Tuesday 30 July 2013

சிறந்த கல்வி எது?

இரு மாதங்களுக்கு முன்பு எனது நண்பனும், அவனது குழந்தை 13 வயது துஷா வுடன் வந்திருந்தார். நானும் எனது மனைவியும், நண்பரும், அவரது குழந்தையும் காரில் போய்க் கொண்டிருந்தோம். ஒரு சிக்னல் வளைவில் நான் FREE LEFT என்று நினைத்து திருப்பி விட்டேன். காவலர் விசில் ஊதினார். நான், “தவறு செய்து விட்டேனே!” என்று வருந்தினேன். அப்போது பின்னால் இருந்த துஷா, “கவலைப் படாதிங்க அங்கிள்” என்று சொல்லி, உடனே பின் சீட்டில் கால் நீட்டி படுத்து, “அய்யோ, அம்மா!” என்று முனகத் தொடங்கி விட்டாள். என் நண்பனோ, “பார் என் சமத்துக் குட்டிய. இவளால நான் மும்பைல பெனல்டி கட்டினதே இல்ல, போலீஸ் வரும்போது நான் அவசரமாக மருத்துவமனைக்கு போய்க்கொண்டு இருக்கிறேன், என்று சொல்வேன்” என்று பெருமிதப்பட்டான்.
கடந்த மாதம்
என் நண்பர்கள் 14 பேர் சேர்ந்து மகாபலிஷ்வர் மலைக்கு ட்ரெக்கிங்க் போய் இருந்தோம். போகும் வழியில் ஒரு சிறுவனின் குரல் கேட்டது.
“உங்களுக்கு கைடு வேணுமா சார்?” ஒரு 12 அல்லது 13 வயது இருக்கும், பெரிய தொள தொள சட்டை அணிந்து இருந்தான். பெரிய ஆளாக தோன்ற வேண்டுமென நினைத்திருக்கலாம்.
“நீ கைடா? நீ இந்த வயதில் பள்ளிக்கூடம் போக வேண்டுமப்பா!” என் நண்பர்களில் ஒருவர் புத்தி சொல்ல தொடங்கினார். அவனோ, “நான் எட்டாவது படிக்கிறேன். என் தந்தை ஒரு கைடு. அதனால நான் எனது விடுமுறையில ஏதாவது ஒரு இடத்துல வந்து நின்னு, கைடு தேவைப்படுற சுற்றுலா வருபவர்களுக்கு கைடா போவேன்” என்று சொன்னான்.
என்னமோ ஒண்ணு அவன எங்களுக்கு பிடிச்சுது. சன்னி எங்களுக்கு அன்று கைடா வந்தான்.
அது ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடை பாதை. சன்னி ஒரு ரேடியோ போல, மனதில் பதிவு செய்யப் பட்ட எல்லா தகவல்களையும் பொழிந்து கொண்டிருந்தான். அதுவரை நான் கண்ட குழந்தைகளெல்லாம் வரலாற்றை விருப்பமில்லா மனப்பாடம் செய்து ஒப்பிப்பதையே கொண்டிருந்தார்கள். முதல்முறையாக ஒரு சிறுவன் வரலாற்றை விரும்பி, ரசித்து சொல்வதைக் காண எங்களுக்கு அதிசயமாக இருந்தது. அவன் கண்கள் ஒளிர மகாபலீஷ்வர் கதையை சொல்லி வந்தான். எல்லாம் அவனுடைய இடம், பொருள் போல அவன் குரலில் ஒரு பெருமிதம் ஒலித்தது.
நாங்கள் எங்கள் கேமரா கொண்டு புகைப்படம் எடுத்தோம். ஆனால், அவன் எடுத்த படங்கள் துல்லியமாக இருந்தன.
தகவல் களஞ்சியமாக இருந்தான். எல்லா கேள்விகளுக்கும் அவனிடத்தில் பதில் இருந்தது.
நாங்கள் திரும்பும்போது அவன்மேல் ஒரு அலாதி பிரியம் தோன்றிவிட்டது. விடை பெறும் தருணத்தில், அவனிடம் பேசிய தொகையைக் கொடுக்கும்போது அன்பின் மேலீட்டில் கூடுதலாக பணம் கொடுத்தோம்.
“இல்லை சார். என் அப்பா கூடுதலாக எதையும் வாங்கக் கூடாதென சொல்லி இருக்கிறார். செய்த வேலைக்கு மட்டுமே பணம் பெற சொல்லி இருக்கிறார். அவர் சொல்லி இருக்கிறார், நான் சிறுவனாக இருப்பதனால், மக்கள் பேசிய தொகையை விட கூடுதல் கொடுக்க முன் வருவார்கள். நான் அதை ஏற்கக் கூடாது. சொன்ன வார்த்தையை எப்போதும் மீறக்கூடாது என்று,” என அவன் சொன்னான்.
எங்கள் கண்முன் அவன் அணிந்திருந்த பெரிய சட்டையை விட மிகப் பெரிய ஆளாய் தோற்றமளித்தான்.
சட்டென எனக்கு என் மும்பை நண்பனும், அவனது மகள் துஷாவும் நினைவுக்கு வந்தனர்.
மிகப் பெரிய ஆடம்பரமான இண்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் பெண் எப்படி ஏமாற்றுவது எனக் கற்றுக் கொண்டிருக்கிறாள். அதையும் அவளது தந்தை பெருமிதத்துடன் சொல்கிறார். மகளை பாராட்டுகிறார்.
எளிய கிராமத்துப் பள்ளியில் பயிலும் சன்னியோ, வாழ்க்கையின் நேர்மையான தத்துவங்களை கற்று எங்கள் முன் மிகப் பெரிய மனிதனாக தோற்றமளிக்கிறான்.
உண்மையான கல்வி எங்கிருக்கிறது?

படித்தது

No comments:

Post a Comment