Thursday, 25 June 2015

பாலைவன மணற்துகள்
பரந்து கிடந்த பாலைவனப் பரப்பில்
சுடுமணற்துகளை ஒவ்வொன்றாயெடுத்து
பத்திரப் படுத்திக்கொண்டிருந்தேன்

பொறுமையிழந்து இருகைகொண்டு
வாரியெடுக்க முனைகையில்
விரலிடுக்குகளில் வழிந்தவையே யெந்தன் கவனமீர்க்க
எஞ்சியவை சட்டென அடித்தப் பெருங்காற்றில்
சிதறிப் போயின

ஓரிரண்டுத் துகள்கள்
விழி நுழைந்த உறுத்தலில்
துளிர்த்தத் துளிகள்
பாலையை நனைக்கக்கூடுமோவென அஞ்சினேன்

ஆங்கு அவள் தொலைவில்
நடந்து வருகையில்
கானலெனத் தோன்றி
அடுத்து வர உதவுமோவெனவும்
ஏங்கினேன்

விடையறியா கேள்விக்குள் நான் வீழ்ந்திருக்க
வினாக்களை மட்டுமே சுமந்த அவள்
வருவாளா

விடை பகர்வாளா?

சூ.சிவராமன்
கருத்தாய்வு

சூ.சிவராமன்

இனிய நண்பர் சூ.சிவராமன் எனக்கு ஒரு வருட காலமாக நட்பில் உள்ளார். மிக அற்புதமான எழுத்தாளர். உயர்ந்த சிந்தனையும் அரிய கருத்துக்களும் இனிய சொல்லாடலும் கலந்து இருக்கும் இவரது படைப்புகளில்.
பலப்பல நண்பர்களுடைய அருமையான கவிதைகளை தனது பக்கங்களில் பதிவிட்டுப் பாராட்டி மகிழ்வார்.
இவர் ஒரு சிறைந்த வாசிப்பாளர். படித்த புத்தகங்களை பற்றி அடிக்கடி முக நூலில் சொல்வார். நமக்கும் படிக்க மிகவும் ஆவலாக இருக்கும்.
இவரது எழுத்தில் சமூக அக்கறை மிக அதிகமாக்க் காணப்படும்

நினைவாயிருக்கிறாய்...

என் கண்ணீர்த் துடைத்த
முந்தாணையிலொன்று
பிடித்துணியாகி கிடக்கிறது


என்னும் கவிதையில் தன்னலமற்ற தாயன்பின் பெருமையை எத்தனை எளிதாக அதேவேளையில் உண்ர்வுகளில் ஆழப்பதியும் வண்ணம் சொல்லியிருக்கிறார்.

என்னவாக இருக்கும்...
அப்படியொன்றும்
உருகி உருகி காதலித்து விடவில்லை
பீச்சோ பார்க்கோ
காமத்தில் கட்டி உருளவுமில்லை


என்னும் இக்கவிதையை எல்லோரும் படித்துப் பாருங்கள். இவரது கேள்வி சாட்டையடிபோல் மனதை தைக்கும். என்னால் இன்றுவரை பதில் சொல்ல இயலவில்லை.

சில்லுக் கோடு விளையாடுகிறாள்
சித்ரா

சின்னச் சின்னக் கட்டங்களில்
நொண்டியடித்து தாவுகிறாள்


என்னும் கவிதையில் எவ்வளவு அழகாக எதார்த்த வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகிறார்.

