Wednesday 5 February 2014

ஸ்டீபன் ஆர் கோவி

வாழ்க்கை சிறு சிறு நிகழ்வுகளால் நிரம்பியது. ஒவ்வொரு நிகழ்வையும் நீங்கள் எப்படி கையாளுகிறீர்களென்பதில்தான் உங்கள் மகிழ்ச்சி உள்ளது.
ஸ்டீபன் ஆர் கோவி எனும் ஒரு அறிஞர் 90/10 கோட்பாடு எனும் கருத்தை கூறியுள்ளார். 10 சதமான நிகழ்வுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. மீதமுள்ள 90 சதமான நிகழ்வுகளை நாம் எப்படி கையாளுகிறோமென்பதிலேதான் வாழ்வின் அமைதி உள்ளது. ஒரு உதாரணம் பார்ப்போம்.
நீங்கள் காலை உணவை எடுக்க சாப்பாட்டு மேசைக்கு வருகிறீர்கள். உங்கள் குழந்தை தவறுதலாக காபி கோப்பையை தட்டிவிடுகிறாள். உங்கள் உடையில் கொட்டி விடுகிறது. இது ஒரு நிகழ்வு. இதை இரு விதமாக கையாளலாம்.
முதல் வகை. நீங்கள் குழந்தையை நன்றாக திட்டுகிறீர்கள். பின்னர் உங்கள் அறைக்கு சென்று உடை மாற்றி வருகிறீர்கள். குழந்தை நீங்கள் திட்டியதால் உணவருந்த மறுத்து அழுதுகொண்டு இருக்கிறாள். உங்கள் மனைவியை திட்டுகிறீர்கள். ஒரு வழியாக குழந்தை சாப்பிட்டு முடிக்கையில் பள்ளி வேன் போய்விடுகிறது. மனைவிக்கு அவசர வேலை இருப்பதால், நீங்கள் குழந்தையை கொண்டு பள்ளியில் விடுகிறீர்கள். நேரமாகி விட்டதால், சாலையில் வேகமாக வந்ததால், ரூபாய் 200 ட்ராஃபிக் போலீஸிடம் கப்பம் கட்டுகிறீர்கள். குழந்தை டாட்டா சொல்லாமல் பள்ளிக்குள் சென்றுவிடுகிறாள். நீங்கள் அங்கிருந்து அலுவலகம் சென்று பார்க்கிறீர்கள், முக்கியமாக கொண்டுவரவேண்டிய கோப்பு ஒன்றை வீட்டில் விட்டுவிட்டீர்கள்.
நாள் மிக மோசமாக கழிகிறது. எப்போது வீடு செல்வோமென இருக்கிறது. மாலை வீட்டிற்கு வந்தால், உங்களுக்கும் குடும்பத்தினருக்குமிடையே உறவில் ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது.
இரண்டாம் வகை. குழந்தை காபி கோப்பையை தட்டிவிடுகிறாள். நீங்கள் அமைதியாக, இனி கவனமாக இருக்கவேண்டுமென்பதை உணரும்படி எடுத்து சொல்லிவிட்டு, அறைக்கு சென்று உடை மாற்றி வருகிறீர்கள். குழந்தௌ உணவுண்டு, பள்ளி வேனில் உற்சாகமாக உங்களுக்கு கையசைத்து செல்கிறாள். அலுவலகத்திற்கு முக்கிய கோப்புடன் 10 நிமிடம் முன்னதாக வந்துவிடுகிறீர்கள். நாள் அமைதியாக உற்சாகமாக கழிகிறது.
நாள் உற்சாகமாகவோ, மோசமாக கழிவதற்கு யார் காரணம்?
1)உங்கள் மகள்
2)ட்ராஃபிக் போலீஸ்
3)உங்கள் மனைவி
4)நீங்கள்
ஆம், 4 தான் நீங்கள் நிகழ்வை எப்படி கையாளுகிறீர்கள் என்பதுதான்.
படித்ததில் பிடித்தது (மொழிமாற்றம்-சுமன்)

1 comment: