Sunday, 30 August 2015

நான் நானாக

மருதாணியிட்ட கரங்களில்
பூத்த செவ்வழகோடு
விழி பொத்தி
மென்பாரம் முதுகிலழுந்த
சங்கு கழுத்தை தோளிருத்தி
கனியிதழால் செவிமடலுரசி
பிறமொழியில்
அம்மூன்று வார்த்தையை உதிர்த்தாள்

வானெங்கும் விண்மீன்கள் எனை நோக்கி
வர்ணப்பூக்களை சொரிந்தன
மேனியெங்கும் மலர்த்தென்றல்
தழுவி நழுவிப் போனது
பூலோகமுழுமையும்
மலர்ச்சோலையாய் பூத்திருந்தது
குளிர்மேகம், தண்ணிலவு என
எல்லாமெனை
இன்பபுரிக்கு கொண்டு சென்றன

ஐராவதம், நந்தி, கருடன், மயிலென
கடவுளர் அவர்தம் வாகனங்களை
எனக்கென அனுப்பி
உலகைச் சுற்றிப் பார்க்கவைத்தனர்

செவிப்பறைகளில் இளையராஜா
சங்கீதமாய் இழைந்தார்
செந்தமிழ்த்தாய் தனது ஒராயிரம் கவிதைகளை
ஒரே சமயத்தில்
கற்றுத்தந்து முடித்திருந்தாள்

இத்தனை காலம் சொன்னதில்லையா?
உண்டு
இதுகாறும் நான் உணர்ந்த்தில்லையா?
உணர்ந்திருக்கின்றேன்
இன்றென்ன புதிதாய்?
ஆம்,
நான் புதியவனாக
நான் அழகனாக
நான் தகுதியுடையவனாக
நான் நானாக
இன்றுதானே உணரப்பட்டிருக்கிறேன்
ஏற்கப்பட்டிருக்கிறேன்..

அதன் ஆனந்தம்
நீங்களும் உணருகையில்
இவையெல்லாம் உங்களுக்கும் நடக்கலாம்...!

Saturday, 29 August 2015

எனது அழகான கனவு

கச்சிதமான அக்கனவுக்குள்
ஒரு அழகான கவிதை வரையப்பட்டிருந்தது

இயற்கையின் பச்சை வர்ணங்களற்று
கருப்பு வெள்ளை சித்திரமாகத்தான் இருந்தது

நறுமணம் நிறைந்திருந்ததாகத் தோன்றினாலும்
அவை பூக்களில் பிறந்ததாகத் தோன்றவில்லை

உணர்வுகளின் இரைச்சலையும் மீறி
நிசப்த சங்கீதத்தால் இழைக்கப்பட்டிருந்தது

கனவின் செல்லுலாயிட் சித்திரங்களினூடே
உரக்கக் குரைத்துக்கொண்டிருந்த தெருநாயும்
உள்ளுக்குள் தவித்துக்கொண்டிருந்த மனநாயும்
ஒன்றெனவே தோன்றியது

எந்தவொரு வரியும் வாக்கியமும்
என்றோ படித்த
எங்கேயோ கேட்ட கவிதையாகவோ
கவிதையின் கருவாகவோ இருக்கவில்லை

ஒற்றை பக்கத்திலெப்படி
ஓராயிரம் நிகழ்வுகளை புதைத்துக் கொள்ளமுடியுமென
கேள்வியெழும்போது
உனதொற்றைப் பார்வை
மனிதனின் அத்தனை உணர்வுகளையும்
பதுக்கிக்கொன்டிருந்தது
ஒப்பிட ஏதுவாயிருந்தது

அக்கனவின் சாராம்சமோ, விவரிப்போ
உங்களுக்கு அவசியப்படாது
ஏனெனில்
எனக்கு அழகாகத் தோன்றுவது
உங்களுக்கும் அப்படி இருக்கவேண்டுமென
அவசியமில்லையே..!

