Monday, 27 January 2014

வாசிக்கப்படாத கவிதை


புத்தக அடுக்குகளின் பின்புறம் மறைந்திருந்து அந்த சோகக் கவிதையை வாசிக்கத் தொடங்கினேன்.
அங்கங்கே தென்பட்ட அவல ஓசை சிந்திய கண்ணீரால் அழிந்திருந்தன.
உடை விலகிய வார்த்தைகள் கோர்வையின்றி விலகியிருந்தன.
அங்கங்கே தழும்புகளும் அதன் ரத்த வாடையும் நாசியை நெருடியது.
வெளிச்சத்தில் மங்கலாகவும் இரவுகளின் மங்கிய ஒளியில் பிரகாசமாயுமிருந்தன.
உள்ளுணர்வுகளை உணராமல் இச்சைக்கு வாசிப்பவருக்கு அவ்வெழுத்துக்கள் அழகுதான்.
உள்ளூர தெளிவில்லா நீரோட்டமாய் கவலைகளும், சிதைந்துபோன கற்பனைகளும் இறைந்து கிடந்தன.
ஏளனமாய் தோன்றுமவ் வெழுத்துக்கள் எழுத்துப்பிழை கவிதையாய் தோன்றலாம்.
என்றேனும் ஒருவரால் உணர்வுகளை வாசித்து உச்சுக் கொட்ட வைக்கலாம்.
இவையெல்லாம் எழுதியவளின் வாழ்வை உயர்த்தவோ, சிதைத்தவரின் வாழ்வை தண்டிக்கவோ இயலாது.
எனினும், எங்கேனும் ஒரு மாற்றத்திற்கு தொடக்கப்புள்ளியை வைக்கலாம்!

அதிசயமன்றோ!அதிசயமன்றோ!
நான் பதியம் வைத்த
ரோஜாச் செடியின் பூக்களெல்லாம்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வேளையும்,
ஒவ்வொரு வண்ணத்தில் பூக்கிறது!
அதிகாலையில்
கண்குளிரும் வெண்மையாய்,
இடைப்பொழுதுகளில்
எனை கவனமாய் பொத்தி பாதுகாக்கும்
செந்நிற கோபக் கொழுந்தாய்,
மாலையில்
மயக்கும்,
மந்தகாச பொன்மஞ்சள் வண்ணமாய்..,
இரவிலே
எனை அள்ளி அணைக்கவந்த
பச்சையும், நீலமுமாய்..,
என் காதல் ரோஜாசெடியில்தான்
எத்தனை வண்ணங்கள்..!

நிலவில்லா ஆகாயம்

இதய கூடாரத்தின்
கனவு களஞ்சியத்தில்
நினைவுச் சிதறல்களை
மாலையாக்கி
பாதுகாத்திருந்தேன்.

இரவுகளின்
தனிமை பொழுதுகளில்
என் பிம்பத்திற்கு அணிவித்து
அழகு பார்த்திருந்தேன்.

பளீரிட்ட
வெளிச்ச வர்ணப் பகல்களில்
மாலையின் மகத்துவம்
மங்கியதாய் நீ நினைத்தது
என் பிழையில்லை.

ஒளி மழையாயினும்
இருள் தடம் ஆயினும்
என் துணை
இம்மாலையனக் கொண்டேன்.

காலை, மாலை, இரவென
கவிதை பொழுதுகளிலெல்லாம்
நினைவுப்பூமாலை துணையிருக்க,
நிலவில்லா ஆகாயமாய்
காகிதப்பூ வாழ்வில்
வசந்தம் தேடியபடி நான்...!

மேகத்தைத் தேடி

நீள்வானப் பாதையின்
நெடுந்தொலைவுப் பயணத்தில்
நீந்திய. மேகத்தின்
நிழலை தொடர்ந்த பறவை
இடைவெளியின்றி
இணைந்து பறக்கும் ஆவலுடன்
மேலே மேலே எழும்பியது.

வாழ்வு தந்த வள்ளலை
விட்டு விலகி
கனவுடன் காதல் கொண்டு
காற்றினை கிழித்து மேலும் பறந்தது.

விரைந்த வேகத்தில்
சிதைந்த காற்று
உந்தியதால்
உருக்குலைந்த மேகம்
துளிகளாய் மாறி
தாயுடன் கலந்து மறைந்தது.

