Tuesday 28 May 2013

காதல் ரோஜா



அத்தை மகள் ரோஜாவை
ஆவலுடன் காண
அப்பாவுடன் விரைந்தேன் நான்.

அப்போதே குட்டி தேவதை அவள்.
பாவாடை சட்டையில்
இரட்டை சடைப் பின்னலுடன்
பட்டாம்பூச்சியாய்.
பயம் அறியா சிட்டுக்குருவியாய்.
பெயருக்கெற்ற பட்டுரோஜாவாய்!

சிறுவயதில்
காணும் பொங்கலன்று
ஊஞ்சலில் நான் தள்ளிவிட்டு
அவள் சிறுகை உடைந்தது.
என்றாலும் என்னை
காட்டிக் கொடுக்காது
தவறி வீழ்ந்ததாய்
பொய் சொன்னவள்.

ஆற்றங்கரையிலே
என் அத்தான் எனச் சொல்லி
அவள் தோழமை அனைவருக்கும்
அறிமுகம் செய்ததும்,

மழை நாளில்
வீட்டு முற்றத்தில்
நனைவேனென நான் அடம் செய்ய
என் கை பிடித்து
அவளும் நனைந்து
ஆட்டம் பாட்டமாய்
பாட்டியையும் நனைய வைத்த
நினைவுகளும்,

சட்டென்று பெய்த
கோடை மழையில்
சாலையிலே குடை களைந்து
கை பிடித்து என் மனதை
கரைய வைத்ததும்,

எத்தனை வருடங்கள் ஆனாலென்ன?
என் நினைவை விட்டு
ஒரு நாளும் நீங்காத
உற்சாக ஒளிக்காற்றாய் அவள்...

அதன் பின்னே
இருமுறையே பார்த்திருப்பேன்.
எனக்கென பிறந்தவளாய்,
என் எதிர்கால வாழ்க்கையாய்,
எப்படி இப்போதிருப்பாள்?

பத்து வருடம் போனதிலே
பழசையெல்லாம் மறந்திருப்பாளோ?
கல்லூரி வாழ்க்கையிலே
புதுவண்ணம் பெற்றிருப்பாளோ?
எப்படி இப்போதிருப்பாள்?

அப்பா ஏன் இப்படி?
இன்னும் சிறிது வேகம் கூட்டக்கூடாதோ?

என் ரோஜா,
என் பட்டு ரோஜா!
உள்ளமெலாம் தித்திப்பு,
உன் பெயரால்,
உன் நினைவால்,...

காலவெள்ளத்தில்
எத்தனையோ
பெற்றேன், இழந்தேன்,
உன் நினைவோ
உள்ளத்தில் கல்வெட்டாய்!

பல்லாங்குழி விளையாடி
மகிழ்ந்திருந்த சமயத்தில்
உருட்டிய சோழிகளாய்
உற்சாக பூக்களாய்
உன் சிரிப்பை நீ உதிர்க்க,
என் மனமோ உல்லாச வானில்!

ஒரு நிலையில்
என் அடுத்திருந்த உன் தோழி
மகிழ்விலே எனை அணைத்து
முத்தமொன்று தந்திட
நீ விழியுருட்டி
வெந்தணலாய் வேகப்பட்டு
என் கன்னத்தில் வைத்திட்டாய்
உன் மை ரேகை திட்டு!

தவறென்ன நான் செய்தேனடி?
கொடுத்தவள் அடுத்திருக்க
அடித்தது எனை ஏனடி?
அந்த அடி அடுத்த நொடி
நான் மறந்து விட்டேன்.
இன்று வரை நீயன்றோ
எடுத்து வைத்து
தொடுத்தபடி இருக்கின்றாய்!

அதன்பின்னர்
இருமுறைகள்
உறவினரின் திருமணத்திற்கு
என்னினிய ரோஜாவின்
இதழ் முறுவல்.
காண வேண்டி வந்தேன்.
பல்லில்லா பொக்கைகளும்,
பால்முகத்து சிட்டுகளும்
அடுத்து வந்து
இனிக்க இனிக்க பேச,
என்னிதய ரோஜா மட்டும்
எட்டடிக்கும் அப்பாலே!

