Tuesday 15 July 2014

கண நேரம்
















கண நேர ஜனனங்கள் எதுவுமில்லை
கண நேர மரணங்கள்தான் எத்தனை!

உயிர்களாயினும்
அதன்வழி வந்த உறவுகளாயினும்
கற்பனையாயினும்
கவிதைகள் போன்ற கலைகளாயினும்
கண நேரத்திலெதுவும் பிறப்பதில்லை.

மரங்களும் மலைகளும்
மனங்குளிர் நதிகளும்
விதையென நிலமென பனியென
தொடக்கங்களின்றி சுயமாய் முளைப்பதுமில்லை
.

மனிதனின் மகத்தான சக்தியில் உருவாகும்
கணிணியும் கட்டிடமும் எதுவாகினும்
இந்நொடி பிறந்ததாய் எதுவுமில்லை.

மரணத்தில் மட்டும் ஏனிப்படி?
இந்நொடி இருந்தார் அந்நொடி இல்லை.
இப்போதிருந்த மரம் இப்போதில்லை
இப்போதிருந்த கட்டிடம் இப்போதில்லை
இப்போதிருந்த உறவு இனியெப்போதுமில்லை

இயற்கையும் மனிதனும்
தந்நிலை மறந்து
சினம் கொள்ளும் காலங்களில்
அழிப்பதை மட்டும் எளிதெனக் கொள்கின்றனர்

ஆக்குதல் எளிதல்லவெனும்போது
அழித்தலும் அங்ஙனமேவென
இருத்தல் நலமன்றோ?

No comments:

Post a Comment