Thursday, 27 August 2015

கண்ணீரெனும் ஆயுதம்

அவ்வழக்காடு மன்றத்தில்
தீர்ப்பாளாராகவும்
வழக்காடுபவராகவும் அவளேயிருக்க

கூண்டில் நிறுத்தப்பட்ட எனக்கு
கேள்விகளுக்கான பதிலளிக்க
அதிகாரமளிக்கப்படாத நிலையில்

வீசப்பட்ட வினாக்களின் வீரியத்தில்
விடையளிக்க இயலாமலும் போக

குற்றம் நிரூபிக்கப்பட்டு
தண்டனை உறுதி செய்யப்படுமெனும் எண்ணத்தில்

ஏவுகணைகளை எதிர்கொள்ளத் தயாராக
இரு செவிகளையும் மடக்கி
கேடயமாக்கி காத்திருந்தேன்

அந்தோ அந்நொடி
அவள் விழியுதிர்த்த ஒற்றைத்துளியில்
என் சகலமும் ஆடிப்போக
எண்சாண் உடலை வீழ்த்திச்
சரணடைந்தேன்

என்ன ஒரு ஆயுதமடா சாமி….!!!!

வார்த்தையம்புகள்உணர்வேறிய வார்த்தைகளின்
உற்சவ நாளது

ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியவைகளில்
ஒன்றுகூட தனதிருப்பிடம் மாறாமல்
தனித்தன்மையுடன்
இயல்புத்தன்மை கெடாமல்
கோர்வை கலையாமல் இருந்தன

முழுமையும் தெளிவும் பொருந்திய அவை
நாக்கு நாணேற்றப்பட்டு
சென்றடையும் இடங்களை
அம்புகளாய் தாக்குமென்பதில் ஐயமிருக்கவில்லை

சுக்ரீவனை திருப்தி செய்ய
ஏழு மராமரங்களை ஒருசேரத் துளைத்த
இராமனம்பு போன்று
எத்தனை தடையுத்தரவு வரினும்
அவற்றையுந் துளைத்து
அகமகிழ தயாராயிருந்தன அவ்வார்த்தைகள்

தண்மையும் திண்மையும் பெற்றிருந்ததால்
எய்பவனின் எண்ணங்களை
எளிதில் கொண்டு செல்ல
ஏதுவாகதும் இருந்தன

வீழ்த்த முனைந்து
விழிதிறந்த வார்த்தைகளினெதிரில்
அன்பெனும் அருங்கேடயமிருக்கக்கண்டு
ஒவ்வொன்றும் தொண்டைக்குழியில் தங்கி
அகத்தில் கரையத் தொடங்கின

பிரிதொரு நாளிலவை
வெளிவர நேருமானால்
முந்தைய வீரியம் இராதெனத் தெரிந்தே
புதிய சில வார்த்தைகளை தேடியெடுத்து
பக்குவப்ப(ட)டுத்தத் தொடங்கினேன்..!

Saturday, 22 August 2015

இனி என்ன நடக்கும்
இருளடர்ந்த கொடும்பாதையில்
கைத்தடியுமற்ற அந்தனின் தளர்ந்த நடையுணர்ந்து
ஒளியூட்ட வந்தவொரு விளக்கு
எல்லைவரை உடனிருந்து
எத்தவைக்குமென இருமாந்திருந்தான்

விழியற்றவனின் இறுமாப்பு
வீதியோர சாக்கடையில்
வீழ்த்தப்படுமென உணராது
உரிமையுடன் விளக்கை
உற்று உற்றுப் பார்த்து நடந்தான்

பஞ்சடைந்த விழிகளில்
படர்ந்த வெளிச்சம் சிறிதெனினும்
அரவங்களை தவிர்ப்பதற்கு
அது போதுமாயிருந்தது

வரப்போகும் அதிகாலை வெளிச்சம்
போதுமெனச் சொல்லி
விடியலுக்கு முன்பான கருக்கலின் மையிருட்டில்
கை நழுவிப் போனதந்த திருவிளக்கு

தவிப்புடன் கைதுழாவியவனின் கண்களில்
தூரேயொரு வெளிச்சம் தெரிகிறது

அதற்கப்பால் புகைவண்டியின் சப்தமும் கேட்கிறது
எனினும் கிட்டிய வெளிச்சத்தை பற்றிக் கொள்ள
நடந்துகொண்டிருக்கிறான்

இனி என்ன நடக்கும்?

மயிற்பீலி வருடல்

வெறுப்பு திராவகச் சொட்டுகள்
விரல் நுனி வழியே வடியத் தொடங்கி
எழுத்தாணியின் முனையில் தொக்கி நின்றன

பனையோலைச் சுவடியில்
பதியப்பட்ட எழுத்துக்களில் சிலச் சொட்டுக்கள் சிந்த
துளையான எழுத்துக்கள்
துவாரங்கள் வழியாக சிரிக்க முயன்றன

அமைதி ஆச்சரியம் ஆனந்தமென
உணர்வுகளில் இழைந்த அவ்வெழுத்துக்கள்
உறுதியிழந்த நிலையில்
ஒவ்வொன்றாய் சிதறத் தொடங்கின

வசந்த காலத் தென்றலும்
அடுக்குமல்லியின் வாசமும்
தென்மேற்கு மழையின் சாரலுமாக
சுகமாயிருந்த வார்த்தைகளின் மூலங்கள்
திசைக்கொன்றாகி
துயரக் காற்றில் கலந்தன

அடுத்த மழைகாலத்திற்கு முன்பாக
அவ்வெழுத்துக்கள் வரக்கூடுமென
தனக்குள் சொல்லிக்கொண்ட விரல்கள்
அதற்குமுன்பாக
திராவகம் தின்ற தன்னை
தற்காத்துக்கொள்ள

ரணமானவை வடுக்களாக மாறா வண்ணம்
மயிற்பீலி வருடலால் மருந்திட்டு
காத்திருக்கத் தொடங்கின

நெடுஞ்சாலை

எந்நாளும் ஓய்வில்லாத
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள்
மிதிவண்டி தொடங்கி
பேருந்து வரை
பேதமின்றி உருண்டபடி
கனரக வாகன்ங்களும்
கட்டை வண்டிகளும் கூட
களைப்பின்றி பிரயாணித்தபடி
அவசரக் குடுக்கைகளின்
ஆவேசத் திருகலில்
அடிபட்டுத் தெறிக்கும்
இரத்தத் துளிகளின் வாடை
எனக்குப் பிடிக்கவில்லையென
யாரிடம் சொல்ல
உறக்கமில்லா யாத்திரைகளும்
ஓய்வில்லா ஓட்டுநர்களின்
பிழையான விரட்டல்களும்
கொலையுதிர்சாலையாய் எனை
கோரமாக சித்தரிப்பதை
நான் விரும்பவில்லையென
எவ்விதம் சொல்ல
எவ்வாறாயினும்
இனிதான பயணத்திற்கு
என்னை உபயோகப் படுத்துபவருக்கு
நானென்றும் உதவுபவனாகவே
மனிதர்கள்தான் தம்மிலும் எம்மிலும்
தரம் பிரித்துக்கொண்டிருக்கின்றார்கள்
நானெப்போதும்
அனைவரையும் ஒருபோலே ஏற்று
பயணப்பட உதவி செய்துகொண்டுதான் இருக்கிறேன்
மகத்தானப் பிறப்பாம் இம் மனிதவுயிர்களின் மகத்துவம் உணர்வீரா
சாலைப் பயணங்களில் மாண்டு போகத் துடிக்கும்  மாண்பு மிக்கோரே

மனம்

நேற்று நண்பர் #ஆதவப் பிரியன் பக்கத்தில் நானும் சரவணா ஹரியும் தொடர் பின்னூட்டமிட்டதை உங்கள் பார்வைக்குத் தொகுத்துள்ளேன்

சரவணா ஹரி.
முற்றற்ற வளைதலுடன்
வழக்கொழியா விளைதலுடன்
கணுக்கணுவாய் இடர்களுடன்
விடைபகறா
வினாக்களுடன்
விதிமுடியா
தொடர்தலுடன்
முடிவற்ற
முடிவிலியாய் ....
தேடிக்களைத்தாலும்
கண்டே திளைத்தாலும்
அடுத்தென்ன என்றதனையே
அடுக்கிச் சென்றிடும் வாழ்க்கை...

Maha Suman
கிடைக்காதோ, கிடைத்தாலும் ஏற்காதோ இந்த பாழ்மனது?

சரவணா ஹரி
ஏற்றாலும் நிலைத்திடுமோ அச்சுழல் மனது,..

Maha Suman
நினைவுகளோ, நிகழ்வுகளோ நிலைக்காது, நிலைப்பது எதுவென்றும் அறியாது, அறியாமையில் உழலும் அம்மனது

சரவணா ஹரி
நிகழ்வுகளில் நினைவுகளில் நிலைப்பற்ற நிழல்மனது
அழலென
அறியாமையென உழன்றிடும்
பிறழ்மனது
இல்லையெனக் கொண்டேயதில்
இருத்திக்கிடந்திடும்
இயல்மனது....

Maha Suman
இருப்பதை இல்லையென, இல்லாததை இருப்பதனெ கொள்ளும் மனது, இறுதிவரை இயல்பற்று, இயல்பற்றதை அறியாது தெளிவற்றுத் திரியும் மந்தி மனது

சரவணா ஹரி
தெளியப் பிடிக்காத
தெரிவை மனது
அறிய முனையாத
அரிவை மனது
தாவித் திரிந்திருக்கும் கவி மனது
தாழப் பறந்திருக்கும்
பட்சி மனது
சித்தென லயித்திருக்கும் சிறுமனது
பித்தென பிதற்றிடும் பேதை மனது...

Maha Suman
விதைப்பு ஒன்றாய் இருப்பினும் முகிழ்ப்பது வேறாய் இருக்குமோ? சித்தென பித்தென வித்தைகள் காட்டிடும் விந்தை மனது

சரவணா ஹரி
விந்தை காட்டியே
வீழும் மனது
விடைகாண விளையா
விளம்பல் மனது
முகிழ்ப்பதில் மூழ்கிடும்
ஆழ் மனது
ஆடிஅலைந்திடும்
பேய் மனது
உள்ளதைப் பகரா
வேட மனது
புரிதலில் முயலாப்
பெட்டை மனது....

Maha Suman
எத்தனை மனதை கொண்டிருந்தென்ன? கிடைப்பதை விட்டு பறப்பதை நாடும், இருப்பதை இழந்து இழந்ததைத் தேடும், இறுதியில் எல்லாம் விடை பெறும் வேளையில் மனமே மாயமென்றாகிட நாணும் மந்தையில் ஒன்றாய் ஆடும் மனது

சரவணா ஹரி
இருப்பதை தொலைத்து
தொலைத்ததில் அலைந்து
அலைந்ததில் களைத்து
களைத்ததில் ஓய்ந்து
ஓய்ந்ததில்
அடங்கியே மாய்ந்திடும்

மாய மனது.,

பெரிதுஎன் வலியை பெரிதென்று எண்ணியிருந்தேன்
பிறர் வலியை உணரும் வரை
என் மகிழ்வை பெரிதென்று எண்ணியிருந்தேன்
பிறர் மகிழ்வில் நான் மகிழும் வரை

தனிமைசெவிப்பறையில் நிலைத்த உன் விளியில்
தவித்த என் தனிமை துளிர்க்குதடி

மருந்துஎன் மனக்காயங்கள் மறைய
உன் மாயப் புன்னகையே மருந்து

எங்கு சென்றாயடி


எங்கு சென்றாயடி எந்தன் சிரிப்பழகி

வார்த்தையின் விளிம்புகளில்
சிரிப்பினை தேக்கிவைத்து
செல்லப் பெயர் கொண்டுனை அழைக்கையில்
சங்கீதச் சிரிப்பொன்றை சிதறவிடும்
மாருதியின் சித்திரமும் பழிக்கும்
மேனகைப் பேரழகே
எங்கு சென்றாயடி