சுனாமிக்கு
முந்தைய நாள் வானம் போல்
உன் முகம் இருட்டடிப்பில்...1
ஏங்கி தவித்த என் மனம்...
நீ அறிந்தும் அறியாமலும்....

அதன் பின்னர் என் வாழ்வில்
எத்தனையொ பெண்கள்
வந்து வந்து போக,
நான் மட்டும் உன் நினைவில்,
உருகி, மருகி,
எப்படி நீ என்னை
இப்படி ஏங்கி தவிக்க விட்டாய்?

என்மனதோ உன் பெயரை
மட்டுமே உச்சரிக்க
உன் மனதில் நான் மட்டுமே
உயிர் வாழ்வேன் எனும் நம்பிக்கையில்,
இதோ தந்தையுடன் விரைந்து.......

பொள்ளாச்சி...
கேரளாவிற்கு கொங்கு வழி
வாசலான குட்டி நகரம்.
செம்மண்ணும் கரிசல் மண்ணும்
கலந்த பூமி.
மலை பிரதேசம்,
மரியாதை கலந்த பேச்சின்
தலை பிரதேசம்.

அங்குதான் வசிக்கிறாள்
அன்பின் தேவதை.
அவள் வீட்டுத் தெருவில்
நுழையும் போதே
அவள் வாசம் வீசும்.
ஆம்,
அவள் வீட்டைச் சுற்றி
ரோஜா பூ வாசம்.

என் கண்விழியிரண்டும்
எனை விட்டு உருண்டு போய்
அவளைக் காணத் துடித்தன.
நெஞ்சினிலே பூவாசம் குடியேறி
அவள் வாசம் காணத் துடித்தது.
எங்கே அவள்?

மைத்துனனும், மாமனும்
அத்தையும் எங்களை
ஆரவாரமாய் உபசரிக்க
எனக்கோ
அவள் வாசமன்றி
அரை நொடி கூட
இருக்க இயலவில்லை.
கல்லூரிக்குச் சென்றவள்
விரைந்து வருவாள் எனக் கூற
வழியிலே என் விழி
தவம் இயற்றப் போனது.

நே..ர..ம் போஓஓஓஓஓனது....
சட்டென்று என் மனம்
அதன் இணை வாசம் கண்டது.
பூவாசம் தாண்டிய
என் பெண்ணின் வாசம்.

தெருவோரம் அவள்
வரும்பொதே
என் கண்கள்
அவள் முன் சென்று
குதூகலித்து குதித்தாடின.

வெள்ளை சேலையும்
சிவப்பு சட்டையும் இட்ட
பட்டு ரோஜா
என் இஷ்ட ரோஜா...

வந்தாள்,
ஒரு வார்த்தை பேசாமல்
அகத்துச் சென்றாள்.
அங்கு இருந்தவரிடத்தெல்லாம்
கண்வித்தை காட்டிவிட்டு
எனைமட்டும்
ஏறெடுத்தும் பாராமல்....

என்னதான் கோபமோ
என்மேலே?
இத்தனை வருடமும்
தணியாமல்...
என் செய்ய?
இதை எப்படி சரி செய்ய?


(நாளை வரை பொறுமை)

அனைவரின் முகத்திலும்
காலை நேர சூரிய காந்தி..
எனக்கு மட்டும்
அது இரவாய் போனதேன்?

எத்தனை வருடமாய்
அவள் நினைவை
உள்ளத்தில் தேக்கி   வைத்தேன்?
என் இதயத்தின் ஓசைகள்
அவள் மனதை எட்டவே இல்லையோ?

என் இத்தனை நாள் காத்திருப்பை
தவறென்று கூறுவரோ?
நேருவின் ரோஜாபோல்
எனக்கிவள் ரோஜா
என்ற என் எண்ணம்
பொய்யாகுமோ?

என் எண்ணங்கள்
பலவாறாய் அலைமோத,
உணர்ச்சியின் விளிம்பில் நான்..
ரோஜாவோ தோட்டத்தில்
மலர்களுடன் மலராய்..