உன்னதமான எழுத்தாளர். தமிழை மிகத் தூய்மையாக அழகு மிளிர எழுதுகிறார். இவரது படைப்புகள் உலகளாவி புகழ்பெறவேண்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்

தவிப்பு
அத்தனை அலைச்சலின் முடிவில்
அன்றலர்ந்த செந்தாமரை முகத்தாளின் வாட்டம்
வாகனத்தை முடுக்கவா
சாலையோரம் நிறுத்தவாவென சிந்திக்க வைத்தது

சட்டென தேகமெங்கும் பரவிய வெப்பம்
அடுத்துள்ள மருத்துவரை
சடுதியில் அடையச் சொன்னது

அவளோ
நானடுத்து இருப்பதனால்
தான் நடுங்கப் போவதில்லையெனச் சொல்லி
வீட்டிற்கே வாகனத்தை
விரட்டுங்களென்றாள்

அந்நேரம் சொல்பேச்சுக்கேளாமையே
அவசரத் தேவையெனவுணர்ந்து
மருத்துவமனை கொண்டு நிறுத்தினேன்

அவளை விட தவிப்பது
நானென வுணர்ந்த செவிலியர்
ஆங்கோர் இருக்கையை காட்டி
அமைதியா யிருவெனச் சொல்லி அகன்றனர்

இருக்கவியலா இருக்கையில்
பொறுக்கவியலா படபடப்பில்
கையிலிருந்த நீரை
கபளீகரம் செய்திருந்தேன்

கடந்துபோன சில நிமிடத்துளிகளில்
கற்பனை சங்கை ஊதாமல்
காட்சித்திரைகளை விரிக்காமலிருக்க
ப்ரம்ம ப்ரயத்தனம் தேவைபட்டது

இடுப்பிலிட்ட ஊசியின்
வலியையும் பொருட்படுத்தாது
என் தவிப்பையுணர்ந்து வேகம் வந்தவள்
அடுத்திருந்த இருக்கையிலமர்ந்து
மென் கரம் கொண்டு என் கரம் பற்றி

எனதன்பின் கவசமிருக்க
எந்நாளும் தனக்கொன்றும் நேராதென்று
விரலசைத்து உயிர்வழி

வார்த்தைகளை உணர்த்திக் கொண்டிருந்தாள்

முட்செடி

அக்குறுகலான பாதையில்
வளர்ந்திருந்த முட்செடிமேல்
உதிர்ந்த மலரிதழ்களின்
காய்ந்த வாசனை பரவியிருந்தது

சுகந்தமென்பதறியாது
கருத்தும் பழுத்தும்
கூர்கொம்புகள் நிறைந்தும்
விஷம் தோய்ந்திருப்பதாயும் சொல்லப்பட்ட முட்செடி

கார்முகிலோ வெண்பஞ்சுத் தூவலோ
வண்ணத் தோரண மின்னலோ
தனக்கொரு புன்னகையைத் தர
வாய்பில்லையென்றே நினைத்திருந்தது

ஊர்ந்திழையும் அரவமோ
பாய்ந்தோடும் முயல்களோ
மதயானைக் கூட்டமோ
ஆர்ப்பரிக்கும் அரிமாவோ
தன்மேல் பாதம் வைத்தால்
பின்னர்
தரைமேல் வைப்பதரிதெனவே
தனித்துவம் பெற்றிருந்தது

மலர்வாசம் சூழ்ந்த
இளந்தென்றல் காற்றில்
மகிழ்ந்தாடி வரும்
வண்ணத்துப் பூச்சிகள் மட்டும்
மேலமர்ந்து தவழ்ந்து
மலர்ந்து செல்வது
தன்னையுமவை
மலர்கூட்டதிலொன்றென
நினைப்பதனால் இருக்கலாமெனவும்
உணர்ந்தேயிருந்தது

கட்டாரி கொண்டு
வெட்டிக்களைகையிலும்
கண்ணீர் துளிர்க்கும் விதமறியா
கல்நெஞ்சுக்காரனென
சுற்றியிருந்த சகச் செடிகள்
சொல்வதைக் கேட்டும்
கலக்கமோ முறுவலோயின்று
மரணிக்கும்விதம் அறிந்தேயிருந்தது

எனக்குமது
பாடம் கற்பிக்குமோவென

காத்திருக்கத் தொடங்கியிருந்தேன்...!