தன்மேல் விழுந்த
துளிகளின் சிலிர்ப்பில்
தன்னை மறந்த பறவை
மேலும் மேகத்தைத் தேடியபடி
மேலே மேலே பறந்துகொண்டே இருந்தது...!

ஆபித் சுர்தி

ஒரு சிறு பொறி இவ்வுலகையே மாற்றவல்லது என்பதற்கு இவ்வுண்மை கதை நல்ல உதாரணம்

ஆபித் சுர்தி, ஒரு வித்தியாசமான மனிதர். 1935, மே 5 ஆம் நாள் பிறந்த குஜராத்தியான இவர், ஒரு சிறந்த எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட், ஓவியர். இவர் 1993ல் எழுதிய ஒரு புத்தகத்திற்காக தேசிய விருது வழங்கப் பட்டது.
எனினும் உலக அளவில் இவர் புகழப்பட காரணம், இவரது ஒரு சிறு முயற்சிதான். அதற்குக் காரணமாய் அமைந்தது அப்போது ஐ நாவின் தலைவராக இருந்த புட்ரொஸ் புட்ரோஸ் காலியின் கருத்தை இவர் படிக்க நேர்ந்ததுதான். 2025ல் உலகில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் அதீத தண்ணீர் தட்டுப்பாடு காணப்படுமென சொல்லி இருந்தார். ஆபித் சுர்திக்கு தனது பால்ய நினைவுகளும், தண்ணீருக்கு அப்போது அவர்கள் பட்ட பாடும் நினைவில் வந்து முட்டின.
அதே சமயம் ஒரு நண்பர் வீட்டில், அவர் குளியலறையில் ஒழுகும் குழாயைக் கண்டு, அதை சரி செய்யக்கூடாதாவென கேட்ட போது, நண்பரின் பதில் ஆபித் சுர்தியை சிந்திக்க வைத்தது.
நண்பர் சொன்னார், “ஒரு குழாய் சரிசெய்யும் ஆளை கொண்டு இந்த சாதாரண ஒழுகலை சரி செய்ய இயலாது, அது விலை மிகுந்த செயலாகும், மேலும் இந்த செயலுக்காக குழாய் சரி செய்யும் ஆள் வரமாட்டான்” என்று.
ஒரு வி நாடிக்கு ஒரு சொட்டாக வடியும் நீரால் நாம் ஒரு மாதத்தில் 1000 லிட்டர் நீரை இழக்கிறோமென எங்கோ படித்தது அவர் மனதில் நிழலாடியது.
அவர் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு குழாய் சரி செய்யும் ஆளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு ஞாயிறுகளிலும் ஒவ்வொரு அடுக்குமாடியாக சென்று, ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டி, குழாய் ஏதும் ஒழுகுகிறதா? ரப்பர் இணைதடுப்பான் (ரப்பர் ஒ ரிங்க்) ஏதும் மாற்ற வேண்டியுள்ளதாவென சோதித்து சரி செய்து கொடுக்க எண்ணினார். பணம் தேவை பட்டது.
நல்லெண்ணம் இருந்தால் எல்லாம் கூடிவருமென சொல்வதற்கு ஏற்ப, அந்த சமயத்தில் ஹிந்தி எழுத்துக்கு அவருக்கு எதிர்பாராதவிதமாக 1 லட்சம் ரூபாய் பரிசு பணம் வழங்கப்பட்டது.
உடனே செயல்பட்டார். ஒரு குழாய் சரி செய்யும் ஆளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு குடியிருப்பை அணுகி குழாய்களை சரி செய்து கொடுக்கத் தொடங்கினார். ஆம், இலவசமாகத்தான்.
அவரது ஒரு மனித அமைப்பிற்கு Drop Dead என பெயரிட்டு Save every drop or Drop Dead என வாசகத்தை தனது அமைப்பிற்குப் பொருத்தினார்.
முதல் வருட முடிவில் அவர் 1533 இல்லங்களில் கதவுகளை (மனக்கதவுகளையும்தான்) தட்டியிருந்தார். 400 குழாய்களுக்கும் மேல் சரி செய்திருந்தார்.
சிறிது சிறிதாக செய்தித்தாள்களிலும், மீடியாவிலும் அவர் புகழ் பரவத் தொடங்கியது. 2010ல் CNN IBN BJ வின் Be the change (மாற்றமாயிரு) எனும் விருது வழங்கப்பட்டது. அதே வருடம் பெர்லினிலிருந்து வந்த ஒரு தொலைகாட்சி குழு அவரை காலை முதல் மாலை வரை ஒரு ஞாயிறில் தொடர்ந்து ஒளிபரப்பியது.
2013ல் அவர் வசித்த பகுதியில் 40 வருடங்களில் மிகுந்த தண்ணீர் தட்டுப்பாடு வருமென அறிவிக்கப்பட்டு, அந்த மா நில அமைச்சர்கள் ஒன்று கூடி, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முனைந்து கொண்டிருந்தபோது, இந்த சாதாரண மனிதர், தனது சுய நலமற்ற தொண்டால், சிறு முயற்சியால் எவ்வளவு தண்ணீரை சேமித்திருப்பார் என சொல்லவேண்டுமா?
வாழ்க ஆபித் சுர்தி, அவரைப்போல் நாமும் ஏதேனும் செய்து ஒரு சமுதாய மாற்றத்தை கொண்டுவர முயல்வோமா

