Monday 22 July 2013

பக்திச் சத்து

    தன் நிலை உணராத உன்மத்தம்தான் உண்மையான பக்தி என்பார்கள். இதற்கு மகாபாரத்த்திலேயே ஓர் உதாரணம் சொல்லலாம். விதுரர் எப்போதும் கிருஷ்ணர் நினைவாகவே இருப்பவர். அவருடைய மனைவியும் அப்படித்தான். கிருஷ்ண பக்தியில் தன் கணவரைவிட எந்தவகையிலும் குறைந்தவள் இல்லை அவள்.
    விதுரரின் வீட்டுக்கு வந்திருந்தார் கிருஷ்ணர். அப்போது விதுரர் வெளியே போயிருந்தார். வீட்டில் விதுரரின் மனைவி மட்டும்தான் இருந்தாள். கிருஷ்ணரைப் பார்த்த ஆனந்தத்தில் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். பிறகு உடனே சுதாரித்துக்கொண்டு, பகவானை வரவேற்று அமரச் செய்தாள். நிறைய வாழைப்பழங்களை கொண்டுவந்து பக்திப்பரவசத்தோடு உரித்து உரித்துக் கொடுக்கத் தொடங்கினாள்.
    சில நிமிடங்களில் வீடு திரும்பிய விதுரர் வீட்டினுள் கிருஷ்ணர் அமர்ந்திருப்பதையும் தன் மனைவி அவருக்கு வாழைப்பழம் உரித்துக் கொடுப்பதையும் பார்த்து திடுக்கிட்டார்.
    ஆமாம், பக்தி மயக்கத்தில் பழத்தை தூர எறிந்துவிட்டு, தோலை மட்டும் கண்ணனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மனைவி. கண்ணனும் மிகுந்த பிரியத்துடன் தோலை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
    பதறிப்போன விதுரர், “கடவுளே, இதென்ன அபசாரம்...!” என்று துடித்தார். பக்தி பரவசத்திலிருந்து சுய நினைவுக்கு வந்த விதுரரின் மனைவியும் நடந்ததை நினைத்து பயந்து நடுங்கினாள். கிருஷ்ணர் புன்முறுவல் பூத்தார். “பதறாதீர்கள். தோல், பழத்தை விட ருசியாக இருந்தது. ஏனென்றால், இதில் பக்திச் சத்தும் சரணாகதிச் சுவையும் நிறைந்திருக்கிறதே!”
படித்தது-- சுமன்

No comments:

Post a Comment