Sunday, 31 August 2014

உணர்வின் வலிவீணையின் நரம்பின் வழி
விம்முமென் உணர்வின் வலி

தென்மதுரை யவ்வனமே


முத்துப்பல் மோகனமே என்
மொந்தைக்கள் நூதனமே
தெத்துப்பல் சீதனமே நீ
தென்மதுரை யவ்வனமே

மிஞ்சும் நினைவுகள்கொட்டித் தீர்ந்தபின் தேங்கிய மழைத்துளியாய்
கடந்த பாதைகளில் மிஞ்சுவதுன் நினைவுகள் மட்டுமே

குயவனெனும் கலைஞன்
உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவாய்
உன் வறுமையை தாழிட்டுப் பூட்டுவாய்
கைவிரல்களில் கலை நயம் ஏகுவாய்
களிமண்ணிலே கவிதைகள் எழுதுவாய்

உடல் முழுவதும் தசையினை இழந்த நீ
உளம் எஃகினில் வார்ப்படம் செய்த நீ
வளம் கொண்டொரு வாழ்வைப் பெற்றிட
வரவேணும் நல் எதிர்காலமே!

காத்திருக்கும் குருவிசொல்லிக்கொண்டிருந்த கதையில்
சிறிது நிறுத்தி இடைவெளி கொடுத்து
முன்னங்காலால் மூக்கைச் சொரிந்தபின்
குளிருக்கு ஒதுங்கியிருந்த குருவியிடம்
தணலில் சிக்கிய ராஜகுமாரனின்
தவிப்பினைப் பற்றிச் சொன்னது

விருப்பமில்லா நிலையிலும்
பெருகும் மழைக்குளிரில்
பறக்கவியலாது
செவியிலொன்றை மட்டும் கொடுத்திருந்த குருவியிடம்
உற்சாகமில்லையென்பதை
உணராமலிருந்தது

ஊடுகுளிரில் உளம்வரை சிலிர்த்தபடியிருந்த குருவிக்கு
உதவும் எண்ணமில்லாது
தனதன்பை வெளிக்காட்டும்
தற்பெருமை கதையைச் சொல்லி
தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தது

குருவி தான் பறந்துபோகும் நிமிட வரவுக்காக
காத்துக் கொண்டிருந்தது.

Thursday, 28 August 2014

பூகம்பத் தீவை நோக்கி ஒரு பயணம்
எனக்குள் பிறந்தொழிந்திருந்த
இரவுக் கனவுகளின் குவியலில்
வளப்பமில்லாத சிதைந்த கனவொன்று
நீட்டியிருந்த நேசக் கரத்தை உதறித் தள்ளி
தன்னிச்சையாயொரு பயணத்தைத் தொடங்கியிருந்த்து

ஆர்ப்பரித்தக் கடலோ
அதையடுத்த முகடோ
நீண்டிருந்த நிலமோ
தடையில்லையென்றுச் சொல்லி
தன் பயணத்தைத் தொடர்ந்திருந்த்து

இடையிருந்த திருப்பங்களிலாவது
ஒற்றைப் பார்வை வீசக்கூடுமெனுமெந்தன் எதிர்பார்ப்பில்
விரிசல்கள் விழுந்திருந்தன

ஆங்கோர் தீவிலதன் பாதம் பட்ட நொடி
கடல் பொங்க, காற்றும் பிளிர
மலை நடுங்க, மத்தளமாய் பூமி குலுங்க
பயணப்பாதை பிளவுபட்டது

கடியதாயினும், கொடியதாயினும்
அவசரமாயொரு கற்பனைப் பாலம் தேவை
எனது சிதைந்த கனவை சென்றடைய..!