தொடர்கின்றேன்!முடிவுக்குள் தொடக்கம் நான் தேடேனோ??
முகமின்றி முகமூடி தரித்தேனோ?
விடிவென்று காண்பதும் நிஜம்தானோ?
விடையில்லா வினாவில்தான் மறைவேனோ?

மறையாத நிலைகொண்ட பூவுண்டோ?
மலர் பெற்ற வாசத்தில் பதிலுண்டோ?
விளக்கங்கள் தேடுமென் மனங்கண்டு
விலகாத நேசங்கள் துணையுண்டோ?

துணை நிற்கும் கரம் பற்றி தோள்சேர்த்து
தொலைதூர பாதையென் வசமென்று
பிணையத்தின் நிலைகொண்ட வாழ்விங்கு
பிடித்தேனோ அல்லேனோ தொடர்கின்றேன்!

விழியசைவில்

உலர்ந்த செடியின் வாசம்
உள்ளிருப்பு போராட்டமாய்
நாசித் துளைகளை
குமுறச் செய்தது.

உருட்டிய சோழிகளில்
ஒன்று சிதறி
கணக்கை தவற செய்தது.

காலைப் பொழுதினில்
சுடுங்கதிரவனின் கதிர்
மனத் தளர்வை தந்தது.

தளும்பிய நீர்குடம்
சுமந்த தேவதையின்
இடைவாசம் இழந்தது.

இருந்தும் என் மனம்
உன் விழியசைவில்
வான்வெளியின்
சங்கீதத்தில் இணைந்தது..

தேநீர்அதிகாலை குளிர் நீங்க
வாழ்க்கை அடுப்பினில் வைத்த
கொதித்த நிகழ்வுப் பாலில்
திடமான தேயிலை சாறு கலந்து
எதிர்மறை கோணங்களை
கவனமாய் வடிகட்டி
கவித்தேன் சிறிது கலந்து
பருக நீ தந்தாய்,
பாங்காயெனக்கு,
சுவைத்திட
மனம் சுறுசுறுப்பானது…!

பகுதியாய் வாசித்து நிறுத்திய கதைபகுதியாய் வாசித்து நிறுத்திய கதையொன்று
தலையணையடியில்
கவலையுடன் காத்திருந்தது.

உறங்கப் போகுமுன்னெங்கிலும்
தன்னைத் தொடுவானோவென்று,

புரட்டிய பக்கங்களிலெல்லாம்
அவன் வியந்த விழிகளின் வாசனையே
மேலோங்கியிருந்தது.

மீதமுள்ள பக்கங்களில்
தனது மென்வாசனையை
அவனுக்கென
காத்து வைத்திருந்தது.

என்றேனும்
சில கண்ணீர் துளிகளை
அவன் கண்டிருக்கலாம்.

இன்றும்கூட
அவன் தொடுகைக்காக
விம்மலை வெளிக்காட்டாது
காத்திருக்கிறது...!

விரலழுக்கு


வானில் பறந்தொரு
விண்மீனை கையகப்படுத்தி
ஒளிரும் கைகளுடன்
ஊர்வலமானேன்.
உற்சாகக் குவியலாய்
வனமெங்கும் திரிந்தேன்.
சிதைந்த வானத்தைக் குறித்து
சிந்தித்த நொடியில்
துணுக்குற்று,
விரைந்து சென்று
விண்மீனை ஒப்படைத்தேன்.
விலகாத நினைவுகளாய்
விரலழுக்கு அதன்மேல்
படிந்திருந்தது.
விடிந்ததும் விலகுமென
இரவு முழுதும் விழித்திருந்தேன்..!

