Monday 30 December 2013

ஓரப்பார்வை

















மழைத்துளிசுமந்த மாலைநேரத்தென்றலும்
மனச்சுமையைத்தணிக்கவியலாமல் போகவே
உன் விழிநிலவின் ஒரப்பார்வையில்

உள்ளங்குளிர்ந்துதான் போவதெங்ஙனம்,,,?

ஏற்பாயா?









உனக்குமெனக்குமிடையே
உறுத்தலொன்றுமிலையே,
பின்னெதற்கு
பிரிவென்னும்பாரந்தூக்கி
புதைமணலில் சிக்குண்டேன் நான் !

விட்டுக்கொடுத்தலின்றி நான்
விலகிப்போனேனா?
உன் தாய்மையன்பிடம்
ஈரம்  உறையக்கண்டும்
நான் தூரம் சென்றேனோ,, ??

சாமரம்வீசியுனை
வரவேற்கும்வேளையிலே 
சோம்பலைத்தரித்து நான்
வெந்தணல் புகுந்தேனோ?

உன் வேர்ப்பாதங்களில் வெந்நீர்சிதற
என்கண்ணீர் காரணமானதேனோ ??

அனைத்தும் மாயையென்று
ஆகாயத்தில் பறந்து
சுவாசிக்கவழியின்றி
மூச்சடைத்தவொரு மாலையில்

அன்பு நூலொன்றைத்தரையிறக்கி
நிதர்சனக்காட்சிகளில்
நீந்தச்செய்தவுனைக்காண

என் ஆணவப்பாறைத்தகர்த்து
நட்புத்தென்றலில் நீள்மூச்செடுத்து

உன்மடியுறங்க வருகின்றயெனையேற்பாயா..?

கொண்டுபோ



மையெடுத்து எழுதாத
கவிதைகளின் மேற்பரப்பில்
சிதறிய எழுத்துக்களை 
வாரிக் கொண்டுபோ!
பின்னாளின் நிலாப்பொழுதொன்றில்
உன்னிதழ் வழியே
பருகிக் கொள்கிறேன்..!

“அம்மானா சும்மா இல்லடா!”

அனிலின் அம்மா சென்னையில் வீடெடுத்து வசித்துக் கொண்டிருக்கும் தனது மகனைக் காண சென்னை வந்திறங்கினார். அனில் அம்மாவை பஸ் ஸ்டாண்டில் எதிர் கொண்டழைத்து காரில் ஏற்றி வீடடையும் முன்பே எச்சில் கூட்டி விழுங்கி எப்படியோ மகதாவும் தன்னோடு வீட்டில் குடியிருப்பதை சொல்லி விட்டான்.
மகதாவும் தானும் ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பதாகச் சொன்ன அனில், மகதா கோழிக்கோடிலிருந்து இங்கு வந்து வீடில்லாமல் அலைந்த்தால் தான் தனது வீட்டில் தனியே இருப்பதற்குத் துணையாகவும், வீட்டின் வாடகையில் பங்கெடுக்கும் தோழியாகவும் இருப்பதற்காக குடி வைத்த்தாகக் கூறி மகதாவை அம்மாவிற்கு அறிமுகப் படுத்தினான்.
மகதாவும் அழகுதான். அனிலின் அம்மாவிடம் அவ்வளவு அன்பாகவும், மரியாதையாகவும் பழகினாள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காக வந்த அனிலின் அம்மாவிற்கு மகதாவைப் பிடித்துப்போக, அனிலிடம், “ஏய், அந்த பொண்ணு ரொம்ப நல்லா இருக்குடா, அதையே உனக்கு பேசிடலாமா?” என்று வினவினாள்.
அனில், “அய்யோ அம்மா, நாங்கள் அவ்வாறு பழகவில்லை” என்று கூறி அம்மாவின் வாயை அடைத்து விட்டான்.
இரு படுக்கை அறை கொண்ட அந்த வீட்டில், அம்மாவும், மகதாவும் ஒரு அறையிலும், அனில் ஒரு அறையிலும் படுத்து உறங்கினர்.
திங்கட்கிழமை காலை அனிலின் அம்மா ஊருக்கு கிளம்ப, அனில் அழைத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றிவிட்டு அப்படியே வேலைக்குப் போய்விட்டான்.
மாலை வீட்டிற்கு வந்து அவனும் மகதாவும் வெளியில் சென்று உணவருந்திவிட்டு வரும்போது, அனில் மகதாவிடம் அம்மா கூறியதை சொல்லி, இன்னும் சமயம் வரட்டும், அனுமதி பெறலாமெனக் கூறினான்.
செவ்வாய்கிழமை மாலை வீட்டிற்கு வந்தபோது மகதா பரபரப்பாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள். என்னவென்று கேட்ட்தற்கு, தனது வெள்ளித்தட்டை இரு நாட்களாக்க் காணவில்லையென கூறினாள்.
இருவரும் வீடு முழுக்க தேடி பார்த்த பின்னர் மகதா அனிலிடம், “நான் சொல்வதை தவறாக நினைக்காதே, எதற்கும் அம்மாவிடம் ஒரு வார்த்தை கேள். அவர் மறந்துபோய் எங்கும் எடுத்து வைத்திருக்கலாம். அல்லது யாருக்கேனும் எடுத்துக் கொடுத்திருக்கலாம்” எனக் கூற, தயக்கத்துடன் அலைபேசியெடுத்து அம்மாவை அழைத்து, வெள்ளித்தட்டைக் காணவில்லை எனக் கூறியதுமே அம்மா சிரித்துக் கொண்டே, “நீங்கள் இருவரும் அடுத்த முகூர்த்த்தில் திருமணம் செய்யவேண்டும். போய் மகதாவின் அறையில், அவளின் படுக்கை விரிப்பின் கீழ் படுக்கையில் பார்” எனக் கூறி வைத்துவிட்டார்.
“அம்மானா சும்மா இல்லடா!”

