Thursday, 29 August 2013

காதல் புறாசாலைப் புழுதியிலா
மாலைப் பொழுது அது.
காளையென் வரவைக்
காத்து கனலமர்ந்தாள்.

கூந்தல் முடிதிருத்தி
பூவை அதிலிருத்தி
வாளில் புருவமெழுதி
தோளில் குழல் தவழ

காதல் நோய் பிடித்து
கன்னி அமர்ந்திருந்தாள்
காதல் புறாயிரண்டின்
கதையை கேட்கவிலை.

நாசி துடிதுடிக்க
பேசும் திறனிழந்து
ஆசை ஊற்றினிடை
அமிழ்ந்தே அவளிருந்தாள்.

தூணை புறம் தழுவ
வானில் உளம் நழுவ
நாணி என்னுருவம்
காண மனமகிழ்ந்தாள்!

பானை


களிமண்ணில் 
சிறிதளவு மணல் சேர்த்து
நீர் சேர்த்து
கால் கொண்டு உதைத்து
உடைத்து
பானை செய்யும்
பதம் காணும்வரை
மிதித்து
குழப்பி
அள்ளிக்கொண்டு
சக்கரத்தில் வைத்து
சுற்றி
கைகொண்டு அணைத்து
உருவகப் படுத்தி
ஒழுங்கு படுத்தி
அழகு படுத்தி
எடுத்து
கடும் வெயிலில் வைத்து
சுட்டு
நெருப்பிலும் வைத்து
சுட்டு
கிடைத்த பானையைத்
தட்டினால்
கணீர் கணீரென
சப்திக்கும்
என் மனதைப்போல.....!

எது காதல்?

விடியாத இரவுகளின்
வேட்கையல்ல காதல்.
உடையாத நினைவுகளின்
ஊர்வலமே காதல்.

விளக்கணைத்து வழிதேடும்
விரசமல்ல காதல்
விழிமூடி உள்வாங்கும்
உயிர் மூச்சாய் காதல்.

உடைகளிலும் நடைகளிலும்
உருவாவதோ காதல்?
உணர்வுகளின் தேக்க நிலை
உடைப்பெடுத்தால் காதல்.

ஊரடங்க தொலைபேசி
உளருவதோ காதல்?
உருவங்கள் அற்றாலும்
உருவாகும் காதல்.

நீயின்றி நானில்லை
நினைவதுவோ காதல்.
நீ மலர நான் வேராய்
நிற்பதுவே காதல்.

உன் அன்பை எதிர்பார்த்து
உருகுவதா காதல்?
என்னுடன் நீ இல்லாது
போனாலும் காதல்.

உன்னுயர்வை நான் கண்டு
மகிழ்வதுவே காதல்!
உள்ளத்துள் பொங்குதடி
உன்மீது காதல்!

நிலாப் பெண்
தாமரை தடாகத்தினுள்
ஓடி ஒளிந்தனள்
நிலவுப்பெண்,
என்னவளின்
கண்ணொளியின் 
தீரம் கண்டு
நாணி...!

Wednesday, 28 August 2013

ஆதங்கம்துள்ளும் விழியோர மின்னல் பார்வையிலே

தும்பைப்பூ பதித்த கருத்த குளிர் நிலவு,
முல்லைப்பூ வாச முத்தப் புதையலிலே
முழுதும் தொலைந்திடவே உள்ளம் ஏங்குகிறேன்!தென்னை இளங்குருத்தை தென்றல் தீண்டுகையில்
மின்னிப் படருமொரு தோகை யிளஞ்சிரிப்பு
கன்னக் கதுப்புகளில் வெண்ணை திரண்டிருக்க
காதுமடல் வெளியில் கவிதை எழுத வந்தேன்.

பச்சை சிவப்பு நிற வர்ணக் கிளியிரண்டு
பாலில் தோய்த்த உடல் பாவை உடையைக் கண்டு
அச்சம் ஆதங்கம் கொண்டு பார்வை திருப்புதென்று
அந்த சூழல்தனிலே அர்த்தம் எழுதி வைத்தேன்!

யாழிசையே


புதுப்புனலும் குளிர் நிலவும்
தோய்த்தெடுத்த பெண்ணழகே!
உன்னசைவின் ஓசையிலே
உண்டாகும் யாழிசையே!

தொலைந்திடும் துயரம் பின்னே!மனம் வாடியிருந்த மங்கை
மனதிற்குள் பூத்த கங்கை
துணையென்ற என்னை நாட
துணிவற்ற அவளின் அங்கை.

கண்மசி கரைந்த குவளை
கவிதையை இழந்த செவலை
மனதினிற் கினிய உறவை
மறக்கவே இயலா அரிவை.

எழுந்திடு எந்தன் கண்ணே
எல்லாம் சரியாகும் பெண்ணே,
தொழுது நான் வருவேன் முன்னே,
தொலைந்திடும் துயரம் பின்னே!

