Thursday 30 July 2015

தேநீர்


வாரத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதால் மதிய அசைவ உணவை ஒரு பிடி பிடித்தபின் தனக்கு பிடித்தமான தனது படுக்கையில் கையில் கவியரசு கண்ணதாசனின் சேரமான் காதலியோடு விழுந்தான். நான்கு பக்கம் கூட படித்திருக்க மாட்டான். அப்படியே புத்தகத்தை தன்மேல் கவிழ்த்தபடி ஆழ்ந்து உறங்கிவிட்டான்.

சட்டென்று கண் விழித்து பார்த்தபோது மாலை 5.14 ஆகி இருந்தது. தேநீர் குடிக்கவேண்டும் போல இருந்தது. தனது மனைவியை “லக்ஷ்மி” என சப்தமிட்டு அழைக்க அவள் ஹாலில் இருந்துகொண்டே “என்ன அருண்” என குரல் கொடுத்தாள்.

“டீ வேணுமே” என பதிலுக்கு குரல் கொடுத்த அருணிடம் லக்ஷ்மி ஹாலில் இருந்தபடியே, “நீங்களே போடுங்களேன்” என பதிலிருத்தாள்
படுக்கையில் பதில் பேசாமல் சிறிது கோபத்துடன் உருண்டவன் வாரத்தில் ஒரு நாள்தான் வீட்டில் இருக்கேன், அன்னைக்குக் கூட தனக்கு தேவையானதை செய்து தர மாட்டாளோ, அம்மாவாக இருந்தால் நான் கேட்பதற்கு முன்னரே டீ வருமே என தனக்குத்தானே சலித்துக்கொண்டான்.
மேலும் ஒரு 15 நிமிடங்கள் கழிந்த பின்னர் தனக்கு வேறு வாய்ப்பில்லையென உணர்ந்து எழுந்து சமையலறை சென்று பாலை பாக்கெட்டிலிருந்து பாத்திரத்திலாக்கி கொதிக்கவைத்து டீத்தூள் இட்டு மீண்டும் கொதிக்கவைத்து வடிகட்டி இரு கோப்பைகளில் எடுத்தவாறு ஹாலுக்குச் சென்றான்.
ஒரு கோப்பையை லக்ஷ்மியிடம் கொடுக்க, புன்முறுவலோடு வாங்கிக் கொண்ட லக்ஷ்மி உதட்டில் வைத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சிய உடனே கோப்பையை டீப்பாயில் வைத்து விட்டு அருணை கைபிடித்து அருகிழுத்து கன்னத்தில் ஒரு முத்தமீந்து, “என் அன்புக் கணவனின் சுவைமிகு தேநீருக்காக. லவ் யூ டா” எனச் சிரித்தாள்.

அத்தனை அலுப்பும் சலிப்பும் அந்த ஒரு முத்தத்தில் காணாமல்போக முகமெல்லாம் மலர்ச்சியுற்ற அருணுக்கு என்றாவது தனது மனைவியின் அன்றாட அலுப்புத் தீர ஒரு முத்தம் அவள் செயலை பாராட்டி தான் தந்திருக்கின்றேனா என நினைத்தபோது சங்கடமே அவனுள் மேலோங்கியிருந்தது.

Wednesday 29 July 2015

எங்கே எனது கவிதை


























முடிந்து போன கனாவொன்றின்
மலர்கள் பூத்த நந்தவனத்தின் மணம்
இன்று காலை பரபரப்பினிடை
மிச்சமிருந்தது

வாகனத்தின் முன்பாக
அசைந்து சென்ற காளையின் கொம்பில்
நேற்றிரவின் பனித்துளியொன்று
படிந்திருந்தது

தெருவிளக்கின் அடியில் நின்ற
தெரு நாயின் பற்களுக்குள்
பழச்சுவை கனிந்து
கலந்திருந்தது

விரலிடுக்கில் கனன்ற கங்கிலிருந்து
உதிர்ந்த சாம்பலினுள்
அந்நேரம் அணையத் தொடங்கிய நெருப்பு
மினுக்கியிருந்தது

உனது நினைவுகளில் மட்டுமே
உருவான எழுத்துக்கோர்வை மட்டுமேன்
இப்போது எனைவிட்டு
நீங்கியிருந்தது?

Monday 27 July 2015

மாமனிதர் மறைந்துவிட்டார்

தற்புகழ்ச்சி கொள்ளாத
தன்பெருமை பேசாத
தன்னை முன்னிலை படுத்தாத
தன் செயல்களாலும்
தூய எண்ணங்களாலும்
போற்றப் படும் நிலைக்கு உயர்ந்த மாமனிதர்
தொலை நோக்குப் பார்வையை
இளையோர் எண்ணங்களில் விதைத்து
நம்பிக்கை கரங்களை வலுப்பெறச் செய்து
எதிர்காலம் நமதென்று
புகழ்பரணி பாடச் சொன்னவர்
கண்ணடைத்து உறங்குகையில்
காண்பதுவே கனவென இருந்தோரை
கண்மூட அனுமதியா உணர்வுகளே கனவென்று
புது வடிவம் தந்தவர்
வானேறி புக்க
திறனுண்டு உனக்கென்று
தோள்தட்டிச் சொல்லி
நிகழ்த்தியும் காட்டியவர்
சோறுண்ணும்போது மரிக்கவில்லை
சுகித்திருக்கும் போது மரிக்கவில்லை
உறக்கத்தின் மடியில் இறக்கவில்லை
உடல் நோயால் வாடிக் கிடந்து இறக்கவில்லை
தனக்கு மிகவும் பிடித்த செயலான
இளைய தலைமுறையுடன் அளவளாவும் போது
தன்னுயிர் இழத்தல் எத்தனை புண்ணியம்
வாழ்ந்தால் இவரைப் போல் வாழணும்
இறந்தாலும் இவரைப் போல இறக்கணும்
வாழ்க எம்மினத் தலைமகனே
எம்மில் என்றும் தரமான எண்ணங்களால் வாழ்பவனே.....!

எது வாழ்க்கை



















உருகிய அந்தகார இருட்டின்
ஓரொரு துளியும்
வழிந்தச் சுவட்டில்
வலம் வரவா எந்தன் சிறகிழந்த கனவுகள்

துளையிட்ட பாறையில்
வெடிவைத்த பின்னர்
தகர்ந்தெழும் துகள்களினாலான
பூத்தூவலா எந்தன் வானம்

ஆதி யிரைச்சலும்
அண்டம் புரண்ட
பேரோசையின் கூச்சலும்
ஒன்றிணைந்து இசைத்ததா எந்தன் கானம்

அனலும் மணலும்
அருகிப் பெருகி
உருகி ஒன்றென உதிர்ந்த
உப்புக் கரைசலின்
சுவையூட்டலா எந்தன் சோமபானம்

தொட்டுத் தொடர்தலும் முடிவாகி
விட்டுக் கொடுத்தலே விடையாகி
எனை விட்டுக் கொடுத்தபின்
நீயுமெனை விட்டுக் கொடுத்ததனால்

விடையற்ற நாட்களும்
வினாவற்ற நிகழ்வுகளும்
ஒரு சேர
பரிதவிப்புடன் வரையப்பட்ட
படபடத்த பக்கங்களின் திருப்புதலா
என் வாழ்க்கை…..