Monday, 29 September 2014

அவளில்லா வீடு

அந்த புழுதியடங்கிய மாலை வேளையில்
தோட்டக்கதவை திறந்ததும்
துணுக்குற்றேன்

வாடிய செடிகளும் பூக்களும்
வீட்டில் அவள் இல்லையென
பட்டென்று உணர்த்தின

வாசல் கதவை திறக்க
விருப்பமின்றி நின்றேன்

முகமலர வரவேற்று
முத்தமொன்று ஈந்து
அத்தனை கதைகளையும்
அவசியமே இல்லாமல் கேட்டு
ஆசுவாசப்படுத்துமென் தேவதை
வீட்டினகத்தில் இல்லையென உணரவே
சற்று நேரம் எடுத்தது

ஒருமணிக் கொருமுறை
பேசிக்கொண்டுதானிருக்கிறாளெனினும்
என்னகத்தேதான் அவள் உறைகிறாளெனினும்
அவளில்லா வீட்டினுள்
அடியெடுத்து வைக்கவும்
அஞ்சுதே நெஞ்சம்

ஒற்றை விளக்கும்
ஒரு அறையும் போதுமென்று
முடங்கிக் கிடக்க நினைக்குதே மனம்

வெளிச்சப் பொழுதுகளில்
வேலையில் சிக்குண்டு கடக்கும் காலம்
மாலையும் இரவுமெனை
வாட்டியெடுக்குதே

என்னை நினைத்து
தவித்தபடிதான் இருப்பாளென்றாலும்
வந்து சேரும்வரையெங்கிலும்
சுற்றத்துடன் மகிழ்ந்து
சுற்றிவரட்டும்
சந்தோஷப் பூங்காவில்
அவளும் ஒரு பூவாய்
மலர்ந்திருக்கட்டும்

அதுவரை அவள் நினைவுக்கு
தோட்ட மலர்களுடன் நான் பேசுகிறேன்

எப்படி மறப்பேன்
துடித்துக்கொண்டே யிருக்கும் மனதில்
தூவிச் சென்ற நிகழ்வுகள் மாத்திரம் நிலைத்திருக்க
ஆழப்பதிந்ததென்னவோ
அர்த்தங்கள் மட்டுமே

வார்த்தைகளின் கோர்வைகள்
பாறைமேல் வழுக்கியோடும் நீராக
நினைவுகளில் நில்லாமல்

பேனா களைவதும்
பேரை மறப்பதும்
ஊரைத் துறப்பதும்
உறவைத் தொலைப்பதுமாய் இருந்தவனை
உறுத்திய அவள் கேள்வி

எல்லாம் மறப்பீர்
என்னையுமா
என்றவளிடம்
எப்படிச் சொல்வேன்

எல்லாம் மறந்தாலும்
என்னுயிரை எப்படி மறப்பேனென்று?

கனியேமூடிய விழிகளிலே முத்துதிர வேண்டாம்
வாடிய இதழ்களிலும் வருத்தம் கொஞ்ச வேண்டாம்
பாசத்தின் பிணைப்புகளில்
பகட்டில்லா கனியேயுன்
வாசம் கொஞ்சுமொரு முத்தம் போதுமடி

அப்பாவென்றழைப்பில்


கருவண்டு விழிகொண்டு
என்னுயிர் தன்னில் பூக்கிறாய்
தெற்றுப்பல் மொழிவிண்டு
செந்தேன் தமிழில் விளிக்கிறாய்
அப்பாவென்றழைப்பில்
அன்புப் பிரளயம்
அகமெங்கும் பொங்குதே

அழியும் இயற்கை

கனிமரத் தோப்புக்குள் காலடிவைத்த வேளை
காய்த்தும், பூத்தும், கனிந்தும் கலந்திருந்த மரங்களினிடை
கழுத்தை நீட்டி பசியாற முற்பட்டபோது

வான்மேகங்களிடையே நடந்த
வழக்காடுதலில்
வெளிச்சப் பிழம்பொன்று விரைந்திறங்கி
எந்தன் விழிகளையும் தாக்கியது

பற்றிக்கொண்ட மரங்களின்
தீ நாக்குத் தாக்குதலில்
புசிக்கவிருந்தவை உதிர்ந்தொழுகின

உடன் பெய்த கண்ணீர் மழையுடன்
இணைந்த கொடுங்காற்றில்
இலைகளும் கிளைகளை துறந்தன

ஒற்றை இலை மாத்திரம்
முகத்தின்முன் பறந்துவந்து
மூக்கின்மேலமர்ந்து
உயிர்போகும் தருவாயில்
உன்பசியாற்ற எனை தருகிறேன்
ஏற்பாயாவென வினவியது

ஒளியிழந்த பார்வையுடன்
ஒற்றையிலையை தாங்கிய மூக்குடன்
அவ்விடம் விட்டகன்று
பதியமிட்டேனும் இதனுயிர் காப்பேனென்று
உள்ளத்தில் உறுதிபூண்டு விரைந்தேன்

அழியும் இயற்கையை காக்க
என்னாலானது அவ்வளவே..!

