Wednesday, 30 July 2014

இனிப்பேனே


முத்தாரம் கேட்ட இளமன்னன் மார்பில்
வித்தாரக் கள்ளி விளையாடுகின்றாய்
கொத்தோடு பூவை விரல்கொண்டு கிள்ளி
அத்தானென் மேலே கணை பாய்ச்சுகின்றாய்

செம்பூவே யுந்தன் இதழ்பூத்த நகையில்
விண்மீதிலாடும் பொன்னூஞ்சல் கண்டேன்
கண்பார்த்த மண்ணின் துகள் மீதிலெல்லாம்
கவித் தேனின் ஊற்று துளிர்த்தாடக் கண்டேன்

நீர் கொண்ட நிலவை வான்மேவிக் காணாம்
நிலமீது பூத்த மலர்மீதும் காணாம்
கார்கொண்ட மேகம் மழை நீரே யாகாம்
கனியேயுன் மீது துளிர்த்த நீரென் உணவாம்

பனித்ததோ உன்மீது துளிர்த்ததோ பெண்ணே நீ
குளித்ததோ பன்னீரைத் தெளித்ததோ அறியேனே
எனக்கது சுவைத்தேனே இனியதைச் சுவைப்பேனே
எந்நாளும் என் வாழ்விலுனைக் கொண்டு இனிப்பேனே

அப்பா

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்,

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்,

நரம்பு தெரியும் கைகளில்,

நரை விழுந்த மீசையில்,

அப்பாக்களின் உழைப்பின் வரலாறு

அப்பட்டமாகத் தெரிகிறது

கனவுலகப் பயணம்


அமைதிப் பெருங்கடல்,
அசையும் ஓடம்,
இசையாய் பனிக்காற்றின் ரீங்காரம்,
இதமாய் கரம் பற்றிய நீ,
இனிமையான வாழ்க்கை,
இப்படித்தான் அமையுமென
எல்லோர் கனவும்..

ஆழ்கடலில் பிரளயமாய்,
அதிலமிழும் பல ஓடம்,
ஊடுருவி உயிர் சிலிர்க்கும் பனிக்காற்று,
உக்கிரமாய் பல நேரம் நமை வாட்டும்,

இப்படியே பல ஓடம் கவிழ்ந்தாலும்,
ஏறிய ஓடத்தில்
இறுதி வரை பயணித்து,
கரை தட்டுமென காத்திருக்கும்
கனவுலகப் பயணமாய் வாழ்க்கை.

Tuesday, 29 July 2014

சமரசங்களுக்காய் ஒரு சாகித்தியம்நிராயுதபாணியிடம் இனியும் பெற்று
கொடுங்கோலன் கையில்
கோலோச்சக் கொடுத்ததாக

பனித்தீவில் மாவடுக்களை உதறி
காயும்வரை பொருத்திருக்க மனமின்றி
ஆழ்கடலில் அள்ளிவீசியதாக

கற்பனையில் பிழை நேர்ந்ததாகச் சொல்லி
கனவுப் பாலங்களைத் தகர்த்து
நினைவுக் கடலில் நீச்சலடிக்கத் தெரியாமல்
மூழ்கித் தொலைவதாக

வழக்காடுதலில் விருப்பமின்றி
விட்டுக் கொடுத்தலை ஏற்று
போதிமர நிழல்தேடும் புத்தனாக

சமரசங்களுக்காய் ஒரு சாகித்தியம்
படிக்கத்தான் தொடங்கியிருக்குதந்த
பாழும் மனது..

பழக்கத்திற்கு இன்னும் வரவில்லை
என்றெழுதிய விண்ணப்பமும்
இன்னும் முடிக்கப்படாமலே….!