வாசலில் அழைப்பு மணி,
வந்தது இரு இளைஞர்,
யாரிவர்கள்?
முகத்திலே ஆயிரம் வாட் மலர்ச்சி,
உள்ளிருந்து ரோஜா ஓடிவந்தாள்.
வந்தவரை வரவேற்பில் அமர செய்தாள்.
தேநீரை தாயிடம் வாங்கி சென்றாள்.

பேசினர், பேசினர், அவர் தம்மில்
பேசிக்கொண்டே இருந்தனர்.
என் தந்தை அவள் பெற்றோர்
பழங்கதையை வடித்தெடுக்க
நான் மட்டும் தனித்தீவில்..

பத்து வருட முள் வாழ்க்கை
போதாதோ என்னுயிரே!
முகந்திருப்பி என் விழியில்
முட்டாதோ உன் விழிகள்?
என் மனதின் ஏக்கத்தை
அறியாதோ உன் மனது?

ஏதும் அறியார்போல்
உன் நட்பில் நீ களித்திருக்க,
என் எண்ண அலை ஓசை
கொடுங்காற்றாய் உருமாறி
திசையற்ற சூழியென
சுற்றி சுற்றி அடிக்குதடி!

நண்பருடன் பேசுவதை
குற்றமென கருதவில்லை.
நிலமிழந்து புலம் பெயர்ந்து
இனம் மறந்த தமிழனைப் போல்,
கௌரவரின் சபைதனிலே
துயிலிழந்த திரௌபதி போல்,
பாலைவன சுடுமணலில்
பதிய பட்ட நாற்றை போல்,

தந்தையற்ற சிறு குழந்தை
தாயிடத்தில் அடிவாங்கி
அழுதாலும் மீண்டுமது
தாயன்பை நாடுதல்போல்,
உனன்பு விழியோர
ஒளிக்கற்றை பெற வேண்டி
ஓடிவந்த என்னை நீ
ஒதுக்கி தள்ளலாகாது!

உள்ளத்து சிறு நெருப்பு
கொடுந்தீயாய் மாறுதடி!
புயல் காற்றில் இடைப்பட்ட
பெருங்குடையாய் பறக்குதடி!
மனமுடைத்த சிறு குரங்கு
பெருந்திறளாய் பரவுதடி!

எங்கிருந்து வந்ததோ அவ்வேகம்,
எழுந்தேன், அறையை கடந்தேன்,
உன்னை அடைந்தேன்,
உன் துளிர் கரம் பற்றினேன்,
பரபரவென்று இழுத்து சென்று
காரினில் அமர்த்தி விட்டு
இருக்கையில் அமர்ந்து
எடுத்தேன், விரைந்தேன்,
வேகம், வேகம், வேகம், வேகம்........

பொள்ளாச்சி கடந்து,
ஆனைமலை பிரிந்து,
டாப் ஸ்லிப்பில் ஓரங்கட்டினேன்.
சாலையின் இருபுறமும்
அடர்ந்த காடு,
அதனழகு என் கண்களில்
புலப்படவில்லை.
உள்ளத்தின் படபடப்பு
அடங்கவுமில்லை.

ஒரு லிட்டர் நீரெடுத்து
முழுவதையும் குடித்து வைத்தேன்.
இழுத்து வந்த எனக்கு
உன் கண்கள் நோக்க
உளந்தனிலே பயம்.
நீர்குடித்து பயம் விலக்கி
உனை பார்த்தேன்.

என்ன இது?
இருத்தி வைத்த கற்சிலை போல்,
கண்பார்வை வெகுதொலைவில்,
இறுகிய ஓர் முகம் கொண்டு,
என்னிதயம் துணுக்குற்றது.
என்னழகு ரோஜாவாயிது?

மனதில் கோடிக்கணக்கில் வார்த்தைகள்
உருண்டோடி,
இடம் மாறி,
தடம் தேடி,
உதடுகளோ
ஒட்டி, உலர்ந்து,
நீரற்று,
ஒரு வார்த்தை கூட பகர
வழியற்று,
அவள் நிலையும் மாறாமல்,
என் நிலையும் தேறாமல்,
மணித்துளிகள்
கணக்கற்று ஓடின.