Thursday, 25 September 2014

கைக்குடை

மழைப்பூக்களைச் சுமந்த
மாரிக்கால மேகக் கூட்டமொன்றின் வருகை
அவ்வயல் பரப்பின் குளுமைக்குக் காரணமாயிருந்தது

சிலுப்பிக் கொண்டு முகம் திருப்புமோவென
எதிர்பார்த்திருந்த கதிர்களும்
வரவேற்பு கானமொன்றை
காற்றுடனிணைந்து இசைக்கத் தொடங்கியிருந்தன

விரல்களின் பிடியினின்று நழுவிய கைக்குடை
காற்றில் மிதந்து
கார்மேகக் காதலனைச் சென்றடையப் பறந்தது.

குளிரில் மீட்டபட்ட வீணை நரம்புகள்
எழுப்பிவிட்ட உத்வேகத்தில்
நழுவிச் செல்லும் கைக்குடையைப் பற்றவோ
அக்குளிர் மழையுடன் காதல் கொண்டு பறக்கவோவென்று
என் திசையை நிர்ணயிக்க
எண்ண இறக்கைகளை விரிக்கலானேன்

Wednesday, 24 September 2014

மாற்று வழி?

புகைப்படர்ந்த பார்வைக்குள்
புதைந்திருந்த பழங்கால நினைவுகளை
மயங்கிய மாலைப் பொழுதொன்றில்
சுவாசிக்கத் தொடங்கினேன்

சதிராடிய கரும்பு வயல்களும்
மஞ்சள் நிறச் சோளக் காடுகளும்
பசுமையான கம்பஞ்சோலைகளும்
மையமாய் நின்று நிழல் தந்த
புளிய மரங்களும்
கட்டைவண்டித் தடங்களுடனான
செம்மண் புழுதிச் சாலைகளும்

மூதாதையர் காலத்தவையென
முந்திக்கொண்டுச் சென்றுவிட்டிருந்தும்
மாசுபடா அவ்வியற்கை
அள்ளித்தந்த சுகங்கள் ஏராளமெனும்
ஏக்கங்கள் இனியும் ஆழ்நெஞ்சில் பசுமையாய்..

செயற்கை காற்றுக்குள்
சிறைபட்ட என் குட்டி தேவதை
வெளிப்படும்போதே விசும்புகிறாள்
தூய காற்றின்றி தும்முகிறாளென்று
மீண்டும் அக்காலத்திற்கு
எமை இட்டுச் செல்லவேண்டி
எம்மூதாதையரை இறைஞ்சுகிறேன்..

மறைந்தவர்
மறைந்திருந்தேனும் கேட்பாரா..?
மாற்று வழியேதும் சொல்வாரா..?

Monday, 22 September 2014

தற்காலிக வெற்றி
அவனுக்கு
வாக்குச் சாதுர்யம் அதிகம்

கடலலையாய் கூட்டமிருப்பினும்
கர்ஜிக்குமிவன் குரல் கேட்டு
அடங்கிப் போகும்
கருத்துக்களை ஆணித்தரமாய் பதிவதில்
அவனுக்கு நிகர் அவனே

எடுத்துக்காட்டுகளும்
எதுகை மோனைகளும்
சொற்பொழிவில் பவனி கொள்ளும்
அடலேறு போல் காட்சி தந்து
அத்தனை பேரையும்
ஆட்கொள்ளுவான்

பள்ளியில் தன்பிள்ளை அடங்காது
அவன்பேர் சொல்லி திரிகையிலும்
தவறு தங்கள் பக்கம் இல்லையென்று
தர்கித்த நேரத்தில் வேண்டுமானால்
ஆசிரியரையவன்
வென்றிருக்கலாம்

தறுதலையாய் மாறும் பிள்ளையை
தட்டிக் கேட்பதை தடுத்தது
தற்காலிக வெற்றியெனவும்
வாழ்வின் நிரந்தர தோல்வியெனவும்
பிற்காலத்தில் உணருகையில்
காலம் வெகுதூரம் சென்றிருக்கும்..!