Saturday, 23 August 2014

தனிமை பயணம்


பாவ புண்ணிய பங்கீடுகளின்பால்
நம்பிக்கையற்றிருந்தவனின் நடைபாதையில்
தோள் பற்றியெழும்பிய
ஆதரவுக்கேங்கிய உறவுகளின் கணக்கோ
எதிர்பார்ப்பை நிறைவேற்றாத குற்றத்திற்காய்
எள்ளி நகையாடி
தூற்றிப் பொருமியிருந்த
தூய உள்ளங்களின் எண்ணிக்கையோ
வைத்திருக்கவில்லையென
குற்றம் சாட்டப்படிருந்ததையெண்ணி

உணர்ச்சிகள் மரத்திருந்த மனதை
அடுக்களையாக்கி
உற்பத்தி செய்யப்பட்ட
உஷ்ணக்காற்றின் கீற்றுகளை
நீண்ட பெருமூச்சுகளாக்கி
உதிர்த்தவனின் நாசித்துளைகளின் சீற்றம்
புறக்காட்டை சூடேற்றாதிருக்க
தனக்குள் அமிழ்த்தி
தனிமையைச் சுவைத்தபடி
பயணத்தை தொடர்ந்திருந்தான்
உறவுகளால் ஒதுக்கப்பட்ட ஒருவன்..!

பார்வை
பார்வை போனாலென்ன?

என் விழிகளாய்
நீயிருக்கையில்..!

நாகரிகம்
எத்தனை இயலாமலிருந்தாலும்
எந்தன் தேவைகளை கவனிப்பதில்
என் தாயினுக்கு நிகராயவள்

அன்றும் அப்படியே,
அதிகாலை குளிர் நீரில் குளித்து
ஆலயம் சென்று வழிபட்டு வந்தவளின்
உடல் நோவு கண்டு
உற்சாகம் குன்றியிருந்தாள்

ஆயினும் என்மேல்
அக்கறை கொண்டவளாதலால்
அடுப்படி வேலையில்
அமிழ்ந்திருந்தாள்.

இரவு படுக்கையில்
என்னருகேயவள்
கால் வலியென
முனகிக் கொண்டிருந்தாள்.

கால்வலி கைவலியென
நான் கருதும் முன்னரே
கால் பிடித்துவிட, கை பிடித்துவிட
துடிப்பவள்

அவள் முனகுதல் கண்டு
காலைத் தொட்ட வினாடி
பதறிக் காலை
இழுத்து மறைத்துக் கொண்டாள்.

எனினும் விடாது
தென்னமரக்குடி எண்ணையெடுத்து
தடவி பிடித்து விட்டு
வலி குறைந்ததென அவள் உணர்த்திய பின்புதான்
உறங்கினேன்

நாகரிகம் வளர்ந்து
நாடு மாற்றுபாதையில் போவதாய் சொன்னாலும்
கண்கலங்கியபடியெனை
கட்டிக்கொண்டவளின்
காதல் உணர்த்தியது இல்லையென்று..!

Friday, 22 August 2014

ஏங்குகிறேனடிகருவிழிகளில் ஒளிசிதற
கன்னக் கதுப்பு வழி புன்னகை மிளிர
சிந்திய சிரிப்பலையை
நாளும் காண நான் ஏங்குகிறேனடி!

ஸ்படிகம்

எங்கும் வியாபித்திருந்த மனக் கடலின் 
ஆழ்நிசப்தத்தில் அமிழ்ந்திருந்த கல்லொன்று
வெளிச்சபூமியின் நிகழ்வியாதிகளை ருசிக்க
மேல் நோக்கிய நீண்டதொரு பயணத்தைத் தொடங்கியிருந்தது.

ஆழ்ந்திருந்த வேளைகளில் 
அதன் தூய்மை எப்போதும்
உப்பு நீரால் துலக்கப்பட்டிருந்ததால்
எவ்வொளியையும் பிரதிபலிக்கும்
அகத்தூய்மை புறங்காட்டும்
ஸ்படிகமாய் மாறியிருந்தது.

அமிழ்ந்து அமைதி கொள்ள
அறிவுறுத்தல்களின் மத்தியிலான
மேல் நோக்கு பயணம் அத்தனை எளிதாயில்லையெனவும்
வேகமிருப்பினும் விவேகமில்லாததெனவும்
விவாதங்கள் நிகழ்ந்தன.

