Friday 18 July 2014

என்னவளே
















கருநீல வானம்
கற்பனைச் சாரலின் சிதறல்களாய் நடசத்திரக் கூட்டம்
விசும்பலொலி கேட்டு
வெளிவந்து பின் மறைந்து
வெளிச்சப் புன்னகை சிந்திப்போகும் வெண்ணிலா

முழங்காலை கட்டி
முகம்புதைத்து அமர்ந்திருந்தாள்.
அடுத்து சென்று தோள் தொட்டேன்
கண் நிறைகுடமாய் தளும்ப ஏறிட்டாள்.

நெடு நாளைக்குப் பிறகு காணும் ஆவலில்
நெருங்கியவெனை
நெருஞ்சி முள்ளாய் நோக்கி தூர எறிந்தாள்

அனுதாபம் மேலிட
அவள் வேதனையை உள்வாங்கி
அருகமர்ந்தேன்.

வாழ்வின் கடுஞ்சூழலில் சிக்கிய வனிதை
வெந்தணலில் சிக்கிய மெழுகாய்
மடி சாய்ந்து உருக
உச்சந்தலையிலோர் முத்தமீந்து
உருகாதே என்னவளே
உறுதுணையாய் நானுண்டென பகர
எத்தனை காலமென எக்களித்தாள்

தொலைவிருந்தும்
மனத்தால் அருகிருந்தேனென நான் சொல்ல
அருகிருந்து என் செய்ய,
அகமிருந்தும் என் அகமறியா உனையென வினவினாள்.
மேலும் தூரமாய் போய் விழுந்தேன்

தோற்றபின்னும்,
தொலைவுகளை கணக்கிடாதேயென
தேறுதல் சொன்னேன்

தொலைவில் நீ போய் நெடுங்காலமாகிறது
தொலைந்து போகாமலிருக்க
முயற்சி செய்யென மொழிந்தாள்

அவள் சொன்ன அத்தனை வார்த்தைகளும்
அன்பின் வெளிப்பாடென புரிந்தும்
ஆழ்மன வேதனையை
அவளின் அவலச் சூழலை உணர்ந்தும்
அமைதியை கைப்பற்றியிருந்தேன்.

நேரம் கடந்தோடி
நிலவும் ஒளியிழக்க
நீள்கதிரோன் வெளிப்போந்தான்

இருவரும் அமைதியெனும்
இரும்புக் கவசம் அணிந்திருந்தோம்.

குற்றவாளி நானேயெனக் கொண்டு
கைப்பற்றி மாப்புக் கோரினேன்
அடுத்த நொடி என்னுள் கரைந்து
ஏழ்பிறப்பும் நீ என்னவனேயெனக் கூறி
என்றேனும் எனை உணர்வாயன்பேயென்று
இதழ் கொண்டு உயிர் கலந்தாள்.

No comments:

Post a Comment