Sunday 20 July 2014

அவலமாய் போன உணவு

















ஓரக்கண்ணால் அவளை
நமுட்டுச் சிரிப்புடன்
உற்றுப் பார்த்தேன்.
உள்ளிருப்புப் போராட்டம் செய்து
மன அறைகளை மூடியிருந்தாள்.
வெட்டிவைத்த காய்கறிகள்
அடுப்படியில் அமைதி காத்தன.

வெற்றுப் பார்வையை சின்னத் திரையில்
ஒட்டிவைத்திருந்தாள்.
கோப நகங்களை கிள்ளிக்கொண்டிருந்தாள்.
மூச்சுக் குழாய் வழியே
மௌனத்தை துப்பிக் கொண்டிருந்தாள்.
உதடுகளை பற்களுக்கு
உண்ணக் கொடுத்திருந்தாள்.

தொல்லைபேசியுடன் நான்
தூரமாய்த்தான் நின்றிருந்தேன்.
அதன்வழியே
அலுவலகப் பெண்ணொருத்தியுடன்
அளவளாவிக் கொண்டிருந்தேன்.
நிறுத்தாத ஒலிப்பெருக்கியாயவள்
என் நிலை தெரியாதிருந்தாள்.
குரல் கேட்கவில்லையென
வெட்டுவதைத் தவிர
வேறுவழியின்றி இருந்தேன்.

என்னவளை நான் அடுத்த நொடி
எங்கிருந்துதான் வந்ததோ?
கோபச்சொற்கள்
குமிழியிட்டுக் கொப்பளித்தன.
அமிலமாய் வந்ததை
ஆறவிடுவதைத் தவிர
வேறுவழி அறிகிலேன்.

அமைதி காத்து
அத்தனையும் வாங்கி
சட்டைப்பைக்குள் பத்திரப்படுத்திய பின்,
அடுத்து சென்று தோளைத் தொட்டதும்,
அத்தனை வசவுகளும்
அவள் வாங்கியதாய் பாவித்து
தோள் சாய்த்து விசும்பத் தொடங்கினாள்.
ஆதரவாய் புறம் தடவி,
அன்பேயென முத்தமிட்டு
அன்றைய சமையலை நான் செய்தேன்.

வேறென்ன செய்ய?
அலுவலகப் பெண்ணால்
அன்றைய உணவு
அவலமாய் போனது..!

No comments:

Post a Comment