நீரலைகளின் ஓவென்னும் இரைச்சலையும்
நீக்கமற நிறைந்திருந்த நோய் வளர்க்கும் கிருமிகளையும் கடந்து
புறம் வந்து விழுந்த ஸ்படிகத்தின் ஒளிகண்டு
புறஞ்சொல்லிக் களிக்கும் புழுத்த அழுக்குகளும்
பொறாமைக் கனலில் புடம்போடப்பட்ட இன்னபிற வஸ்துக்களும்
அவசர மாநாடு கூட்டி
சிதிலமடைந்திருந்த இயற்கையை அழைத்து
விரைவாய் பணிமுடிக்க ஆணையிட்டன

ஏகாந்தப் பெருவெளியில்
தனதழகைக் காண்பிக்கவியலாத ஒவ்வாத சூழலில்
தனித்தன்மையை
சிறுகச் சிறுகப் பறிகொடுக்கத் தொடங்கியிருந்தது
சுகங்களென கைப்பற்றி
சுவைக்கத் தொடங்கியவை
சங்கடம் தரும் சக்கைகளென
உணரத் தொடங்கியிருந்தது.

அக அழகைக் கண்டு உணர்ந்து
தன்னை எடுத்து பாதுகாக்க வரும்
அந்த தேவ கரங்களின் வருகைக்காய்
தவமிருக்கவும் தொடங்கியிருந்தது.

Tuesday, 19 August 2014

அசரீரியாக


இருள் சேர் கொடு வனந்தனில் புகை சூழ் கருமரமிடை 
மருள் நீங் குற நடை பயின்றே. மனம் துணிந்தே புது யுகம் தேடிட 
அருள் தானென ஒளிப்பிழம்பென ஆங்கோர் திகழ் வந்தே மெல 
விருப்போ அதில் வெறுப்போ இலை வியப்பே எனைத் தொடரல் கொள 

மதியிடை வந்து கெஞ்சும் சுடும் பிறழ்களில் இளநெஞ்சே என
விடுபடு வென யெந்தன் மன யிசை அசைவுகளதில் முந்தி யெழ
தடை சிதறிட என்னுள் பல மணம் பரப்பிடும் எண்ணம் எழ
வெண்பனியுறை மேகம் கார் முகில் மறைந்திட வான் பரவிட
எந்தனுயர் நிலையிதுவேயென்றொரு அசரீரியாக..!

Friday, 15 August 2014

கோபம் களை

வெந்தணலில் மூச்சிழைத்து
வேர்களிலும் கனலிட்டு
காந்தம் உறை கண்களிலே
கடுங்கோபப் பதியமிட்டு
சாந்தமிலாச் சொற்சரங்கள்
சல்லடையாய் துளைகொள்ள
ஏந்திழையாள் என்னெதிரே
எரிமலையாய் நின்றிருக்க

அன்புமழை ஊற்றெடுத்து
அகம் நிறைந்த மங்கையிடம்
இன்பமுள வாசகங்கள்
எடுத்தியம்பித் தளர்ந்த பின்னும்
தென்பொதிகைக் காற்றினிலே
தீப்பந்தம் சுமந்தவளின்
மென்மனதின் கோபங் களை
முறைவேண்டி தவித்திருந்தேன்

பிழையேதும் செய்திலேன் ஞான்
பேரன்பின் விதையே நான்
மழைவேண்டும் மயிலாக-உன்
முகங்கண்டு மகிழ்ந்திருக்க
அலைபோல வேலை பல
அடுத்தடுத்து வந்தவுடன்
சிலைபோல நின்று சில
செயல்கோர்வை சிதறவிட்டேன்

கனியே யென் முகங்கண்டு
கண நேரம் கோபம் களை
உனையே யென் உயிராக
உடுத்தே னதை நினைவில் விதை
அணியே உன் சினங்குறைத்து
அன்பென்னும் ஆற்றில் நனை
எனையே யுன் சேயென்று
என்னாளும் நெஞ்சில் நினை.

நிழல் நீரலை

கருமை படர்ந்த அதிகாலை பொழுதொன்றின்
சூரியச் சுடர் தேடும் கமலத்தின் பின்னசைவில்
விழி சுமந்த கனவுகளின் வெளிச்சக் கோடொன்றின் வீரியத் தாக்குதல் 
நிழல் நீரலையொன்றை பரிணமித்திருந்தது.