வந்திணைவாள்



நுதலில் விழுந்த ஓரிழையை விலக்கி
நெளியுமிரு புருவமதை உயர்த்தி,
இதழ் வழிய புன்னகையை புகுத்தி
இயம்பினள் தன் கருவிழியை நகர்த்தி!

வண்டுகளை ஒளி மழையில் பொருத்தி
வெள்ளமென காதலிசை நிகழ்த்தி
பண்டு நிகழ் காமனுரை பரத்தி
வந்திணைவாள் என்னுயிரை மலர்த்தி!

எண்ணப் பறவைகள்



கருப்பும் வெளுப்புமாய்
எண்ணப் பறவைகள்
மனச் சரணாலயத்தில்
செயற்கை வண்ணம் பூசப்பட்டு
விடியற்காலை வானத்தை நிறைத்திருக்க
பெருமழையில்
கரைந்துருகி கலைந்தன!

வாழ்வியல்

வாழ்வியல்
நேற்று ஒரு பூச்செடிகள் விற்பனை செய்யும் இட்த்திற்குச் சென்றிருந்தேன். ஆயிரக் கணக்கில் பூச்செடிகள் விற்பனைக்கு இருந்தன. எவ்வளவு ஆர்வம் இருந்திருந்தால் இவ்வளவு செடிகளை சேகரித்து ஒரு தாய்போல் பாதுகாத்து விற்பனை செய்துகொண்டிருப்பார்?
ஆனால், தோட்டத்தில் வியாபாரத்திற்காக இல்லாமல் இச்செடிகளை வளர்க்கும்போது இருந்த ஆர்வமும், மகிழ்ச்சியும் இப்போது அவரிடத்தில் இருக்குமா? சந்தேகம்தான்.
வியாபாரமாகிவிட்ட பொழுதுகளில், வருவோரையும், போவோரையும் பார்க்கவும், பணம் வாங்கிக் கொடுத்து, பட்டுவாடா செய்யவுமே அவருக்கு நேரமிருக்கும்.
தன் குழந்தைகள் போல் நேசித்த பூச்செடிகளிடம் கொஞ்ச அவருக்கு இப்போது நேரமிருக்குமா?
வாழ்க்கையும் அப்படித்தானோ?
ரசித்து ருசித்து கழிய வேண்டிய காலங்கள், வரவு செலவு பார்க்கப்பட்டு, வியாபார வாழ்க்கையாகி, பொன்னான நேரத்தை பொருளுக்கும், பகட்டுக்கும் விற்றுக் கொண்டிருக்கிறோம்.
இந்த வாழ்க்கையை விற்று பெருவது ருசிக்கிறதா?

