Wednesday 5 February 2014

தொலைந்த வானம்

புகலிடமின்றி
அடைக்கலம் தேடி
சிதைந்திட்ட சிறகினில்
பதுங்கிய தென்மனம்

அடுத்தொரு விடியலின்
வாசனை வரும்வரை,

சிறுதுளி கரைய
பெருமழை பொழியும்வரை,

நகங்களின் உரசலில்
நெருடல்கள் மறையும்வரை,

மறைமுக பொருள்தரும்
முக வரி விலகும்வரை,

கவிதையுள் கலந்திட்ட
கருப்பொருள் உணரும்வரை,

தொலைந்த வானத்தின்
முகவரியின்றி
கலைந்த நினவுகளின்
கற்பனை வாசலில்
காத்திருக்கிறது,
காலங்கள் கடந்து...!

காகிதப்படகு

அது ஒரு இரண்டு நாள் பயிற்சியரங்கம். நானும் எனது சக நண்பர்களும் பங்கேற்றிருந்தோம். பயிற்சியாளர் முதல் நாள் பயிற்சிகள் கற்றுத் தந்துவிட்டு அடுத்த நாள் ஒரு போட்டி வைத்தார்.
எங்களை நான்கு குழுவாக பிரித்திருந்தார். ஒவ்வொரு குழுவிற்கும் A4 சைஸ் காகிதம் கொடுத்து அதை வைத்து ஒவ்வொரு குழுவும் எத்தனை காகித கப்பல் செய்கிறதென பார்க்கிறேனென்றார்.
நான் ஒரு குழுவின் தலைவனாக இருந்தேன். என்னிடமிருந்த மற்ற 4 பேர்களில் ஒருவரிடம் நான் காகிதத்தை கொடுத்து 4ஆக வெட்ட சொன்னேன். இரண்டாமவரிடம் அந்த வெட்டி வந்த காகிதத்தின் விளிம்புகளை ஒழுங்கு படுத்த சொன்னேன். மூன்றாவது நபரிடம், காகித கப்பலை செய்ய சொன்னேன். நான்காவது நபரிடம் எடுத்து அடுக்கி வைக்க சொன்னேன். நான் ஒருவரிடமிருந்து அடுத்த நபருக்கு காகிதத்தை மாற்றி கொடுத்தேன்.
இறுதியில் 5 நிமிட சோதனை நேரத்திற்கு பிறகு, எல்லோரையும் நிறுத்த சொல்லிவிட்டு ஒவ்வொரு குழுவாக வந்து பயிற்சியாளர் சோதனை செய்ததில், இரண்டாவது குழு 15 காகிதப்படகுகளும் நாங்கள் 13 காகிதப்படகுகளும், மற்ற அணியினர் முறையே 10, 9 என செய்திருந்தனர்.
பயிற்சியாளர் முதல் இட்த்தை பிடித்த குழுவின் காகித கப்பலில் நிறைய விளிம்புகள் நன்றாக இல்லையென கூறி, எங்கள் குழுவை முதல் என்று அறிவித்தார்.
பின்னர் என்னை பார்த்து, நீங்கள் எவ்வாறு வெற்றியடைந்தீர்கள்? உங்கள் பங்கு என்ன என வினவினார்.
நான் சொன்னேன், “எனது பங்கு இதில் ஒன்றுமில்லை. நான் வெறும் சேவகப்பணிதான் செய்தேன். காகித்த்தை எடுத்து ஒரு மேசையிலிருந்து இனியொரு மேசைக்கு கொடுக்கும் சாதாரண பணியைத்தான் செய்தேன்” மேலும் சொன்னேன், “எனது தோழர்கள்தான் மிக சிறப்பாக செயல்பட்டு வேகமாகவும், அழகாகவும் காகித கப்பல்களை செய்தனர்”
பயிற்சியாளர் சொன்னார், “இதுதான் சிறந்த தலைமை பண்பு. தலைவர் எனப்படுபவர், சேவகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்”