வான் தெளித்த தூறல்களில் விளைந்த புதிய அலைகளில்
நிழல் நீரலை நீர்த்துப் போனதால்
கமலம் தன் மலர்ச்சி தடை பட்டிருந்ததாய்
குற்றப் பத்திரிக்கை தயாரித்திருந்தது.

தூர கிழக்கில் தோன்றியவனின் கதிர் வீச்சில்
கட்டவிழத் தொடங்கிய கமலம்
மழை நீர்த்துளிகள் விலக
கனவு விதைத்த நிழல் நீரலை
மறைந்திருந்தாலும்
அழிந்திடாமல் அங்கேயே காத்திருந்ததைக் கண்டு
அகமகிழ்ந்து மணம் பரப்பத் தொடங்கியது.

அடைபட்ட கோழிக்குஞ்சுகள்


அந்தக் கூட்டத்தின் மத்தியில்தான்
அகப்பட்டிருந்தேன்
அடையாளங்காண வண்ணம் பூசியிருந்தார்கள்
எட்டிலக்க எண்ணொன்றை
மனனம் செய்யச் சொல்லியிருந்தார்கள்

உணவைப் பெறவேண்டி
ஒழுங்கில் வரப் பழக்கியிருந்தும்
முண்டியடித்து முன்னேறவே
முயற்சித்திருந்தோம்

பற்பசை தின்றதாக ஒருவன்
பலப்பம் திருடியதாக ஒருவன்
அடுத்தவளைக் கடித்ததாக ஒருத்தியென
சிலரை மட்டும்
தனிக்கோடிட்டு பிரித்திருந்தார்கள்

அடைபட்டக் கூண்டிற்குள்
எத்தனை நேரம்தான் இருப்பதென அறியாமல்
புறம் சென்று விளையாட வழியும் இல்லாமல்
இடித்துத் தள்ளி
கிசுகிசுத்திருந்தோம்

தப்பிப் போன குஞ்சொன்றை
பொல்லாத பருந்தொன்று
சிதைத்து இறையாக்கியதாகவும் கேள்வி.

புரியாத பருவத்தில்
அறியாத செயல்களைச் செய்யாமல்
அடைபட்டுக் கிடப்பதே மேலென எண்ணி
கோழியும் சேவலும் கூறிச் சென்றதால்
இதுதான் எமது உலகமென எண்ணிக் கொண்டிருக்கிறோம்

உண்ணா நோன்பு

முரண்டு பிடித்தபடி
மூலையில் முடங்கியிருந்தாள்.
நாளையென் பயணத்தை
நயமாய் உரைத்திடத்தான் முயன்றேன்

ஒற்றையிலெனையிருத்தி
ஊர் சுற்றுகிறாயென பகர்ந்து
கண்களில் ஈரங்கசிய
மனம் கனத்திருந்தாள்.

ஆசுவாசப்படுத்தலில்
எடுத்த முயற்சிகளை
அணங்கவள் எடுத்து
இடுப்பில் சொருகியபடி
உண்ணா நோன்பினைக் கடைபிடித்து
காந்தியை கௌரவித்தாள்

வீம்புக்கு நானும்
வேண்டாம் உணவென்று சொல்லி
எனக்கொரு மூலையை
எடுத்துக் கொண்டேன்.

அதுவரை போராட்டத்தில்
அவளுக்கு வெற்றியாயிருந்தும்
அந்த நொடி முதல் தராசு
என்பக்கமானது.

என்மேலிருக்கும் அன்பிலும் அக்கறையிலும்
என்னைத்தவிர
அவள் எதையும் விட்டுக்கொடுப்பாளென
எனக்குத் தெரிந்ததுதானே!

Sunday, 10 August 2014

உடுத்திக் கொள்
உணர்வுகளை பிழிந்தெடுத்து உலர்த்தி
சொட்டும் ஒவ்வொரு துளியிலும்
ஆழ்மன ஓசை அபரிமிதமாய் வழிவதை
தனித்திருக்கும் அறையில் பிண்டமாயிருந்து
சாளரத்தின் வழி ரசிக்கின்றேன்.