மனக்கதவு

மழைபொழியும் நேரம்
தெருக்கதவை
ஒரு விரற்கடை திறந்து வைத்தேன்.
துளித்துளியாய்
தெளித்த மழை
ஒரு பெருங்காற்றில்
முகத்திலறைந்த கதவுடன்
முழுவதுமாய் நனைத்தது.
உன் நினைவு
அலையோசை மட்டும்
முற்றிலுமாய் மாறுவதேன்?
உனக்காக
என் மனக்கதவை
சிறிதளவே திறந்து வைத்தேன்.
ஒரு நொடியில் உட்புகுந்து
முற்றிலுமாய்
மூழ்கடித்தாய்.
நானும்
மூச்சுத் திணறி
உன்னுள்ளானேன்!

எது பலம்?


குருஷேத்ர யுத்தம் தொடங்கும் முன்பாக, கிருஷ்ணரின் ஆதரவு கேட்டு அர்ச்சுனனும், துரியியோதனனும் சென்றனராம். அவர்கள் சென்ற போது கிருஷ்ணர் படுத்து உறங்கி கொண்டிருந்தாராம். துரியோதனன் முதலில் சென்று கிருஷ்ணரின் தலையை அடுத்து அமர்ந்தான். அர்ச்சுனன் கிருஷ்ணரின் கால்மாட்டில் அமர்ந்தான்.
உறக்கம் விழித்த கிருஷ்ணர் முதலில் பார்த்தது அர்ச்சுனனை. அடுத்ததாகவே துரியோதனனைக் கண்டாராம். எனவே, முதலில் கண்ட அர்ச்சுனனிடம் என்ன வேண்டுமென கேட்டதற்கு, “யுதத்தில் உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்” என்று கூற, துரியோதனனும் அதையே கூறினானாம்.
எனவே கிருஷ்ணர் முதலில் வந்த அர்ச்சுனனிடம், “என்னிடம் உள்ள படை அனைத்தையும் தருகிறேன், அல்லது நான் மட்டும் வருகிறேன்” என்று உறைத்தாராம். அர்ச்சுனன், எனக்கு படைபலம் வேண்டாம். நீங்கள் இருந்தால் போதுமென கேட்டானாம். துரியோதனன் மனதிற்குள் மகிழ்ந்து, எனக்கு படைபலம் அனைத்தையும் கொடுத்து உதவுங்கள் என்று கூறினானாம்.
முடிவு என்ன என்பதை அனைவரும் அறிவீர்கள்.

வசவு
மழை நின்ற பின்னே
மகிழ்ந்தோடி நீரில்
குதித்தாடும் சுகத்திற்கு
அன்னையிடம் வாங்கும்
எத்தனை வசவும்
இணையில்லைதான்...!

அன்பு


அன்புடன் வாழும் மாந்தரிடம்
அகந்தை காணுமோ?
என்னிடம் அகந்தையின்றேல்
என்னால் பிறரிடம்
அவ்வகந்தையைக் காண இயலுமோ?

அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் ( )அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (01)புன்கண் நீர் பூசல் தரும்.

பரிமேலழகர் உரை

(இதன்பொருள்) அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ = அன்பிற்கும் பிறரறியாமலடைத்து வைக்குந் தாழுளதோ?
ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் = தம்மாலன்பு செய்யப்பட்டாரது துன்பங்கண்டுழி அன்புடையார்கண் பொழிகின்ற புல்லிய கண்ணீரே உண்ணின்று அன்பினை எல்லாருமறியத் தூற்றும் ஆகலான்.

பரிமேலழகர் உரை விளக்கம்

உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை கண்ணீர்மேலேற்றப்பட்டது. காட்சியளவைக் கெய்தாதாயினும், அனுமான வளவையான் வெளிப்படுமென்பதாம்.
இதனான் அன்பினதுண்மை கூறப்பட்டது.

Tuesday, 27 August 2013

புதுக் கனிவகிடெடுத்து மலருடுத்து

தூணடுத்து சாய்ந்திருந்து
மகிழ்வுடன்மட் கலமெடுத்து
மன மினிக்கப் பூசுகிறாள்.கைவளையின் ஓசையினை
கவின் நிலவும் செவிமடுக்க
மைவிழியாள் நாணியெனை
மௌனமொழி கொண்டழைத்தாள்.

கண்ணசைவே கவிதையென
கார்குழலோ சோலையென
விண் நிலவின் பாதையிலே
விகசித்து காத்திருந்தாள்.

குவியதரச் சுவையெடுத்து
குறு நகையின் மணம்கலந்து
புவியறியா புதுக் கனியாய்
பூத்து எனைப் பார்த்திருந்தாள்.