கருவிழி

கருவிழியைக் கண்டவனின்
காற்றுத்தேடல் அதிகமானது.
கூர்விழிப்பார்வையாலெனை
கைது செய்வாளோவென்று!

ஏடாகூடம்

அந்த காட்டில் ராஜா சிங்கம் தன் கண் முன் அகப்பட்ட விலங்குகளையெல்லாம் வேட்டையாடி கொன்று புசித்து வந்தது. அதைக்கண்ட வனவிலங்குகள் ஒன்றுகூடி தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்து, சிங்க ராஜாவிடம் போய் முறையிட்டன.
“ராஜா, நீங்கள் இவ்வாறு கண்ணில் படுகின்ற மிருகங்களையெல்லாம் வேட்டையாட வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு விலங்கென நீங்கள் உண்ணலாம்” என்று கூறின.
அதைக்கேட்ட ராஜா மகிழ்வுடன் ஒப்புதல் அளித்தது. சிங்க ராஜா சொன்னது, “எனக்கு நகைச்சுவை மிகவும் பிடிக்கும், எனவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கு ஒரு நகைச்சுவை துணுக்கை கூறவேண்டும். அதைக்கேட்டு அனைத்து மிருகங்களும் சிரிக்க வேண்டும். அவ்வாறு ஒரு மிருகம் சிரிக்கவில்லையெனினும், நான் அந்த நகைச்சுவை துணுக்கை சொன்ன விலங்கை கொன்று புசிப்பேன்” என்று.
அனைத்து விலங்குகளும் ஒப்புக்கொண்டன.
அடுத்த நாள் ஒரு நரி நகைச்சுவை துணுக்கை சொல்லவேண்டி வந்தது. நரியும் மிகுந்த ஆராய்ச்சியில் இறங்கி, சிறந்த நகைச்சுவை துணுக்கொன்று கண்டு பிடித்து, ராஜாவின் முன் வந்து நின்று சொன்னது. கேட்ட எல்லா மிருகங்களும் பெரிய அளவில் இடி இடியென சிரித்தன.
ஆனால் ஒரு ஆமை மட்டும் சிரிக்காமல் இருந்தது. அதைக்கண்ட சிங்க ராஜா, நமது ஒப்பந்தப்படி, ஒரு விலங்கு சிரிக்கவில்லையெனினும், நான் அந்த நகைச்சுவை துணுக்கை சொன்ன விலங்கை கொன்று தின்னவேண்டுமெனக் கூறி, அந்த நரியை கொன்று தின்றது.
அடுத்த நாள் ஒரு மான் மிகவும் தேடியலைந்து ஒரு நகைச்சுவை தேடியெடுத்து வந்து சிங்க ராஜா முன் கூற அனைத்து மிருகங்களும் காடே அதிர சிரித்தன அந்த ஆமையைத் தவிர. மானும் சிங்க ராஜாவுக்கு இரையானார்.
அடுத்த நாள் கரடி நகைச்சுவை துணுக்கை சொல்ல வேண்டிய நிலை. பயத்தில் அந்த கரடிக்கு எந்த நகைச்சுவை துணுக்கும் தோன்றவில்லை. தான் இறப்பது உறுதியென நினைத்தபடி வந்து சிங்க ராஜா முன் நின்று, “அது வந்து ராஜா.........” என்று ஆரம்பித்த நொடி, அந்த ஆமை கபகபவென சிரிக்க ஆரம்பித்தது. ஆமை சிரிப்பதை பார்த்த மற்ற விலங்குகளும் ஒவ்வொன்றாய் சிரிக்க ஆரம்பித்தன. எல்லா மிருகங்களும் சிரிப்பதைக் கண்ட சிங்கமும் சிரிக்க, அதிசயமாக அந்த கரடி உயிர் பிழைத்த்து.
இறுதியில் சிங்க ராஜா ஆமையை அழைத்து, கரடி எந்த நகைச்சுவையையும் சொல்லவில்லையே, பின் எதற்கு சிரித்தாயென கேட்க, ஆமை சொன்னது, “அது வந்து ராஜா, அன்னைக்கு அந்த நரி சொன்ன சொன்ன நகைச்சுவை துணுக்கை நினைத்தேன், சிரிப்பு வந்தது” என்று.
எதையும் உடனே செய்யவில்லையென்றால் இப்படித்தான் ஏடாகூடமாக ஏதேனும் நடக்கும்.