விதைநெல்



விதைநெல்லுக்குக்காவலிருக்கும் சிறுமி... 
விரட்டப்படும்காகம் 
மீண்டும்மீண்டும்
அன்பெனுமுணவிற்கு அலைபாய்கிறது 
விதையென்றறியாது..!

அந்தரங்கத் தோழி

ஆற்றின் மடியில்
அலங்கோலமாய் விழுந்து,
சுருண்ட கேசங்களிலிருந்து
விழுந்த மலரிதழில்
ஒன்றெடுத்து உற்றுப் பார்த்தபடி,
கடந்த இரவின்
கவிதைகளின் சங்கமத்தில்
காதோரத்தில் கிசுகிசுத்த
அந்தரங்கச் செய்தியை
மறு நாள் வந்து
மீட்டெடுப்பானாவென்று
கேட்டு, பின் கவலையுடன்
களைந்தாளந்த
அந்தரங்கத் தோழி!

நீச்சல்

அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் சிறார்களுக்கு நீச்சல் கற்றுத்தரும் முறையில் வித்தியாசம் உள்ளதாம். அமெரிக்காவில் சிறுவனை நீச்சல் குளத்தில் இறக்கிவிடும்போது எல்லா உபகரணங்களும் கொடுத்து, பாதுகாப்பாக இறக்கி முறைப்படி சொல்லி கொடுப்பார்களாம்.
ஆனால், ரஷ்யாவில், சிறுவர்களை நீச்சல் குளத்தில் கொண்டு சென்று தொப்பென்று போட்டு விடுவார்களாம். அந்த குழந்தை எப்படியாவது தத்தித் தவழ்ந்து வெளியே வருமாம். அவ்வாறாக பலமுறை செய்யும்போது நீச்சல் கற்றுக் கொள்ளுமாம்.
எப்படியாகினும் நீச்சல் கற்றுவர வழிமுறை மாறினும், சென்றடையும் இடம் ஒன்றே!
நாமும் பலவேளைகளில் இப்படித்தான். படிப்படியாகக் கற்று பேச்சாளனாக, பாடகனாக ஆவதும் உண்டு. எதிர்பாராத விதமாய் அந்த சூழலில் தள்ளப்பட்டு உந்தி மேலே வருவதும் உண்டு!

நம் காதல்















தென்றலை சூடிய அந்திமாலை,
தென்னஞ்சோலையை சூடிய நிலா,
அருந்த தேநீர் தந்த உன்னை
அருகினிலிழுத்து
நெஞ்சோடரவணைத்து,
பளிங்கினில் முகமிழைத்து,
தரையினில் தவழ்ந்தேன்.

ஓலைகள் விலக்கி
ஒளிமழைபொழிந்த நிலவைக்காட்டி
அழகே உன்போலென்றேன்.
இல்லை, எனைவிட என்றாய்,
மறுதலித்தேன்.
உனைவிட இவ்வுலகில்
உயர்ந்த அழகில்
ஒன்றுமில்லையடி என்றேன்.

முகம் மலர்ந்து,
முறுவலித்து,
இதழ் சுழித்து,
என்னுளிணைந்து சொன்னாய்.
“நம் காதல்” எனைவிட அழகென்று!

தேநீர்




தேநீரருந்த தொடங்கிய
நுனிநாக்கில் தொக்கி நின்றசுவை
இறுதியில் கூடியதால்
ஏங்கும் மனம்
இனியொரு கோப்பைக்காய்..!

கனவுப் பார்வை





தொலைவில் நீயிருக்க,
மனமோ உன் நினைவுகளில் திளைக்க,
வருந்தும் பொழுதுகளையும்
வண்ணமாய் காணுதென்
கனவுப் பார்வை!

பொய்யுலகம்

















பிடிவாதமாய்
பிடித்து இழுத்தாலும்
புறந்தள்ளிப்போகும்
மனமதில் அமிழ்ந்து
தொலையும் வரை!