அன்பின் அதீதத்தை
அகப்பையில் பதுக்கிவைத்து
சொல்லவொணா கோபத்தை
பொறித்தக் கடுகாய் பொழிந்துவிட்டு
அடுத்த நொடி அரவணைத்து
அழுமெந்தன் கோகிலமே
எங்கு சென்றாயடி

வாழ்க்கை தந்த ரணங்களையும்
அதில் விளைந்த வலிகளையும் மறைத்து
ம் மென்ற ஒற்றைச் சொல்லில் மென்றபடி
விழி துளிர்க்க மொழி கடக்கும்
விந்தையுருவான எந்தன்
வான் மயங்கும் வெண்ணிலவே
எங்கு சென்றாயடி

இன்றிரவே வந்து என்
நெற்றிமுடியூதி
பிடித்ததென நீ கேட்கும்
நுதல் முத்தத்தை எனக்குத் ஈந்து
அகங்குளிர்ந்து
முகமலர்ந்து
ராதிகா சிரிப்பொன்றை
ரத்தினமாய் வழங்கிடவேனும்

உடனே வந்திடடியென்
உலகாளும் தேவதையே!

Thursday, 20 August 2015

போர்க்களம்


சரித்திரத்தில் பொறிக்கப்படவேண்டிய
சாதனை வெற்றியின் முடிவில்

பிளந்து கிடந்த கோட்டை வாயில்களும்
சிதைந்து சிதிலமடைந்திருந்த
சுற்றுப்புறச் சுவர்களும்
உருண்டு கிடந்த தலைகளும்
உயிரற்று கிடந்த உடல்களும்
பெருகி ஓடிய இரத்த ஓடையும்
வரவழைத்திருந்தன
வல்லூறுகள் ஆயிரத்தை

ஒரு வெற்றிக்குள்
பல்லாயிர தோல்விகள் புதைந்திருக்க
ஒரு வீழ்ச்சியில்
எண்ணற்ற வாழ்வு பொலிவிழந்திருக்க
ஒரு மரணத்தில்
பல உயிர்களுக்கு உணவு கிடைத்திருக்க

நீரும்
நிலமும்
காற்றும்
வானும்
நெருப்பும்
தமக்கு ஏதும் ஆகாததைப் போல்
பட்ட கறையை துடைத்துவிட்டு
சுழன்றோடத் தொடங்கின

நான் மட்டும்
என்னை வெல்லும் முயற்சியில்
பெற்ற வலிகளை
நாக்கொண்டு சுவைத்து
நரக வேதனையை சொல்லமாட்டாமல்
மண்ணை குழித்து
என்னை புதைக்க
ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்

சுற்றிக்கொண்டிருந்தன
ஆயத்த நிலையில் பல நூறு
வல்லூறுகள்...!

Friday, 14 August 2015

வாழிய சுதந்திரம்


சுதந்திரத் திருநாள்

பள்ளிப் பருவத்தில் அம்மாவுடன் பள்ளிக்குச் சென்று கொடியேற்றத்தில் கலந்து கொண்டு சாக்லேட் வாங்கிக்கொண்டு வந்ததில் தொடங்கிய சுதந்திர தின, குடியரசு தின நினைவுகள்,  பள்ளிப் படிப்பில் மேல்வகுப்புகளில் சுதந்திர தின அணிவகுப்பில் ஒரு வருடமும், அதற்கான கொண்டாட்ட நடனத்தில் ஒரு வருடமும் கலந்து கொண்டதில் முகிழ்க்கின்றது.

ஒவ்வொரு சுதந்திர தின, குடியரசு தின கொண்டாட்டத்தின்போதும் அப்பா என் சடடையில் குத்திவிடும் தேசியக் கொடியை எத்தனை பெருமிதம் கொண்டு பார்ப்பேன் என நினைக்கும்போது முகமெல்லாம் புன்னகை மலர்வதை மறுக்கவியலாது. அந்தக் கொடியை குத்தியவுடன் உள்ளம் உற்சாகமாகி நான் தான் கொடி காத்த குமரன் என்ற எண்ணத்துடன் என் தேசியக் கொடியை யாரேனும் தரம் தாழ்த்த நான் விடுவேனோவென துடித்த கணங்கள் எண்ணங்களில் ஊஞ்சலாடுகின்றன.

