Wednesday 31 July 2013

சேரடியோ



விழியசைவிலென் மனமசைய
விரல் பூக்களிலே மனம் குளிர
உளத் துடிப்பினிலே இசை பரவ
உனைத் தேடு மெந்தன் உயிர் புகுந்தாய்.

சிறைக் கூண்டிலுள்ள தத்தைப் போலவே
சிந்தை முழுதும் உனில் தஞ்சம் ஆனதே.
கரை காணாத வேள்ளம் போல எண்ணம்
கட்டுத் தெறித்து உனை வந்து சேருமே!

எந்தன் தோள்க ளுந்தன் தலை சாய்ந்திடவே
எந்தன் கரங்க ளுனை யென்றும் சேர்ந்திடவே
எந்தன் மூச்சு உனை என்றும் காத்திடவே
உந்தன் இமை திறந்து என்னில் சேரடியோ!

நிசப்தத்தில் மகிழ்ந்தேன்



வேலை செய்யும் வேளைகளில் சில
வேண்டாத நிகழ்வுகள் உண்டு.
காலை வந்த களிப்பற்று நான்
களைத்திருப்பேன்.
அன்றும் அவ்வாறே நான்
அலுத்துப்போய்
இல்லம் எத்த
அன்னையின்
ஆறுதல் மொழி கேட்டு
அப்படியே உறங்கிப் போனேன்.
என்னிலை மறந்த இரவிலே
எங்கிருந்தோ அழைத்த
என் கைப்பேசி.
எடுத்துத் தொடர்பிலானேன்.
என் கண்ணுக்குள் வானவில்
பொன் வானத்தில் தேன் மழை.
நெஞ்சத்தில் பூமலர் சாமரம்,
மின்சாரமும் தேகத்தில் பாய்ந்திட
அழைத்தவள் அவள்தான்
அலுவலகத்தில்
அனுதினமும் பார்ப்பேன்.
ஆனாலும் பேசேன்.
என் பார்வைகள் அவள் அறிவாள்.
அவள் பார்வையை நான் அறியேன்.
என்றேனும் எனை உணர்வாளோ
உள்ளத்தால் மலர்வாளோ,
வெள்ளமாய் அன்பைப் பொழிவாளோ
என
ஏங்காத நாளில்லை.
இன்றெனை அழைத்தாள்
இன்குரல் பூத்தாள்.
இசை மழை வார்த்தாள்.
என் நிலை வாடிக்
காண சகியேன் என்று
தன் நிலை பகர்ந்தாள்.
இனியென்ன வேண்டும்?
பெண்மனம் திறந்து
பேசிடக் கேட்டு
என்மனம் தோடிப்
பாடிடச் செய்ய
பின்னர் அழைக்கிறேன் எனச் சொல்லி
கைப்பேசி கீழே வைத்து
விழிகள் மூடி
கைகளும் மடக்கி
என்னுள் பயணமானேன்.
இன் நிலை
இன்ப நிலை
இதன் ஒவ்வொரு நொடியும் நான்
ரசிக்க வேண்டும்
ருசிக்க வேண்டும்.
கரும்புச் சாறின்
கடைசி சொட்டை
நாவை நீட்டித்
தொட்டுறிஞ்சி
தொண்டைக் குழியில் இறங்கும்
சுகம் காண்பதைப் போல்,
சுடு மணலில்
நெடுந்தூரம் நடக்கும் நிலையில்
திடீர் மழையில் சில நேரம்
நனையும் நொடிகளில்
நான் பெறும் சுகத்தை போல,
என்னவளின்
இன்னிசைக் குரல்
என் நெஞ்சில்
இனித்துக் கொண்டே
இருக்கட்டும்.

பாட்டி






















எனைக் கண்டதும் வாஞ்சையாய் அழைப்பவள்
இரு கைகளால் என்னை வாரி அணைப்பவள்.
நெடு நேரம் நெற்றியில் முத்தம் வார்ப்பவள்,
நிஜமான அன்போடு எனைப் பார்ப்பவள்

உலர் தேகம் தடுமாறும் கரம் கொண்டவள்,
மலர் வாடி மணம் வாடா மனம் கொண்டவள்.
தளர் கால்கள் தடுமாற எனைத் தாங்குவாள்
வளமான வாழ்வென்னைத் தொட வேண்டுவாள்.

அவள் பெற்ற மகளெந்தன் தாயா னவள்
மகள் பெற்ற மகன் அவளின் ராசாவாம்,
உடல் சோர்ந்து உளம் சோரும் அந் நாளிலும்
மடை யற்ற அன்போடு எனைத் தேடும் என் பாட்டி.

ஷேர் மார்க்கெட்



ஷேர் மார்க்கெட் எவ்வாறு நடை பெறுகிறது?
ஒரு ஊரின் அடுத்த வனத்தில் குரங்குகள் ஏராளமாய் இருந்தன. நகரத்திலிருந்து ஒரு வியாபாரி, அவன் உதவியாளனுடன் வந்து குரங்குகளைத் தான் வாங்கிக் கொள்வதாகக் கூறி, ஒரு குரங்குக்கு ரூபாய் 5 என விலை நிர்ணையம் செய்தான். உடனே அந்த ஊரிலுள்ள மக்கள் வனத்துக்கு சென்று ஏராளமான குரங்குகளைப் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்து பணம் பெற்று சென்றனர்.
சிறிது நாட்களில் குரங்கு வரத்துக் குறைந்தது. உடனே வியாபாரி விலையை ரூபாய் 10 என நிர்ணயம் செய்ய, மீண்டும் மக்கள் வனத்துக்குச் சென்று குரங்குகளைத் தேடிப் பிடித்து கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்று சென்றனர்.
மீண்டும் குரங்கு வரத்துக் குறைய, இம்முறை வியாபாரி ரூபாய் 20 என நிர்ணயம் செய்துவிட்டு, நகரத்துக்கு சென்றுவிட்டான். அவன் உதவியாளன் மக்களிடம், வனத்தில் குரங்குகள் கிடைப்பது அரிது, எனவே தன்னிடம் உள்ள குரங்குகளை ரூபாய் 15 என்று பெற்றுக் கொண்டு, வியாபாரியிடம் 20 என்று விற்று கொள்ளச் சொன்னான்.
மக்களும் ஆர்வமாய் அவனிடம் இருந்த குரங்குகளாய் 15 ரூபாய் என்ற விலையில் வாங்கிக் கொண்டனர். உதவியாளன் குரங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டு நகரத்துக்கு சென்றுவிட்டான்.
வியாபாரியும், உதவியாளனும் திரும்ப வரவே இல்லை.
படித்தது.- சுமன்