Friday 26 July 2013

ரோஜாப்பூ


கனியிதழில் தேன் கொண்ட கண்மணியே என்னவளே!
பனித்துளியில் வெண்ணிலவின் பொலிவதனைப் பெற்றவளே!
வனம் சொரியும் பூவிதழில் மேனியினைக் கொண்டவளே!
தனிமையிலும் என்மனதில் தோகைமயில் ஆனவளே!

ஒரு விழியில் எனைக் கொன்று மறு விழியில் உயிர் தந்து
வரும் வழியில் துணை வந்து வளர் நிலவாய் ஒளி தந்தாய்.
குருஞ்சிரிப்பில் குவளைப்பூ பெருஞ்சிரிப்பில் அலரிப்பூ,
கருங்குழலில் எனைப் போர்த்து கவர்ந்த நீ ரோஜாப்பூ!

தெளிமதுரத் தேன்மழையே, தேனிசையில் தீந்தமிழே,
ஒளி துலங்கும் கண்மணியில் உயிர் கவ்விச் சென்றவளே,
களித்தேனோ கவிமழையில் திளைத்தேனோ உன்னழகில்
பிழைப்பேனோ எப்பிறப்பும் என்னுயிராய் நீ வந்தால்?

No comments:

Post a Comment