விலை நிலங்கள்செந்தட்டியின் விரல் பிடித்து நடந்த
சிறுமியின் விழிகளிலந்த
சிறு வயலே விரிந்து கிடந்தது.

நெற்கதிர்களும்
அதைக் கொத்தும் பறவைகளும்
கண்ணுக்குள் காவியமாய்..

தந்தையின் கரங்களில்
அறுபட்டு,
தாயின் குத்தலில்
உடைபட்டு,
அரிசியாய் உருமாறி
அவள் வயிற்றின்
பசியாற்றியது பல நாள்.

தந்தை, தாயைப்போல்
வயலும் தன்னைவிட்டுப் போனது.

நகரமாய்,
நவீனமாய் மாறிய
விலை நிலங்களுமாய்,
கிராமங்கள்
தன்னை விற்றுக் கொண்டிருக்கின்றன.

அன்று
அரிசி சோற்றுக்கு
ஆலாய் பறந்த கூட்டம்
மீண்டும் அந்நிலைக்குப் போகும் காட்சி
அவளின் அகக்கண்ணில் இப்போது
தெரியத்தான் செய்கிறது

Monday, 20 January 2014

பொழியட்டும்

வாழ்வின் வசந்தங்கள் உன்னுடன் வசிக்கட்டும்,
காணும் கனவுகள் புதிதாய் இருக்கட்டும்,
நீளுமுன் புருவங்கள் மகிழ்வுடன் வியக்கட்டும்,
நெஞ்சம் உனையெந்தன் சேயென நினைக்கட்டும்,
நம்மிடை நட்பெனும் பாதையும் புலரட்டும்,

நமக்கினி வாழ்விலே இன்பமே பொழியட்டும்!

அறிவுச் சுடர்


அறிவாளிகளின் கூட்டத்தில் நானொருவன்
அரற்றிக் கொண்டிருந்தேன்
அவர்களின் அமைதிசுவாசம் எனக்கு
அலுப்பாயிருந்தது.
என் குரல் மட்டும் தனித்துக் கேட்க
எனக்கு வெறுப்பாயுமிருந்தது.
இடை நிறுத்தி
மௌனமூச்சை சுவாசிக்க முயன்றேன்.
விழிகளில் ஈரம்
வடியத் தொடங்கியது.
அதுவரை மங்கலாயிருந்த பார்வை
விழிநீர்த்திரை மறைப்பில்
வெளிச்ச பூமியை
வெளிக்கொணர்ந்தது.
அமைதியின் வடிவத்தில்
அறிவுச் சுடரை

காணத் தொடங்கியிருந்தேன்.

பிணைக் கைதிகள்

பிரம்மன் நெட்டுயிர்த்தான்,
புதியதோர் 
பட்டுச் சிலையொன்றை
பூமிக்கு பரிசளித்துவிட்டு,


அம்மையப்பனின்
உயிர்கலவையாய்,
அகமும், புறமும்
அப்பழுக்கற்ற தூய்மையாய்,
பிறந்த நொடிமுதல்
பாசத்தின் பிணைக் கைதியாய்..

மொக்கு மொட்டாகி,
மலராகுமுன்,
வாழ்வின் கற்றல்களில்
பள்ளிப்பாடங்களின்
பிணைக் கைதியாய்..

மலர்ந்து மணம் வீசும்
வண்ணப் பொழுதுகளில்
எண்ணச்சிறைகளின்
பிணைக் கைதியாய்..

பூத்தும் காய்த்தும்,
கனிந்த பொழுதுகளில்
விதை காத்து
விருப்பங்கள் தொலைத்த
வாழ்வின் பிணைக் கைதியாய்..

வாழ்ந்த பொழுதெல்லாம்
வாழ்வின் பிணைக் கைதியாய்
வாழாமல் ஏங்கி தவிக்கும்
பட்டுச் சிலையொன்றை
படைத்துவிட்டு
பிரமன் நெட்டுயிர்த்தான்..!

கலைந்ததென் கனவுகள்..!