பசும் புல்லை போர்த்து நின்ற
மலையழகு.
திசையற்று ஓடிவரும்
காட் டெருதழகு,
அசறாமல் ஓடிவரும்
மான் கூட்டமழகு,
பேசாகற் சிலையாக இருந்தாலும்
பெண்ணே நீ பேரழகு!

நான் செய்தது
சரியா, தவறா என
எண்ணமெதும் எழவில்லை
என் மனதில்.
சிந்திக்கும் திறனும்
அற்றுப் போய் இருந்தது.
அவளின் நிலையெனக்கு
புரிபடவில்லை.
அதென்ன கோபமா?
உள்ளத்தே புயல் கொடியெண்
எட்டை ஏற்றி விட்டாளோ?

புறத்தும் மழைக்கான
மேகங்கள் சூழ்ந்த வண்ணம்,
அகத்தும் அங்ஙனமே!
எந்தன் மனமெங்கும்
நிசப்தம் உண்டாச்சு!
வந்த வழிதன்னில்
காரைத் திருப்பி விட்டேன்.

எனது கண்ணில் கார்மேக குவியல்,
உள்ளத்து வார்த்தைகள்
உள்ளுக்குள் மடிய,
உதடுகள் வெளிறி,
கனவிலே வெறித்தேன்.

ஆனைமலைக்கு முன்பு
ஒரு அழகிய கிராமம்.
அருகே மக்களின்
அவசர கோலம்.
ஆங்காங்கே குழுமி
அதிசயம் பேசினர்.
கார் போக வழியின்றி
சாலையில் மடங்கியது,

என்னவெனக் கேட்டதில்
தாயை பறி கொடுத்த
குட்டி யானையொன்று
தறி கெட்டோடி
கடைகளையும் மக்களையும்
துவம்சம் செய்ததாய் அறிந்தேன்.

மாலை மங்கியது,
மேகம் திறண்டு வந்து
வெளிச்சம் போக்கியது.
ரோஜா மலர் வாசம்
அருகில் உறுத்தியது.
இன்னும் வாய் மூடி
கண்களில் ஒளியின்றி
கருமையை காத்திருந்தாள்.
உள்ள வெறுமையை
வெளிக் கொணர்ந்தாள்.

கொண்டு சேர்த்து விட்டு
வீடு திரும்புதற்கு
மனதில் முடிவெடுத்தேன்.
வாகனம் உசுப்பினேன்.
ர்ர்ரும்மென நகர்ந்தது.
நாய்குட்டி தெறித்தோடியது.
பொதுமக்கள் தடுத்து நின்று
ஒற்றை யானை, அதுவும்
தாயிழந்த குட்டி யானை,
முதலில் பிடிபடட்டும்,
பின்னர் போகலா மென்றனர்.

ரோஜாவை திரும்பி நோக்கினேன்,
செவி யிருந்தும் கேளாமல்,
விழியிருந்தும் பாராமல்,
அப்படியே அமர்ந்திருந்தாள்,
உள்ளத்தில் பய முணர்ந்தேன்.
வாழ்விலே எதற்குமே அஞ்சாதவன்,
முதன் முறை அன்பின் முன் பயந்தேன்.
அனைவர்க்கும் கை கூப்பி,
விடை பெற்று
வாகனம் நகர்த்தினேன்.

ஓடி வந்த ஒரு சிறுவன்
வாகனம் மறித்து நின்றான்,
முகந்தனிலே குறுகுறுப்பு,
செயல்களிலே சுறுசுறுப்பு,
கண்டவுடன் என் மனதில்
எனைக் கண்ட ஓர் தவிப்பு,
ஆனைமலை வரை அவனை
கொண்டு விடக் கோரினான்.
ஓரக்கண் கொண்டு
ரோஜாவை நோக்கினேன்,
அவள் கண்களிலே ஓர் துடிப்பை
கண்டவுடன் என் மனது
ஆனந்த குவியலிலே,
சிறுவனை காரினிலே
ஏறச் சொல்லிவிட்டேன்.

