Wednesday, 30 October 2013

மயங்கினேன்காணும் திசையெங்கும்
கரும்பச்சை புல்வெளி,
மனதை மயக்கும்
மெல்லிய பூங்காற்று,
அதிக வாகனமற்ற
அமைதியான சாலை,
அடுத்து என்னோடு
கதைபேசி மகிழ்ந்து வரும்
என்னவள்...

மனம் லயித்தது
அந்த சூழலிலா?
அவள் சுந்தர வதனத்திலா?
கவிதையாய் உருளும்
கரு விழிகளிலா?
கலகலவென உதிரும்
கனி மொழியினிலா?

சடசடவென உதிர்ந்த
மழையைக் கண்டு
மொழிவதை நிறுத்தினாள்,
முகத்தில் துளிர்த்த
மழைத்துளி கண்டு
நான் மகிழ்ந்தேன்.

கரம் பிடித்து
ஓட யத்தனித்தேன்.
தடுத்து நிறுத்தி,
ஆசையாய் அந்த மழையை
அனுபவித்தாள்.

மூச்சை இழுத்துப் பிடித்து
ஈர மழை வாசனையை
உள்ளுக்குள் வாங்கினாள்.
நானும்
மயங்கிப் போனேன்.
அவள் ரசிக்கும் அழகில்,

இசை லயத்துடன் பெய்த மழை,
இன்முகத்துடன் ரசித்த அவள்,
இனி வேறென்ன வேண்டும்?

இழுபறி

சாலையை கடக்க
நானுனை இழுக்க,
எனை காக்க
நீயெனை இழுக்க,
நடு சாலையில்
நமக்குள் இழுபறி,
நின்ற இடத்திலே நாம்...!

கடிதம்

மடித்து சட்டைப்பையில்
பாதுகாப்பாய் வைக்கப்பட்ட
காகிதத்தில்
ஒன்றுமே இல்லை,
எனினும்,
அதனுள் இருப்பது
நீயென
உனக்குத் தெரியும்,
அன்று தொடங்கிய
குறிப்பு வார்த்தைகள்
இன்றும் தொடர்கின்றனவே?

பந்தி

சில காலம் முன்பு மார்த்தாண்டம் அருகில் ஒரு நண்பர் வீட்டு நிகழ்விற்கு நானும் என்னுடன் இன்னும் சில உயர் அதிகாரிகளும் சென்றிருந்தோம். நிகழ்வு முடிந்து சாப்பாடு நேரம் வந்தது. அந்த நண்பர் எங்களிடம் வந்து சிறிது நேரம் அந்த மரத்தடியில் இளைப்பாறுங்கள். ஒரு பந்தி முடியட்டும் என்றார்.
நாங்கள் ஊரில் மிக முக்கியமான நபர்கள் இருப்பார்கள் போலும், அவர்களுக்கு முதல் பந்தியாக இருக்குமென நினைத்தபடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
ஆனால் என்ன ஆச்சரியம்! முதல் பந்திக்கு அவர்கள் அந்த ஊரில் இருந்த ஏழை உழைப்பாளி மக்களை அழைத்து விருந்துண்ண வைத்தார்கள்.
எங்களின் மன மகிழ்விற்கும், ஆச்சரியத்திற்கும் எல்லையே இல்லை. அதுபோல ஒரு முதல் பந்தியை நான் அதுவரை பார்த்ததில்லை. அதற்குப் பிறகும் பார்த்ததில்லை.
எத்தனை பேருக்கு அப்படி மனம் வரும்? உழைப்பாளி மக்களுக்கு முதல் பந்தி கொடுத்து பின்னர் எங்களைப் போல விருந்தாளிகளுக்கும், உறவினர்களுக்கும், முக்கிய மனிதர்களுக்கும் பந்தி பரிமாற எவ்வளவு பேருக்கு தைரியம் உண்டு?
என் வீட்டு நிகழ்வுகளையேனும் அப்படி நடத்தவேணுமென என் மனதில் ஒரு எண்ணம் அப்போது விதைந்தது.

காத்தாய்


மலர் மேகக் குவியலாய் என் மனம் பூத்தாய்,
மென்தேகப் பரவலில் என்னுயிர் காத்தாய்!

Tuesday, 29 October 2013

அழு
விழித்திரைகளில்
வழிந்த நீர்த்துளிகளை
வழிக்க மனமின்றி
கனவு தேசத்தின் வாசலில்
காத்துக் கிடந்தேன்.
அழுவதில் உடன்பாடில்லாதவன்தான்,
எனினும்,
உணர்ச்சிக் குவியல் முன்பு
எதிர்ப்புகள் மழுங்கிப் போகின்றன.
தடைகளை உடைத்து
கனவு தேசத்தில்
கால் வைத்த அந்நாட்களை
மீட்டெடுக்க இயலாமல்,
மீண்டும் எனக்குள்ளே
உருக்கிய பாதரசத் துளிகளுடன்
உடன்பாடில்லாமல்
நானும்
உருகிக் கொண்டிருக்கிறேன்…!

விடுகதை


விடுகதையான
தினசரி காலைகளின் மேல்
வேண்டுமென்றே ஏறி அமர்ந்து
வேண்டுமளவு அழுத்தம் கொடுத்து
வெடித்து திறந்து
விடை கிடைக்குமென எதிர்பார்த்து
வீணாகிப்போனதென் நாட்கள்.

பல்லால் கடித்தும்
பறித்தும், இழுத்தும்,
இடித்தும் பார்த்தேன்.
இயலாமை பெருகித்தான் போனது.
விடை மட்டும் கிடைத்த பாடில்லை.

வேதனையுடன்
வெட்கித்தலை குனிந்திருந்தேன்.
அட,
இதுதான் ரகசியமா?
உடனே எழுந்து
விடுகதையை கட்டிப் பிடித்து
அருகில் இழுத்து
இன்முத்தம் கொடுத்தேன்.

விடுகதை விழித்து, சிரித்து
என் விழி பார்த்து
விடையை சொல்லியது!
வாழ்க்கையே இனிமையானது!