நிழல்படகின்
நீண்டதொரு பயணம்,
பனிக்காற்றை சுவாசித்து,
பெரும் அலையை தாண்டி, 
நிலவொளியில்
நினைவுத் துடுப்புகளை
வேகமாய் துழாவி,
எக்கரையும் நாடாமல்
இனியதொரு பயணம்.

அன்பு மழைத்தூரல்
ஆர்ப்பரிக்கும் புயல் காற்றாய் மாறி
அலை அடுக்கடுக்காய் உயர்ந்து
துடுப்புகளை பறித்தெடுக்க
நம்பிக்கை நங்கூரம் வீச,
நிலம் தேடி,
கரை நாடி,
கலைந்ததென் கனவுகள்..!

சிறகிழந்த சிட்டுக்குருவி

சிறகிழந்த சிட்டுக்குருவியொன்று
மடிதேடி வந்தமர்ந்தது
எந்தன் சிந்தனைச் சிறகில் 
இரண்டெடுத்து பொருத்திவிட
சிறிது தூரம் பறந்து
மீண்டுமென் மடி வந்து அமர்ந்தது.
சிறகு பொருத்திய இடமோ
ரணமாயிருந்தது.
எனக்கு புதிதாயிரண்டு
முளைத்திருந்தது.
மீண்டும் இரண்டெடுத்து
பொருத்த முயல்கையில்
எந்தன் கண்ணைக்
கொத்திவிட்டு
தத்தி தத்தி
ஓடி மறைந்தது,
கனவுப்பார்வைக்கு
விழிகளின்றி
விழித்தெழ வழியின்றி நான்….!

விரலிணைய வேண்டுமடி!

இடைவெளிகள் பெருகுவதால்
கருவிழியும் நிறையுதடி,
இமைக்கதவின் விரிசலிலே
பெருமழையாய் பொழியுதடி,
மடைதிறந்த பொழுதுகளில்
முடிவுறைகள் இல்லையடி,
மலைத்தொடரின் நீளமெனும்
நம் தொலைவை தவிர்த்திடடி!

ஆழ்மனத்தில் நானறிவேன்
அன்புச் சுடர் எரியுதடி,
தாழ்வாரப் படிகடந்து
தாவியெனைத் தழுவிடடி!
நாட்கணக்கில் இல்லையடி
நமதுறவு யுகங்களடி,
வாழ்வதற்கு நம்மிருவர்
விரலிணைய வேண்டுமடி!

கிழ ஆடு

அந்த கிழ ஆடு ஊரின் ஒதுக்குப்புறமான சாலையில் நடந்து வரும்போது அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணற்றைக் கவனியாமல் அதனுள் தவறி விழுந்துவிட்டது.
அவ்வழியே சென்ற பலரும் அது கிழ ஆடு என்பதால் அதை காப்பாற்ர முன்வரவில்லை. மாலை ஆகியும் அந்த ஆடு அந்த பாழுங்கிணற்றில் சாகாமல் தவித்தபடி இருந்தது.
ஊர்மக்கள அதை பார்த்து, பரிதாபப்பட்டு, அனைவரும் கூடி, மண்ணை வெட்டி சரித்து அந்த கிழ ஆட்டை அந்த பாழுங்கிணறிலேயே சமாதி ஆக்கிவிடுவோமென தீர்மானித்தனர்.
அதன்படி அனைவரும் சென்று மண்ணை வெட்டி சரிக்க ஆரம்பித்தனர். மண் வெட்டப்பட்டு தன் மேல் வீசப்படுவதைக் கண்ட கிழ ஆடு, தன் உடலை சிலிர்ப்பியது. மண் சிதறி காலுக்கு அடியில் ஆனது.
மீண்டும் தன்மேல் மண் வீசப்படவே, உடலை ஒவ்வொரு முறையும் சிலிர்த்தபடி, மண்ணை உதற, மண் காலுக்கு அடியிலாக சிறிது சிறிதாக ஆடு மேலெழும்பி தரைக்கு வந்து அனைவரும் ஆச்சரியபடும் விதமாக, உயிர்பிழைத்தது.
நாமும் பலநேரம் அப்படித்தான். நம்மேல் வீசப்படும் குற்றச்சாட்டுகளையும், ஏளணங்களையும் உதறி காலுக்கடியில் ஆக்கினால், உயர்ந்த நிலைக்கு வருவோம்!

மூன்றே வார்த்தைகள்

மூன்றே வார்த்தைகளிலவள்
முழங்கிய கவிதையென்
மென்பொழுதுக்குள் நுழைந்து
முடிவின்றி நீண்டிருந்தது.