ஆயினும், சுதந்திரத்தின் பெருமையையும் அதை பெறுவதற்கு நம் முன்னோர்கள் பட்ட வேதனையையும் எனக்குக் கற்பித்தது ஒரு சினிமாதான். “கப்பலோட்டிய தமிழன்” என்னும் அந்த சினிமா நடிகர் திலகம் சிவாஜி ஐயாவால் நடிக்கப் பெற்றது. எனது குரு மாமாவின் தூண்டுதலில் ஒரு நாள் அத்திரைப்படத்தை நான் வீட்டில் கண்டேன். செக்கிழுத்த செம்மலையும், தொழு நோயால் பாதிக்கப்பட்டு விடுதலையாகி வரும் சுப்பிரமணிய சிவாவையும் பார்த்துவிட்டு எத்தனை நாட்கள் மனபாரத்துடன் அலைந்தேனென நினைவில்லை.

அன்று முதல் சுதந்திரம் பெற நம் முன்னோர்கள் பட்ட வேதனை உள்ளத்தில் நீங்காமல் நிலைகொண்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்றோருடன் கொடி காத்த குமரனும் என் நெஞ்சத்தில் உண்மையான தலைவர்களாக இன்றும் நிலைத்திருக்கின்றனர்.

மாமாவின் தூண்டுதலில் நான் சிறு வயதில் படித்த சத்திய சோதனை புத்தகம் (முழுமையாக படித்ததாக நினைவில்லை) ஏற்படுத்திய பாதிப்பும் இன்றும் இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன்பு “சிறைச்சாலை” (காலாபாணி) திரைப்படம் கண்டபோது கடைசி காட்சியாக மகாகவியின் 

“தண்ணீர் விட்டா வளர்த்தோம்- இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்”

என்ற வரிகளை படிக்கும்போது நிற்க மாட்டாமல் கண்ணீர் ஒழுகியதை அம்மா அப்பா பார்த்துவிட்டு என் கையை அழுத்திப் பிடித்தது இன்னும் என்னால் உணரமுடிகின்றது.

இரு வருடங்களுக்கு முன்பு அந்தமான் தீவுகளுக்குச் சுற்றுலா போனபோது செல்லுலார் சிறைச்சாலையை நேரில் போய் கண்டு அதன் அமைப்பும் அங்கு சிறைபட்டிருந்தோரின் கடுந் தியாகங்களும் இன்று எவ்வளவு குழந்தைகளுக்கு உணர வாய்ப்பிருக்கின்றது என்ற ஏக்கம் விளைந்தது.
நாம் நமது குழந்தைகளுக்கு சுதந்திரத்தின் பெருமையையும், அதற்கான நமது தியாகத்தையும், அப்படிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க நாம் கடைபிடிக்க வேண்டிய நேர்மையையும் கற்றுக்கொடுக்கின்றோமா ? என எனக்கு ஆதங்கமாக இருக்கின்றது.

மாறாக நம் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்பது எந்த இடையூறும் இல்லாமல் சமூக வலை தளங்களை உபயோகப் படுத்துவதும், எந்த தலைவரையும் எவ்வளவு கீழ்த்தரமாக இகழ கிடைக்கும் வாய்ப்புமே சுதந்திரமென பொருள்படுகின்றது.

எந்த நாட்டிலாவது அந்த நாட்டின் குடியரசு தலைவரை, அந்த நாட்டின் கொடியை, அந்த நாட்டின் தேசிய கீதத்தை அவமதிக்க முடியுமா? அதையும் சகித்துக் கொண்டு இருக்கின்ற இந்த மாபெரும் தேசத்தை நாம் மாசுபடுத்தாமல் காப்பது ஒன்றே நம் முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்குமென கருதுகின்றேன்.

ஜெய் ஹிந்த்