ஸ்டீபன் ஆர் கோவி

வாழ்க்கை சிறு சிறு நிகழ்வுகளால் நிரம்பியது. ஒவ்வொரு நிகழ்வையும் நீங்கள் எப்படி கையாளுகிறீர்களென்பதில்தான் உங்கள் மகிழ்ச்சி உள்ளது.
ஸ்டீபன் ஆர் கோவி எனும் ஒரு அறிஞர் 90/10 கோட்பாடு எனும் கருத்தை கூறியுள்ளார். 10 சதமான நிகழ்வுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. மீதமுள்ள 90 சதமான நிகழ்வுகளை நாம் எப்படி கையாளுகிறோமென்பதிலேதான் வாழ்வின் அமைதி உள்ளது. ஒரு உதாரணம் பார்ப்போம்.
நீங்கள் காலை உணவை எடுக்க சாப்பாட்டு மேசைக்கு வருகிறீர்கள். உங்கள் குழந்தை தவறுதலாக காபி கோப்பையை தட்டிவிடுகிறாள். உங்கள் உடையில் கொட்டி விடுகிறது. இது ஒரு நிகழ்வு. இதை இரு விதமாக கையாளலாம்.
முதல் வகை. நீங்கள் குழந்தையை நன்றாக திட்டுகிறீர்கள். பின்னர் உங்கள் அறைக்கு சென்று உடை மாற்றி வருகிறீர்கள். குழந்தை நீங்கள் திட்டியதால் உணவருந்த மறுத்து அழுதுகொண்டு இருக்கிறாள். உங்கள் மனைவியை திட்டுகிறீர்கள். ஒரு வழியாக குழந்தை சாப்பிட்டு முடிக்கையில் பள்ளி வேன் போய்விடுகிறது. மனைவிக்கு அவசர வேலை இருப்பதால், நீங்கள் குழந்தையை கொண்டு பள்ளியில் விடுகிறீர்கள். நேரமாகி விட்டதால், சாலையில் வேகமாக வந்ததால், ரூபாய் 200 ட்ராஃபிக் போலீஸிடம் கப்பம் கட்டுகிறீர்கள். குழந்தை டாட்டா சொல்லாமல் பள்ளிக்குள் சென்றுவிடுகிறாள். நீங்கள் அங்கிருந்து அலுவலகம் சென்று பார்க்கிறீர்கள், முக்கியமாக கொண்டுவரவேண்டிய கோப்பு ஒன்றை வீட்டில் விட்டுவிட்டீர்கள்.
நாள் மிக மோசமாக கழிகிறது. எப்போது வீடு செல்வோமென இருக்கிறது. மாலை வீட்டிற்கு வந்தால், உங்களுக்கும் குடும்பத்தினருக்குமிடையே உறவில் ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது.
இரண்டாம் வகை. குழந்தை காபி கோப்பையை தட்டிவிடுகிறாள். நீங்கள் அமைதியாக, இனி கவனமாக இருக்கவேண்டுமென்பதை உணரும்படி எடுத்து சொல்லிவிட்டு, அறைக்கு சென்று உடை மாற்றி வருகிறீர்கள். குழந்தௌ உணவுண்டு, பள்ளி வேனில் உற்சாகமாக உங்களுக்கு கையசைத்து செல்கிறாள். அலுவலகத்திற்கு முக்கிய கோப்புடன் 10 நிமிடம் முன்னதாக வந்துவிடுகிறீர்கள். நாள் அமைதியாக உற்சாகமாக கழிகிறது.
நாள் உற்சாகமாகவோ, மோசமாக கழிவதற்கு யார் காரணம்?
1)உங்கள் மகள்
2)ட்ராஃபிக் போலீஸ்
3)உங்கள் மனைவி
4)நீங்கள்
ஆம், 4 தான் நீங்கள் நிகழ்வை எப்படி கையாளுகிறீர்கள் என்பதுதான்.
படித்ததில் பிடித்தது (மொழிமாற்றம்-சுமன்)

எண்ண மீன்கள்


வரப்பினை மீறா வெள்ளத்தில்
எண்ண மீன்கள் துள்ளிக்குதிக்க
நுரைக்காமல் தளும்பும் நீர்..!

நான் வர வேண்டும்!

மழையில் நனையும்
மழலையின் மனதுடன்
மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கிட வேண்டும்!

கனவிலும் குளிரின்
கடுமையை கண்டு
கனிமலருன்னை
கலந்திட வேண்டும்.

கரையினி லாடும்
மலரினைப்போல
கரம் தொடும் பொழுதில்
மகிழ்ந்திட வேண்டும்.

பெருவயல் நாற்றில்
தழுவிடும் தென்றல்
தரும் சுகமாக
மடிதொட வேண்டும்.

கருவென மாறி
கவித் தமிழ் வழியே
அருசுவை யுணவு
நீதர வேண்டும்.

உயிருடல் கலந்து
உணர்வுகள் ஒன்றிட
உளம் தொடும் பதியென
நான் வர வேண்டும்!

களவு போன காந்தம்



எனக்கவளை பிடிக்கும்,
சிரிக்கும் பூமழை சித்திரம்,
அருவியாய் மொழி பேசும்
ஆனந்த பொன்சாரல்,
கனவுகளை ஆட்சி செய்யும்
உற்சாக தேவதை.

என்னையும் அவளுக்கு பிடிக்கும்,
என்னுள்ளே காந்தம் இருப்பதாய்
எப்போதும் உரைப்பாள்.

சுட்டும்விழியும்,
கொட்டும் மொழியும்,
எட்டும் நடையும்,
என்னில் நிறைந்ததாயவள்
எண்ணுவாள்.

அலுவலகம் சென்றவளை
காணும்வரை அப்படித்தான்.

சுற்றிய பட்டாம்பூச்சியைச்
சுற்றி பல வண்டுகள்.
சிதறிய சிரிப்பொலியை
அள்ளிக்கொள்ள ஆயிரம் விரல்கள்.

ஒவ்வொரு காட்சியும்
உள்ளத்தீயை
ஊதி ஊதி பரத்தின.

அவ்விடம் விட்டகன்றவெனக்கு
அகத்தில் அமைதி போனது,
பொறாமைத்தீ பிடித்த எனக்கு
அறியவில்லை,
எனது காந்தம்
களவாடப்பட்டதை.

நேர்சிந்தை தொலைந்து
நிம்மதி யிழந்த மனதில்
அன்பெனும் காந்தம்
குடியிருப்பதில்லை.

மீட்டெடுக்க வழியின்றி
மௌனத்திரையிட்டு நான்..!

அவசர பூச்செண்டுகள்

அதிகாலை அவசரங்களை
அள்ளிவரும் பூச்செண்டுகள்,

பொன்வண்டுக் கண்களிலே
துள்ளிவரும் மின்பிம்பங்கள்.

சக்கரங்கள் உருள
சாலையெங்கும்
சிதறிய சொல்முத்துக்களை
யார் அள்ளுவார்?

உற்சாக முகங்களை
உற்று நோக்க
ஒரு நிமிட அவகாசமின்றி
ஒளிந்தோடும்
தீப்பிடித்த கால்களுக்கிடையில்
சிதைந்தே போகின்றன.

அவர்கள்,
வளராமல் போகட்டும்,
வாழ்வின் துன்பத்தை
உணராமல் போகட்டும்.
என்றும் இச்சிரிப்பு மழையில்
நனைந்தே வாழட்டும்,!