உலர்ந்த கனவிற்குள்
சிறுதூரலாய் தொடங்கி
அடை மழையாய் கனத்திருந்தது.

வாசிப்பினூடே
மயிற்பீலி தீண்டல்களால்
இடைவெளிசுவாசத்தை
கூட்டியிருந்தது.

வாசல்கடந்தென் வீதிகளில்
வெளிச்சப்புள்ளிகளை வாரியிறைத்து
நிழல்தாமரைகளில்
ஒளிமழை பெய்வித்திருந்தது.

மிதந்த தென்றல் வாசமாய்
மூச்சுக்குழல்களில் நுழைந்து
உயிரணுக்களில்
உற்சாகபூங்காற்றை
வீசியிருந்தது.

மறைந்திருந்த
மாலை பொழுதொன்றில்
மீண்ட அவள்
சிதறிய வார்த்தைகளை நான்
எழுத்துக் கூட்டி
வாசிக்கும்வரை…!

இனிய உழவர்தின வாழ்த்துக்கள்!

வாழ்வியல் தர்க்கமில்லை,
வாழ்க்கையை குறித்த தேடலுமில்லை.
நட்பினை ஆழ சுவாசிப்பதில்லை,
உறவுகளோ தினம் தரும் தொல்லை,
அவமானத்தை சாடுவதில்லை,
அதன்மீதே தான் வசிக்கும் நிலை,
தன்சுகம் கண்டதில்லை,
தன்குடும்பத்தின் சுகமே எல்லை.
உழைத்துழைத்து,
உறிஞ்சப்பட்டு,
இறுதி சொட்டையும்
இழக்கும் உழவனை
எட்டும் ஒரே சுகம்,
பேரக்குழந்தையின் முத்தமும்,
நாள்தோரும் கிடக்கும் தீர்த்தமுமே!
தன்னலம் நோக்காமல்
பிறர் நலம் மட்டுமே நோக்கும்
புண்ணிய பெரு வாழ்வு வாழும்
உழைக்கும் தொழமைகளுக்கு,
மாற்றங்கள் நிகழ்ந்து,
மகிழ்ச்சிக் கடலில் நீந்திட
இன்னாளிலொரு தொடக்கம்
நிகழுமென ஏக்கத்துடன்,
இனிய உழவர்தின வாழ்த்துக்கள்!

நீயாய் நான்

மின்னல் கீற்றாய் நிலவொளி
சாளரத்துளையில் ஒழுகும் நேரம்,
மடி சாய்ந்த
மலர் முகமேந்தி,
என்னிடமின்னும் 
என்ன எதிர்பார்க்கிறாயென்றேன்.

உன்னைத்தானென்றாள்.
உன்னிடமென்னை
தொலைத்தவனன்றோ நான்?
விரல் பிடித்து
கடித்தபடி கேட்டாள்,
மிச்சமாயேதும்
உண்டோவென
தேடுகிறேன்.

உடலன்றி வேறேதும்
எனதில்லை எனதுயிரே!
முதல்முறை சந்திப்பில்
முழுதாயிழந்தவன்.

உலகிற்கு நான் நானாய்,
உண்மையில் நீ நானாய்,
உயிருடன் பேசு,
உண்மை உணர்வாய்.

நீயில்லா பொழுதென்று
நானெதையும் உணர்ந்ததில்லை.
நீயாய் நான் வாழ்வதால்,

கவிதையின் வரிகளில் துளிர்ப்பது
காதலின் மிச்சம்,
கண்களில் தெரிவதே
காதலின் உச்சம்.
கண்ணை பாரென்றேன்.
கவ்விக்கொண்டாளென்னை.
கவிதை முற்றும்!

காயாத பலகை

காயாத பலகையில்
செய்த கதவின்
கைப்பிடியை 
கடுமையாயிழுத்தவாறு நான்…
விழியீரமுண்டு
இறுகிய கதவை
எத்தனையிழுத்தும்
என்னுடன் வராமல்…
வரும்வரையிழுக்கவோ?
உடையுமென்று தவிர்க்கவோ?

மஞ்சள் மலர்

அலுப்புடன் வந்தவனின்
கரம் பிடித்து
கைப்பையை வாங்கி வைத்து
முகம் கழுவி வருவதற்குள்
கோப்பையை ஏந்தி
நொடிக்கு நூறுமுறை
எனையழைக்கும்
என்னவளன்று
மஞ்சள் மலராய்
சுருண்டு கிடந்தாள்.