மறுமுனைக் கயிரை
யாரிடமும் கொடுக்காமல்
ஆசனவாய் அடைத்து
அவதியுற்றாலும்
கசப்பை இனிப்பாய் கருதி
விழுங்கும்!


நிலவறையில் புகுந்து
வியர்க்கும் பொழுதுகளாய்
நிம்மதி இழந்த
நிகழ்வுகளின் விரசங்களை
ருசிக்க ஏங்கி
நித்தமும் துடிக்கும்!


நேரச்சுமைகளை மறந்து,
வாழ்வின் இனிமைகள் துறந்து,
கவலைகளை மறப்பதாய்
பொய்யுலகத்தில் சுழன்று
கவலைகளை சுமக்க
காட்சியொளி பெட்டியினிடத்தில்
கன்னத்தில் கையும்,
கண்களில் நீருமாய்,
கன்னியர் பலரும் குழுமியபடி
என்றும் என்றென்றும்...!

தோற்க



எனில் உனைத் தோற்க
நீ துடிக்க,
உனில் எனைத் தோற்க
நான் துடிக்க,
ஏனோ வாழ்வில்
இங்கு மட்டுமே
தோற்பது சுகமாய்...!

ஏனி(ணி)ப்படி?

ஏனி(ணி)ப்படி?

உயிர் விந்தைக் கொடுத்து
உருவாக்கியவர்,
உள்ளத்துச் சிந்தனைகளை
ஒவ்வொன்றாய் செதுக்கியவர்,
உலக ஞானத்தை அவனுள்
புகுத்தியவர்,
முதல் கல்வி கொடுத்த
மாண்புமிகு ஆசான்,
அன்பையும், பண்பையும்
அதனுடன் வீரத்தையும்
கலந்து விதைத்த
அஞ்சா நெஞ்சன்.
தன் மகன் உயர்வைக் கண்டு
தான் உயர்ந்ததாய் எண்ணி
தற்பெருமைக் கொண்ட
தந்தையென்ற பேரில் வாழ்ந்த
பாசக்காரர்.
வாழ்வின் உச்சங்களை எட்ட
உயிர்த்துளிகளைச் சிந்தி
உழைத்து அவனை உயர்த்திட்ட
தன்னிலை மாறாத ஏணிப்படி!
அந்திமத்தில் தன் மகனின்
அரவணைப்பையிழந்து
மருமகளின் அம்புகளால் சிதைக்கப்பட்டு
முதியோர் இல்லங்களில்
உதிர்ந்த பூக்களில் ஒன்றாய்
ஏனிப்படி?

சிறு படகின் விளிம்பில் நான்..!

முகமுல்லைப்பூ விகசித்து என்னுள்
மகிழ்விதைகளைத் தூவாதோ?
குளிர்தென்றலைச் சுமந்து காதல் 
தேனம்புகளை உள்ளில் வீசாதோ?
ஓரவிழியால் உயிர்கவ்வி உணர்வுகளில் 
சிநேகத் தீயாய் பரவாதோ?
பாரங்களைச் சுமந்த
பாத நழுவல் பயணங்களில்
விரல் பாலமிட விரைந்து வாராதோ?
வாழ்வின் சுவைக் கூட்டி
வெண்ணிலவின் தண்ணொளியாய்
விரசங்களைக் கடந்த காதல்
வரமென்று சொல்லித் தாராதோ?
நொடித்தபடி எனைக் கடந்த
நிமிடங்களின் காவியத்தை
மீண்டும் வாசிக்கத் தாராதோ?
ஏங்கித் தவிக்கும் மனதில்
இன்பத் தேன் தமிழெடுத்து
தூய அன்பின் பொருளைக் கூறாதோ?
அன்பெனும் ஆழ்கடல் தவிர்த்து
அலையடித்து ஒதுங்கிய
சிறு படகின் விளிம்பில் நான்..!