ஆனைமலை சென்றுவிடின்
அச்சம் ஏதுமிலை.
அதற்குள்ளே ஆபத்து
வந்திடின் எதிர்கொள்ள
என்மனம் துணிந்தது.
என் உயிர் குறித்தெனக்கு
கிஞ்சித்தும் பயமில்லை,
என் உயிரின் உயிரான
என் இதய ரோஜாவையும்,
என்னைப் போலுள்ள
இச்சிறுவனையும்,
பத்திரமாய் கொண்டு சேர்க்க
பய மேகம் சூழ்ந்ததெனை!

இரவும் பகலும்
இணையும் நேரம்,
மலைகள் நடுவே
பாம்பாய் நெளியும் பாதை,
பாத அழுத்தலில்
வேகம் கூடியது.
காற்றின் ஓசை
கலவரப் படுத்தியது.
மேகம் கூடி
மின்னல் தெறித்தது.
வாகனம் ஒரு
வளைவுப் பாதையை நெறுங்கியது.
குறுகிய பாதை,
இருமருங்கிலும் ஓடை,
அடர்ந்த காடு
மரங்களின் அடர்த்தியும்
மேக மூட்டமும்
இருளை பறை சாற்றின.
வளைந்து திரும்பினேன்.
தூரத்தில் அது என்ன?
பரியோ? நரியோ? கரியோ?
இருள் கவ்வியதால்
தெளிவின்றி....
வாகன வெளிச்சம்
நேரே பட்டது,
ஆம் அது கரி தான்.
ஒற்றையாய் அசைந்து
எதிர் திசை போனது.
வாகன வேகம் குறைத்தேன்,
வெளிச்சத்தை நிறுத்தினேன்.
ஒற்றை யானை
அதுவும் தாயிழந்த குட்டி யானை,
சிறுவன் என் முதுகை தொட்டான்.
“போகும் கரி திரும்புதண்ணா!”
சாவியை திருப்பி
வாகனம் உருமினேன்,
வெளிச்சம் பரப்பினேன்.
வெளிச்சம் கண்ட
யானையோ பிளிறியது,
வேகம் கூட்டியது.
நானும் பின்னோக்கி நகர்ந்தேன்.
சாலையின் குறுக்கிலோர்
குறுகிய பாலம்,
என் மனதிலோர் எண்ணம்.
கரியது அடுத்து வந்தால்
பாலத்தில் ஓடி ஒளிவோம்.

இத்தனை நடந்தும் கூட
விழிகளில் சலனமின்றி
வெறிச்சிட்டு அமர்ந்திருந்தாள்.
வேதனை வெந்தணலாய் சுட்டது.
மரணத்திற்கு என்றுமே பயந்ததில்லை.
நானும் மரணத்தை அழைத்ததில்லை,
என் ரோஜாவின் கொடிய மௌனம்
யானையை நேரிட்டால் என்ன என
சிந்திக்க வைத்தது.

யானையில் நடையில்
துரிதம் கூட
எந்தன் இதய ஓட்டமும் எகிறியது.
என்னுயிர் கொடுத்தேனும்
இவருயிர் காப்பேனென
மனதி லுருதி எடுத்தேன்.

யானை எதிரே
கூப்பிடு தொலைவில்,
எங்கோ இடி இடித்தது,
குறுக்கு பாலத்தின்
அருகே வாகனம்,
காரின் கதவில் கை வைத்தேன்,
என் முதுகை
சிறுவன் கட்டிக் கொண்டான்.
என் கரம் அவள் பற்றினாள்.
கிறீச்சிட்டாள்,
“எங்க போறீங்க?
செத்தாலும் ஒண்ணா சாவோம்,
என்ன விட்டுப் பொகாதீங்க!!!!!!!!!!!!!!”
என் இதயம் ஒரு நொடி
என்னை விட்டுப் பறந்தது.
அவள் கூச்சல் என் காதில்
தேனாய் ஒலித்தது.

அவள் கண்களை நோக்கினேன்.
வான மின்னல்
அவள் கண்களில் தெறித்தது.
ஒரு துளி கண்ணீர்
உருண்டதைக் கண்டேன்.
இதயம் இயங்க மறுத்தது.
அவள் கரங்களை
இறுக பற்றிக் கொண்டேன்.