என்னவாயிற்று?
அருகமர்ந்து
கரம்பிடித்து மடியிருத்தி கேட்க,
வேதனையில் முகம் சுளித்து
என்மடியில் தலை புதைத்து,
இயலாத நிலை உரைத்தாள்.

தேநீரெடுத்து கொடுத்து,
கை பிடித்து,
கால் பிடித்து,
தலை பிடித்து,
வேதனையை நீக்க
வெகுவாக முயன்றும்,
பிடித்தத்தில் போகாத வேதனை
எனையினியும் பிடித்ததில்
கரையக் கண்டேன்!

உறுத்தும் உணர்வுகள்

மாலை வெயிலில்
மனச்சிறகை விரித்த பறவையின்
அலகுக் கூர்மையில்
அகப்பட்ட உணர்வுகள்
தெளிவற்ற வானத்தில்
வீசப்பட்டு
மோதிய காற்றின்
ஆளுமையில் அமிழ்ந்து
துளித்துளியாய்
தரையில் சிதறி
ஆழ்கடல் அடைந்த பின்னும்
உணர்வுகளாய்
உறுத்தியபடியே இருந்தன!

Monday, 13 January 2014

போகியாய்

அவளுக்கு கோபமென்றால்
அப்படியொன்றும்
பாத்திரங்கள் பறக்காது,
வார்த்தைகளும் நொறுங்காது.
உணவேதும் வருந்தாது.
இறுக்கமாய் சூழல்
மாறிப்போகும்,
இளஞ்சூடு எங்கும்
பரவி நிற்கும்.
வார்த்தைகளெங்கும்
வறண்டிருக்கும்.

அன்றுமவளப்படித்தான்,
எதற்கந்த கோபம்?
எத்தனை கேட்டும்
பதிலில்லை.
கோப்பையில் தேநீர்
வழிந்தது
அன்பின் சுவையின்றி,

எழுந்து சென்று
இடைபற்றியிழுத்து
என்ன கோபமென்றேன்.
நேற்றிரவு அவள்கேட்ட உதவியை
செய்யாமற்போனதும்,
அதனால் வந்த சிறு சலசலப்பும்,
அப்பொழுதே நான்
மறந்துவிட்டிருந்தேன்.

அவளதையெடுத்து
மூளையெங்கும்பரவ விட்டு
முகஞ்சுளித்தபடியிருந்தாள்.
எனக்கோ,
அவளென்ன உதவி கேட்டாள்,
என்னவிதமாய் ஊடல் வளர்த்தோமென
நினைவடுக்குகளிலேதுமில்லை.
அதன்பின் நடந்த
கூடலே வியாபித்திருந்தது.

கைப்பற்றி கொண்டுபோய்
புறத்தோட்டத்திலிருத்தி,
பூக்களின் மென்மையை
அவள் மனத்துடனிணைத்து
துளியாய் அரும்பிய உதடின்
வியர்வையை துடைத்து,
அன்பே, எனக்கிது
குறையோ? அறியேன்.
மறதியின் பிடியில் நான்,
ஊடல்கள் பிடிக்குமெனினும்
உள்ளத்தில் நிலைப்பதில்லை,

பாரங்கள் சேரச் சேர
மனச்சுமை நமை
மாய்த்துவிடும்.

என்றும் போகியாய்
ஊடலை அன்றே கொழுத்தி
உள்ளத்தை மலர்த்துவோம்,
இன்றெனில்,
இன்றைய ஊடல்
இனிப்பற்று போகும்.

வாழ்தலினிதே!
வாயென்னுயிரே!

Saturday, 11 January 2014

குதிரையின் காற்றுவிரைந்தோடிய குதிரை
வனமெங்கும் பரவிக்கிடந்த காற்றில்
சிறிதெடுத்து குடுவையில் அடைத்து
தனக்கென்று பத்திரப்படுத்தியது.

போதாதென்று
மூச்சுக்குழலில் முடிச்சிட்டு
உள்வாங்கிய காற்றையும்
ஒளித்துகொண்டது.

முடிவுறும்காலை
உணரலாம்..
பொதுவில் கிடக்கும் காற்றை
தனக்கென்று பதுக்கியது

தவறென்று..!