Friday, 25 July 2014

என்று வருவாயடி?வெம்மையை அள்ளிப் பருகி
அனலுக்குள் முகம் புதைத்து
கனல் படுக்கையிலுருண்டு
அந்தகாரமெங்கும் தீ ஜ்வாலையில் அமிழ்த்தி
கார்மேகத் துளியொன்று
என்றேனும் கிட்டுமோவென ஏங்கிய நெஞ்சிற்கு

பெருமழையாய் பொழிந்து
குளிர்மழையாய் இனித்து
புறம் நனைத்து
அகம் நிறைத்து
ஆழ்ந்த அன்பினில் திளைக்கவைத்து

விட்டுச் சென்றாயடி என்னிளங்கிளியே,
ஏக்கம் கொண்டேனடி தளிர்கொடியே

கண் மூடியுனைக் காண்கையில்
அகம் சிலிர்க்கவைத்து
விழிதிறந்துனைத் தேடுகையில் காணாது
அனல்பட்ட புழுவாய்
பாலைவனங்கண்ட மென்மையான புஷ்பமாய்
வாடுமென்னுள்ளத்தில்

மீண்டுமொரு அடர் மழையாய்
எனை விட்டு நீங்காத தொடர்மழையாய்
என்று வருவாயடி?

ஒப்பந்தம்


இலையுதிர்த்த பனித்துளிகளை சேகரித்து
கோர்த்து எழுதிய உன்பெயர் 
இன்னும் முற்றுப்பெறாமலே இருக்கிறது.

சுழன்று வீசும் குளிர்காற்றின் தண்மையில்
விரல்கள் நடுக்கம் பெறுவதால்,

அருகில் வந்து செவ்விதழ்களால் தொட்டுவிடு,
முத்தச்சூட்டில் உனக்கென நானெனும் ஒப்பந்தம் முற்றுப்பெறட்டும்!

ஆண் அழக்கூடாதா?
இதயச் சூட்டில் இறைந்த வார்த்தைகளால்
தனித்தீவில் குடியேறியவளின்
இமைகள் பனிகோர்த்திருந்த பின்மாலை.

தவறெனதென அறிந்தும்
மனப்பந்தலில் மௌனப்பூக்களை மட்டுமே சூடி
கையுறைகளை அனலில் விட்டு வைத்திருந்தேன்.

இருவரின் பொழுதுகளும் இன்னிசையிழந்திருக்க
அவளின் கண்களோ 
கருமேகக் கதவை தட்டியிருந்தன.

விழிக்கோடுகள் சந்திக்காமல் விலகியிருக்க
இமைச்சிறையை பலமாய் நான்
பூட்டியிருந்தேன்.

கனத்திருந்த மணித்துளிகள் கரைந்ததில்
மனமெழுதிய பல நூறு கவிதைகளும்
காரிருளில் மறைந்தன.

மெல்லிய விரல்களின் மென்மை தீண்டலில்
திடுக்கிட்டுத் திறந்த விழிகள் கண்டது
கண்ணீர் தளும்பி நின்ற கருநீலக் கண்களை.

கனியதரங்கள் உதிர்த்த
சாரி யெனும் ஒற்றை வார்த்தையை கேட்ட நொடி
கண்களில் கடல் பொங்க
அவள் மடியில் முகம் புதைத்தேன்.

ஆண் அழக்கூடாதென நினைத்திருந்தேன்
அவள் மடியில் அழுது கரையும்வரை..!

ஊமையாகின்றேன்

மீண்டும் மீண்டும் உன் நினைவுப் பாதையில்,
இடரும் கல்லென எடுத்தெறிகின்றாய்,
விழுகின்ற இடங்களிலெல்லாம் பூவாய் மலர்ந்து
உன் பாதம் நோகாதிருக்க விரிகின்றேன்.
எங்கேனும் சில முள் என்னைமீறி உன் பாதம் தைக்க
என்னுள்ளே இரத்தம் கசிகிறது.
பூக்களுக்கும் வலிக்குமென யாரும் அறிந்திடாமலிருக்க
இரகசியம் காக்கின்றேன்.
உனக்கு என்வலி என்றும் அறியாதிருக்க
ஊமையாகின்றேன்.