Wednesday 24 July 2013

மகிழ்ச்சி



     அன்று அப்பாவுடன் வயல்பரப்பில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மரத்தடியில் ஒரு ஜோடி செருப்பு இருந்தது. தூரத்தில் வயலில் ஒரு முதியவர் உழுது கொண்டிருந்தார். நான் அப்பாவிடம் வேடிக்கையாக, “அப்பா, ஒரு செருப்பை எடுத்து ஒளிய வைக்கலாமா?” எனக் கேட்டேன்.
     அப்பா சொன்னார், “ அது வேண்டாம் மகனே! ஒவ்வோரு செருப்பிலும் இந்த 100 ரூபாய் நோட்டை வைத்துப் பார்!” என்றார்.
     அவர் சொன்னபடி வைத்து விட்டு அந்த பெரியவர் வரும் வழியைப் பார்த்து ஒளிந்து இருந்தோம்.
     சிறிது நேரத்தில் அந்த பெரியவர் வயலிலிருந்து வந்து கைகால் அலம்பி, செருப்பை காலில் இட வந்த போது முதல் செருப்பில் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கண்டதும் எடுத்துப் பார்த்து சுற்றும் முற்றும் யாராவது உண்டா எனப் பார்த்து யாரும் இல்லை என அறிந்ததும் கண்களில் நீர் மல்க, “இறைவா! என் பேரனின் காய்ச்சல் தீர உதவினாயே!” என்று உருகினார்.
     மீண்டும் அடுத்த செருப்பை இட போனபோது அதிலும் ஒரு நூறு ரூபாய் நோட்டைப் பார்த்து, மீண்டும் எல்லா திசையையும் நோக்கி, பின்னர், “இறைவா! உன் கருணையே கருணை. என் சுகக் குறைவான மனைவியின் மருந்து தேவையைப் பூர்த்தி செய்ய உதவினாயே!” என்று இறைஞ்சினார்.
     பார்த்துக் கொண்டிருந்த என் கண்களிலும், என் தந்தையின் கண்களிலும் நீர் கசிந்தது. அப்பா சொன்னார், “மகனே! எப்போதும் ஏழை மக்களின் வலியோடு விளையாடாதே! அவர்களின் மகிழ்வுக்கு வழி காட்டு, அவர்கள் சந்தோஷப் பட்டால், நமக்கு பல மடங்காக அந்த சந்தோஷம் கிடைக்கும்”

No comments:

Post a Comment