்சம்.

இருவிழி குளுமை காண
இதயமும் மெல்ல ஏங்கும்.
ஒருவிரல் தீண்டும் போதே
உள்ளத்தில் மின்னல் பூக்கும்.
உருகிய பாகைக் கொண்ட
உடலெனை கண்டு நோகும்.
பருகிட வந்த என்னை
பார்த்ததும் பாதம் மீளும்.

உதடுகள் சொல்லும் சேதி
உணர்ந்திட உள்ளம் நாடும்.
கதவினில் ஒளிந்து சொல்லும்
கண்களின் கவிதை வேண்டும்.
எனதுயிர் கொண்ட உந்தன்
இமைவழி துயில வேண்டும்.
என்மன வானில் வாழும்
இனியவள் நேச மென்றும்!

உன்னைக் காண


இன்னுமென் கவிதைகளில்
உன்னை காண்பதற்கு
எண்ணம் உண்டுனக்கு
என்றே நானுணர்ந்தேன்.

காதலின் மகத்துவம்

உன் தேவை நான் உணர்வதிலும்
என் ரசனை நீ புரிவதிலும்
காதலின் மகத்துவம்
வாழ்கிறது!

பாசம்

நண்பன் ராஜேஷ் சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்து 3 மாதங்கள் ஆயின. நல்ல சம்பளம். நல்ல வேலையும் கூட, எல்லாம் சுகமாக போய் கொண்டிருந்தது.
ஒரு நாள் அவன் கைப்பேசியில் அழைத்த அவனது தந்தை, பதட்டத்துடன் சொன்னார், “அம்மாவுக்கு ரொம்ப ஸீரியஸ்.ஆசுபத்திரியில அட்மிட் பண்ணியிருக்கோம்”
அவ்வளவுதான், இவன் கைப்பேசியை கீழே தவற விட்டான். கண்ணில் நீர் ஆறாகப் பெருகியது. அவ்வளவு பாசம் அம்மா மேல். உடனே அவனது மேனேஜருக்கு தொல்லைபேசி, விடுப்பு எடுத்து அடுத்த விமானத்தில் பறந்து சென்று அம்மாவின் அருகில் இருந்து 15 நாட்கள் கவனித்துக் கொண்டிருந்து குணமானதும் மீண்டும் வேலைக்கு போனான்.
அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு முறை அம்மாவுக்கு ஸீரியஸ் ஆக, இம்முறை தயங்கி தயங்கி விடுமுறை வாங்கி ஓடி வந்தான் அம்மாவைக் காண.
அடுத்த மாதம் மீண்டும் அம்மாவுக்கு ஸீரியஸ். என்ன செய்வான்?
அதே அம்மா. அதே பாசம். ஆனால் இப்போது......?
எப்படியோ விடுமுறை எடுத்து வந்தான். பார்த்து சென்றான். நல்ல வேலை, நல்ல சம்பளம், விடவும் மனசில்லை.
அடுத்த முறையும் அம்மாவுக்கு ஒரு மாதத்தில் ஸீரியஸ் நிலைமை வந்தால் என்ன செய்வான்?

Thursday, 26 September 2013

ஆழத்தில்
வெளிவர இயலா
ஏக்கத்தில்
எத்தனையோ
விடையற்ற கேள்விகள்,
புயல் காற்றில் அகப்பட்ட
பூஞ்சிறகாய்
அங்குமிங்கும் ஆடி ஆடி,
அவ்வப்போது
தலைதூக்க தலைப்பட்டு,
வெட்கத்தில்
மீண்டும் மீண்டும்
ஆழத்தில்..
ஆழத்தில்....
என்றேனும் வெளி வருமா?

நேரம்சுருக்கமாக நீ
சொல்லிப்போவதை
விளங்கிக் கொள்வதிலேயே
என் நேரமெல்லாம் கழிகிறது

கவிபேசும் விழி
கருவிழியின் மொழியுதிரும் கவிதைகளும்

கனியமுதத் தேன்குடித்த இதழ்மொழியும்.
நறுமண தெ ன்றல்தவழும் பூமணமும்,
நானிருக்கும் திசைத்தேடி தவழ்ந்து வரும்.வீணையுன் விரல்தேடி வாடுதடி,
வீதியுலா பூங்காற்றும் நாடுதடி,
மானின் மருள்விழிகூட நாணுதடி
மங்கையுன் கவிபேசும் விழிகளடி!

சேலைக்குள் சோலையெனும் சித்திரமே.
செம்பவள தேன்குழைத்த பொற்சரமே,
நாளையென் வாழ்வினிக்கும் பூமணமே!
நங்கையுன் விரல்கோர்த்து வாழ்ந்திடவே!

சங்கடம்

மகிழ்வை மட்டும்
கொடுக்கும் முயற்சியில்
சில நேரம்
சங்கடங்கள்
முகிழ்வதுண்டு.

சொர்க்கம்

சொர்க்கம் என்னவென்று
சற்றும் அறிந்ததில்லை- உன்
சொந்தம் வந்த பின்பு –வேறு
சொர்க்கம் ஏதுமில்லை.

இனிமை
உள்ளத்து உரத்த குரலுக்கும்
உதட்டின் மௌனத்துக்குமிடையில்தான்
வாழ்வின் இனிமைகள்
உறங்கிக் கொண்டிருக்கின்றன!

புரியாத தேடல்

பள்ளம் பறித்து
மணற்பரப்பின் சூட்டை
உடல் நிறைத்து
மெல்லிய ஓலமிட்டுக் கிடந்ததந்த
தெரு நாய்

செய்தொழில் ஒன்றுமில்லை,
சேவகம் கூட இல்லை,
வேளை தவறாமல்
வரும் சோறு
தெருக் குப்பையில்.

உண்ட உடல் சோர
அங்குமிங்கும் ஓடும்.
பிண்டமது கூட
வரும் துணையை நாடும்.

என்றாவது ஓர் நாள்
எப்படியாவது இறக்கும்.
மூப்பு வந்தோ,
சீக்கு வந்தோ?
வாகனம் இடித்தோ,
வகையறியா வாழ்க்கை.

முகவரியின்றி
வரைமுறையின்றி
வாழ்க்கையொன்றை வாழ்ந்து
வெறுதே போகும்.

இறுதியில்
என் வாழ்க்கைக்குமிங்கே
என்னதான் உண்டு?
பிறந்து,
சிலகாலம் இருந்து,
பின்னர் இறந்து,
இறுதியிலென்ன?

மற்றவர் மனதிலென்
முகவரி பதித்து,
அவரும் இறந்த பின்
கிடைப்பதென்ன?
புரியாத தேடலில்
மீண்டும் நான்...

Tuesday, 24 September 2013

நமக்கென்று ஓருலகு


இழந்தவை
இழந்தவையாக போகட்டும்,
இருப்பவையேனும்
நல்விதையாய் மாறட்டும்.
வளர்சிதையில் மாற்றங்கள்
உண்டெனினும்
வான்முழுதும் எண்ணத்தின்
வண்ணங்கள் பரவட்டும்!
மனமொத்த நட்புக்கு
என்ன பெயர்?
மறுபடியும் தெளிவில்லா
கேள்விகளா?
வேண்டாம், தவிர்ப்போம்,

பொழுதுகளை புதுப்பித்து
பெயரில்லா உறவு நிலை
கண்டெடுத்து
நமக்கென்று ஓருலகை
உருவாக்கி
நாம் கண்ட கனவுலகில்
கைகோர்ப்போம் வா!