Monday 29 July 2013

அழகி

கிராமத்து வீட்டிற்கு
நான் சென்றதைக் கேட்டதும்
விரைந்து வருவாள் என்
பால்ய சினேகிதி.
கால்சட்டையுண்டு
மார்சட்டையில்லா
இரு குழந்தையின் தாய்.
பள்ளிப்பருவத்தை நான்
முடிக்குமுன்
தாய்மையானவள்.
குடிகாரக் கணவன். ஆனாலும்
குணமான அன்பன்.
வருங்காலம் காணா
விழியுள்ள துன்பன்.
பெண்ணவள் பேதை
பேர் கொண்டாள் ராதை.
கரிய நிறம்,
கலைந்த கேசம்,
வேதனை சொல்லும் தேகம்
எனினும்
கண்கள் சிரிக்கக் கண்டால்
காதலிக்கத் தோன்றும்.
பள்ளிப் பருவத்திலவள்
மகிழ்ந்து சிரிக்கையில்
மனதைப் பறி கொடுத்தவர் பலர்.
அதனால்தானோ
ஆண்டவன்
அவள் சிரிப்பைக்
குறைத்துவிட்டான்?
எப்போது எனைக் கண்டாலும்
இன்முகம் காட்டி
பேசாமல் செல்வதில்லை.
இம்முறை ஏனோ வரவில்லை.
பாட்டியைக் கேட்டேன்.
சோகமாய் சொன்னாள்.
கருங்குயிலுக்கு
கழுத்திலே கேன்சராம்.
என் கழுத்திலிருந்ததை
கழட்டிக் கொடுத்துவிட்டு வந்தேன்.
வேறென்ன செய்ய என்
வேதனை தீர?

No comments:

Post a Comment