சூறைக்காற்றும் கடும் மழையும்
சுழற்றி அடித்தது.
ஆழியி னிடையே
கடும் புயலடிக்க
ஆடும் படகில்
கடமையை நாடும்
தமிழ் மகனாக
எனை உணர்ந்தேன்.
கரியும் அருகில் நெருங்கவே,
மலர் கரத்தில் இதழொற்றி
அவள் உடையின் வெளிர் நிற
டாப்ஸை பறித்தேன்.
வாகன இருக்கையின்
மேலுடை களைந்தேன்.
அனைத்து வெள்ளுடைகளையும்
என்மேல் போர்த்து
இடது.புறம் இருந்த
முட்புதர் மேலே
காரின் வெளிச்சம்
குவியச் செய்து,
கதவு திறந்து
புதரை நோக்கி
பறந்தேன்.
யானையின் விழிகளில்
வெளுத்த உடையின்
வேகம் தெரிந்தது.

வெண்ணிறம் கண்டால்
கரியவன் சினப்பானென
என்றோ ஒருவர்
சொன்னது மனதில்,
என்னை நோக்கி
பாய்ந்தது கரியும்.

ஓடிச் சென்று
புதரி லொளிந்தேன்.
மேலுடை களைந்து
புதரில் விரித்து
அம்பென பாய்ந்து
ஓடையில் குதித்து
பாலத்தில் நுழைந்து
மறுபுறம் எழுந்தேன்.

யானை புதரை
உதைத்து மிதித்து
வெண்ணிற ஆடை
விண்மீனாய் சிதற
துவம்சம் செய்தது.
வாகனம் ஏறி
இருக்கையில் அமர்ந்து
உசுப்பி விட்டேன்.
எந்தன் அழுத்தலில்
நொடியில்
நூறை கடக்க
பறந்தேன் அம்பாய்.

ஐந்து நிமிடம்
ஆனைமலை தொட்டேன்.
சிறுவனை இறக்கி
கையை அசைத்து
வாகனம் தொட்டேன்.
ரோஜாவை திரும்பி
ஆசையாய் நோக்கினேன்.
அய்யோ!
ஆவேசப் புலியாய் அவள்,
பாய்ந்தா ளென்மேல்,
அறைந்தாள்,
அடித்தாள்,
கடித்தாள்,
இறுதியில்
எந்தன் நெஞ்சி லொடுங்கி
கதறினாள்.
குலுங்கி குலுங்கி அழுதாள்.
செய்வதறியாது திகைத்தேன்.
ஆதரவாய் முதுகை அணைத்தேன்.
தலையில் முத்தமிட்டு
முகத்தை உயர்த்தி
கண்ணி லொழுகும் நீரை
இதழ் கொண்டு ஒற்றியெடுத்து
கேட்டேன்.
“என்னடா, என் ரோஜா மலரே!”
விசும்பலுடன் வெடித்தாள்.

“என் ஒரு நாள் கோபம்
அறிந்த நீ
பத்து வருட வேதனை
உணரலையா?
என்றேனும் எனைக்
காண வந்தாயா?
என்னிடம்
தொலை பேசினாயா?
தகவல் கொடுத்தாயா?
எப்படி எனை நீ
இத்தனை வருடம்
மறந்தாய்?”

என்ன பதில் சொல்வேன்?
எங்கிருந்தாலும் உனை
நினைந்திருந்தேன் என்றா?
அகங்கார மன்றோ
காதலை அழிக்க முயன்றது!
அவள் பேசவில்லை,
அவள் பார்க்கவில்லை.
அவள் தகவலில்லை.
அது சரி,
நானென்ன செய்தேன்?
சுய கௌரவம் பார்த்தேன்.
காதலை கொல்லப் பார்த்தேன்.
நல்ல வேளை,
கணபதி முருகனின்
காதலைக் காத்த வழியில்
எங்கள் காதலைக் காத்தார்.

அவளை அணைத்தேன்.
இதழமுதம் சுவைத்தேன்.
வாகன முடுக்கி
வீடு பாய்ந்தேன்!