ஓங்கிய கதிரவனின் சுடர்பட்டு
அகமிருந்து விலகாத துளிகளும்
பாஸ்பரஸாய் பறந்த வெளியில்
கரைந்து போவதையும் காண்கின்றேன்.

உலர்ந்தபின் அதையெடுத்து
கிழிந்த பகுதிகளில் ஒட்டுவித்து உடுத்தி
மேலும் சில உள்ளுணர்வுகளைக் கொட்டி
ஈரமாக்கி வைக்க நினைக்கின்றேன்,

என்றேனும் நீ வருவாய்,
எனையெடுத்து உலர்த்தி உனதென்று
உடுத்திக் கொள்வாயென்ற எதிர்பார்ப்புடன்..!

Friday, 8 August 2014

உனது பயணம்

புறத்தணுப்பில் பூமியே அமிழ்ந்திருக்க
மனக்குளிரைப் போக்க 
மடிக்கணப்பில் சாய்ந்து
விரல் சொடுக்கின் வழி
வேதனையை உதிர்த்திருந்தேன்

சங்கீத சிணுங்கலுடன் நீ அழைக்க
பூவிழிக்குள் புகுந்தவனின்
புன்னகைக்கு உயிர் கொடுத்தாய்

வியர்க்காத நுதல்மீது
விரல் கொண்டு துழாவி
சுருள் கேசம் விலக்கி
சுவையிதழால் ஒற்றி
நீங்காது ஆட்கொண்டேனெனச் சொன்னாய்

வேலையெனும் வெந்தணலில் நானின்று ஆழ்ந்திருக்க
மழைச்சாரல் சுவாசித்து
எனைவிடுத்த உனது பயணம்
எவ்வாறு உள்ளதடி என்னுயிரே!

எனது தொல்லை

கார்முகில் சூழ்ந்த கருநிற வானம்
கற்பனை துள்ளும் பனிக்குளிர் வாசம்
கூடடையும் பறவையின் குதூகலத்துடன்
வீட்டினுள் அடியெடுத்து வைத்தேன்

இன்னிசை பொங்கி மனம் நிறப்பி
வீணையின் நாயகனே வாவென்றழைக்க
விம்மிய மகிழ்வுடன்
தாவிச் சென்று அருகமர்ந்து
பொன்னே, மணியே,
கண்ணே, கரும்பே, காவியமே,
மாணிக்க வீணையை மடியிருத்தி
மயக்கும் இன்னிசையை தந்தாயடி

வேண்டும் பரிசளிக்க மன்னவனில்லை
என் மனமாட்சி செய்யும் வீணாவுந்தன்
மன்னவனாதலால்
என்ன வேண்டுமோ கேளென்றேன்
அரும்பிய புன்னகையுடன்
அன்னவள் மொழியுதிர்த்தாள்.

என்றும் என்னவனாய் நீயிரு
எனை மறவா நெஞ்சம் நீ கொள்ளென்றும் சொல்லி
இப்பிறவியில் வேறேதும் வரம் தேவையில்லையென்றாள்.

அன்னவளின் விரல் பற்றி
என் கரத்தில் சிறைவைத்து
உனக்காக பிறந்தவனின் உள்ளத்தில்
உனையன்றி வேறேது கண்மணியே,
எப்பிறப்பும் நீயே எனக்கு வேண்டுமென்று
வரங்கோரி தவமிருப்பேன் ஏந்திழையே என்றேன்!

பாவம்தான் அவள்,
இனிவரும் பிறவியிலும்
எனது தொல்லைகளை தாங்கியிருக்க..!

Wednesday, 6 August 2014

எளிது


எதுவும் எளிதாகத்தான் இருக்கின்றது
கடந்து முடிக்கும்போது
இடைப்பட்ட வலிகளின் எக்காளங்கள்
இதழ்மடித்துச் சிரித்த ஏளனங்கள்
ஏகாந்தமெங்கும் நிறைந்த அழுக்காறின் அனர்த்தங்கள்
புறம்பேசிக் கொண்டாடும் புல்லுருவிகளின் புன்சிரிப்புகள்
உரிமைகளை கவர்ந்து தனதாக்கத் துடிக்கும் தறுதலைகளின் பச்சோந்தித்தனங்கள்
இவற்றின் தாக்கங்களை மறந்து
குறிக்கோளில் கூர்பார்வை கொண்டு பயணித்து
எட்டிப்பிடித்தபின்பு
எல்லாம் எளிதாகத்தான் இருக்கின்றது..!
அதுவரை அனைத்தையும்
எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது!

Monday, 4 August 2014

வாழ்வியல்

                        எனது பெற்றோர் எனது முன்னிலையில் இது வரை சண்டை பிடித்ததாக நினைவில்லை. அதற்காக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்ததில்லை என்று நான் கூறவில்லை. ஆனால், வரும் கருத்து வேறுபாடுகளை எவ்விதம் தவிர்க்கலாம், யார் விட்டுக்கொடுக்கலாம் என்றே எனக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.
சில அடிப்படைக் காரியங்களில் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை வரும் நேரத்தில் விட்டுக் கொடுக்க முடியாமல் போகும் நேரத்தில், அந்த இத்தை விட்டு அகலவே முயற்சிப்பார்கள். அதனால் அந்த காரியத்தின் முடிவு ஒத்திவைக்கப்படுமே அல்லாது தீர்க்கப்படாமல் இருக்காது. இவை நான் என் பெற்றோரிடம் கண்டு படித்தது.
ஒருவருக்கொருவர் என் முன்னிலையில் அன்பு காட்டுவதில் தான் சளைத்தவர் இல்லையெனவே காண்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். தந்தையைத் தாயும், தாயை தந்தையும் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுத்து நான் கண்டதில்லை.
                      இவையெல்லாம் எனது வாழ்க்கைக்கு நான் படித்த பாடங்கள்.

                          ஒரு நாளிரவு எனது உற்ற நண்பனிடமிருந்து அழைப்பு, உடனே வா என. நான் ஓடிச் சென்று பார்த்தபோது அவன் வலியில் துடித்துக் கொண்டிருந்தான். மருத்துவமனைக்கு உடனே காரில் கொண்டு போனோம். என்ன ஆயிற்று என போகும் வழியில் கேட்ட போது, அவன் தனது மனைவியை கோபத்தில் திட்டியவாறு அங்கிருந்த கதவை எட்டி உதைக்க, கதவில் துருத்தி இருந்த ஆணி அவன் காலை பதம் பார்த்து விட்ட்து. பாவம். இப்போது துடிப்பது அவனல்லவா? அந்த மனைவியும், மகளுமல்லவா அவனது தேவைகளை இப்போது கவனிப்பது!

Friday, 1 August 2014

காத்திருப்பு
பால்வெளியின் விளிம்புகளில் 
சிறகு விரித்துப் பறந்திருந்த
பல வண்ணமிகு மனத் தும்பிகளில்
உனதும் எனதும் மட்டும் இணைபிரியாமல்
இயைந்திருந்தன

காலச்சுழலின் கோரப்பிடிகளில் சிக்குண்டிராதிருக்க
எல்லைக்கோடு தாண்டிட எத்தனித்தன
அகவெளி துறந்து புறவெளி கடந்து
ஏகாந்தத்தில் நிலைபெற்று
தமதான ஜீவனத்திற்கு
உள் வெளியற்ற அரிய ஒன்றை சிருஷ்டிக்க எண்ணின

பொறுத்திடாத ஏனைய தும்பிகள்
கணிக்க முடியா வஞ்சக முடிச்சுகளையும்
இருள் நேர் இறுக்கிவிடும் சுருக்குகளையுமிட்டு
தாண்டிச் சென்றிடாமல் தடைகளிட்டன

இறுகிய முடிச்சுகளில் 
ஏகாந்தங்களையும் எட்டிப் பறந்தததையும் 
மறந்து மரத்துவிட்டு
அடுத்தோர் பிறப்பிலேனும்
மனம் போல் வாய்க்குமென காத்திருந்தன 
காலச்சுவடுகளின் பாதத்தில்.....