வீணை

அந்த பழைய மாளிகை ஏலத்திற்குப் போவதை அறிந்து கனவான்கள் பலபேர் அங்கு குழுமி இருந்தனர். தந்தையையும், தாயையும் ஒருசேர இழந்த ரவிவர்மன் அந்த மாளிகையின் அகண்ட வரவேற்பு அறையின் கிழக்குச் சாளரத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்தான்.
முதலில் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளாய் ஏலத்திற்கு வர, கட்டியங்காரர் ஏல விலையினைக் கூற வந்திருந்த கனவான்கள் ஒவ்வொன்றினுக்கும் ஒரு விலையைக் கூறி வாங்கிக் கொண்டிருந்தனர்.
இறுதியாக அந்த வீட்டின் வரவேற்பு அறையில் மூலையில் வீற்றிருந்த ஒரு பழைய காலத்து வீணை ஏலத்திற்கு வந்தது.
எடுத்து வந்து எல்லோருக்குமாய் காட்டி விலை கூற ஆரம்பித்தார் கட்டியங்காரர். ஏனோ, அந்த வீணையை விலை பேசி வாங்க அங்கு எவருமே தயாராயில்லை. நேரம் கடந்தது. இறுதியில் அப்பொருளை ஏலம் விடுவதில்லை என முடிவெடுத்து விலை போகாத பொருளென்று மூலையில் வைக்கப் போயினர்.
அப்போது அங்கு கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் எழுந்து சென்று அந்த வீணையை எடுத்து, அதன் நரம்புகளை முறுக்கி, வீணையைத் துடைத்து, மடியில் வைத்து வாசிக்க ஆரம்பித்தார்.
வீணையின் அழகிய நாதம் எழும்பி அவ்வறையை வியப்பில் ஆழ்த்தியது. அங்கிருந்த அத்தனை பேரும் அந்த இன்ப நாதத்தில் தன்னை மறந்தனர். ஒவ்வொரு நொடியும் அதன் உன்னத இசை அங்குள்ளவர்களின் உள்ளத்தில் இன்பத்தை வெள்ளமென பாய்ச்சிக் கொண்டிருந்த்து.
திடீரென்று இசைப்பதை நிறுத்தி விட்டு பெரியவர், வீணையை கட்டியங்காரரிடம் கொடுத்துவிட்டு தன்னிருகையில் வந்து அமர்ந்தார்.
சாளரத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த ரவி வர்மனின் கண்களில் அருவியென கண்ணீர் பெருகி ஒழுகியது.
வீணையை மீண்டும் ஏலத்த்ற்குக் கொண்டு வந்தனர்.
பின்னர் அந்த வீணைதான் அங்கு அதிகபட்ச விலையில் போனது என்று கூறவும் வேண்டுமா?>

Sunday 22 December 2013

முற்றுப் பெறாத கவிதை

கற்பனை வானில்
கவிதை எழுத
காலங்கள் கடந்து சென்றேன்.
கார்முகிலும்,
காற்றினிலாடும் தூளியாக,
என் மேனியை வருடி விட்டு
வண்ணங்களை மறைத்து
காரிருளை படைத்து
கண்ணாமூச்சி
விளையாட நினைத்தது.

எங்கினும் பசுமையாய் தோன்றிய வயல்கள்
இருண்ட தேசமாக,
எவ்வழியும் கருமையாய்,
தனிமையை போர்த்துக் கிடக்க,
மலைகளின் விரலிடை
வழிந்த நதிகளும்
வானக் கருமையை நோக்கி
விம்மியபடி இருந்தன.

ஒளி சிந்தி
ஊர்வலம் போன
சிவப்புச் சூரியனும்
கரியக் கனவுகளை
கலைக்க இயலாமல்
ஒளிந்து விளையாடி
கரைந்து காணாமல் போனான்.

பரந்து விரிந்த சோலைகளில்
பாடித் திரிந்த பறவைகளும்
தென்றலின் இனிமை குலைந்து
கொடுங்கோல் காற்றைக் கண்டு
விரைந்து கூடடைந்தன.

அத்தனைக்கும் மசியாத
கற்பனை வாகனம்
வாடாத கவிமலரை
தீந்தமிழில் கோர்த்தெடுத்து
சிதறாமல் வடித்தெடுக்க,
சிந்தனை பறந்து
சேகரம் செய்த கவிதை
அம்மாவின் அழைப்புக் குரலால்
முற்றுப் பெறாத கவிதையாய்
முடிந்தே போனது!