Monday, 22 June 2015

பொய்
பொய்யான வானம்
பொய்யான பூமி
பொய்யான காலம்
பொய்யான தேசம்
பொய்யான மனிதம்
பொய்யான அறிவு
மெய் ஞானம் எங்கே
மெய்யான நானும்
மெய்யற்றுப் போனால்
பொய்யாகுவேனோ
பாதைகள் புரியா
இலக்குகள் அறியா

பயணங்கள் ஏனோ?

ஆலிங்கனம்
பூக்கவியலா  தாகத் தடாகத்தின்
ஏக்கத் தாமரை அமிழ்ந்து காத்திருக்க
வெப்பச் சூரியனாய்
இதழ் தொட்டுக் கதை பேச
மொட்டுத் துடித்திருக்க

கச்சைக் குடித்திருந்த
இச்சை சுகங்களில் வெட்கம் பூத்திருக்க
கட்டியணைத்து
கசக்கி நுகர்ந்ததில் பித்தம் பிடித்திருக்க

எச்சில் முத்தத்தில் கட்டில் சந்தத்தில்
கட்டுக் குலைந்திருக்க
நெற்றிப் பொட்டில் மீசைச் சிறகுகள்
புதுச் சிற்பம் வரைந்திருக்க

பின்னங் கழுத்தினில் பூனை முடியினில் 
மெய் யுத்தம் நடந்திருக்க
வெட்டிச் சாய்த்திடும்
நாவின் தடவலில் சிக்கிப் பரிதவிக்க
உச்சம் என்பதில் மிச்சமில்லாமல்
அச்சம் தவிர்த்திருக்க
ஆலிங்கனப் பெருவெள்ளம்
ஆசைத்தீயென கனன்று அலங்கரிக்க...

சுந்தரி

செம்மொழியாலே எனை கொய்து
செவ்விதழாலே சிறை செய்யும்
செவ்வரளிப் பூவே
                                                                 நீயேயென் சுந்தரியே!

Sunday, 21 June 2015

மந்தகாச பார்வை

மந்தகாச பார்வை கொண்ட மனோரஞ்சிதம்
மைய லவள் கூந்தல் மின்னும் மலர் கோபுரம்
அந்திவானம் போலிரெண்டு அதர கோவையும்
அமிழ்து கொண்டு பருக தூண்டும் வேளை மந்திரம்.
நங்கை நாசி நறுமண முல் லைப்பூவின் மணம் கொண்டிட
நாயகனும் இறுகணைத்து சுவாசம் பெற்றிட
மங்கல நாண் பூண்ட மங்கை மார்பில் சாய்ந்திட
மன்னவன் தன் விண்ணுலகம் கண்ணில் காணுவான்

உற்று நோக்குஉலகின் குறைகளை
உற்று நோக்கத் தொடங்குபவன்
தனது பிழைகளை
கவனிக்க தவறுவான்!

அழகே
தெற்றுப்பல் சிரிப்பால்
வெற்றுத் தாளெல்லாம் 
கவிதை பாடியது

Saturday, 20 June 2015

இனிய தந்தையர் தின வாழ்த்து

உன்னில் உதித்தவனென் உணர்வைப் படித்தவன் நீ என்றும் நானுமது உம் மகவாய் உடனிருக்க நான் நானாகவே சிறக்க துணை நிற்கும் முதல் தோழன் நீ
அரிச்சுவடி அறியுமுன் அறிவறிவித்த முதற்கண் ஆசான் நீ தாயகன்ற பொழுதுகளிலன்றி 
தனிமையுணரும் நொடிகளுக்குள் 
தவமாயிருந்திட்ட 
எந்தாயுமானவன் நீ
எந்தையே இன்னுயிர் தந்த நீயே 
எனக்கு எல்லாமுமாய் நெடிதுயர்ந்து நின்றாயே...
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.