கேள்வி

                           ஒரு நாள் நான் ஒரு கனடா நாட்டு ஜோடியுடன் இரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது. பேச்சு இந்தியாவில் உள்ள லஞ்சம் குறித்து திரும்பியது. எவ்வளவுதான் நமது நாட்டின் மேல் குறை இருந்தாலும், அதை அடுத்த நாட்டான் சொல்ல மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது.
                         அப்போது அருகில் இருந்த இன்னொரு நண்பர் ஒரு கேள்வி கேட்டார். அதுதான் இப்போது உங்கள் முன் நான் வைக்கப் போகும் கேள்வியும் கூட.
                        “ஒரு அலுவலகத்தில் இரண்டு கிளார்க்குகள் வேலை செய்கின்றனர். ஒருவர் மேசையில் ஃபைல்கள் குவிந்திருக்கும். அந்த கிளார்க் வேலைக்கே ஒழுங்காக வர மாட்டார். வந்தாலும் சுறுசுறுப்பாக பணி புரிய மாட்டார். ஆனால் காசு வாங்காத கண்ணியவான். தனக்கு வரும் சம்பளம் போதுமென நினைப்பவர்.
                       இன்னொரு கிளார்க் மேசையில் அதிகமாக ஃபைல்ஸ் இருக்காது. எல்லாம் உடனுக்குடன் தட்சணைக்கேற்ப முடித்து தரப்படும். வருபவரிடத்தெல்லாம் அவ்வளவு அன்பாக பழகக் கூடியவர்.
                       இப்போது உங்களுக்கு அலுவலகத்தில் யார் மீது பிரியம் இருக்கும்?”
பணி உயர்வு தர வேண்டிய நிலை வந்தால் அந்த இருவரிடத்து யாருக்கு தருவீர்கள்?”

தைரியம்
விழி மூடி
உயிர் தேடும் நொடிகளில்
உன் ஒரு விரல் பற்றிட
உள் நாக்கு வற்றி
உடல் தளர்ந்து,
எங்கே போனதென் 
யாரையும்
நேர் கொண்டெதிர்க்கும்
தைரியம்?

ஒற்றையாய் ஓர் பயணம்...!
கூட்டத்தில் பிறந்து

கூட்டத்தில் வளர்ந்து,
கூட்டத்தில் கலந்து,
கூட்டத்தில் மகிழ்ந்து,
கூட்டத்தில் கரைந்து,
கடைசியில் மட்டும்
ஒற்றையாய் ஓர் பயணம்...!

தோட்டப்பூ

என் தோட்டப்பூ
நீ பறிக்க காத்திருக்கு,
என் னிதயம்
உன் வரவைப் பார்த்திருக்கு...!

Monday, 26 August 2013

மனங்கோணச் செய்யேன் யான்!

ஒருகரத்தில் உடைத்தேடுத்த
வரகரிசி புடைத்தபடி
தெருக் கடையில் எனைக் காண
தவிப்பது ஏன் என் சகியே?

இருவிழியின் கருவிழிகள்
என்னுயிரை ஈர்த்திருக்க,
நறுமணமுல் லைப்பூவும்
நீள் கழுத்தில் சுழண்டிருக்க,

உன் செவியோ என் சொல்லை
ஒப்பாமல் ஒதுங்கி நிற்க,
மறுமொழி சொல் இல்லாது
மறைவது ஏன் பொன்னொளியே?

அகம் வென்ற அணங்கே நீ
அருஞ்சோலைக் கரும்பே!
மகரந்த பூந்தேனுன்
மனங்கோணச் செய்யேன் யான்!

வாழ்க்கைமுடிவறியா வாழ்க்கை
பாதையறியா பயணம்,
தூரங்கள் எத்துணையாயினும்
துணிந்து நான்
கடக்கத்தான் வேணும்.

வருவதை தவிர்ப்பதோ,
விரைந்ததை கடப்பதோ,
முடியாது.

மேகத்துள் கலக்கவோ,
மண் பறித்து மறையவோ,
கல்லிடித்து ஒளியவோ,
காரிருளில் கரையவோ
இயலாது.

நக மிழந்து நின்றாலும்
விரல் ஒடிந்து வீழ்ந்தாலும்
குரல் கசந்து கனத்தாலும்
முகம் சிதறிப் போனாலும்,
முடிந்தவரை முட்டி
கடைசிவரை எட்டித்தான்
ஆகணும்.

சுற்றத்தார் பலருண்டு
நட்பென்னும் துணையுண்டு
பாதியாய் இணையுண்டு
பெருமையில் உடனுண்டு,
எனினும்

அவரவர் சுமைகளே
அவரவர்க்கு பாரமாய்,
சில நாள் சுமப்பார்,
பல நாள் தொடுவார்,
வெகு நாளென்றால்
விரைந்தவர் மறைவர்.

இதுதான் வாழ்க்கை,
இதுதான் இயல்பு,
என் சுமை சுமக்க
எனைக் கொண்டே பற்றும்.

ஒற்றைக் கால் கொண்டு
உந்தியுந்தி நடந்தேனும்
இருகால் இல்லாது
இழைந்தே போயேனும்
எப்படியாவது நான்
வாழ்ந்துதான் ஆகணும்.

இயன்றதை செய்து
இயல்பாய் மகிழ்ந்து,
ஒரு கரம் கொண்டு
என்சுமை தூக்கி
மறுகரம் என்றும்
மற்றவர்க்கே என
மகிழ்ந்து கை கொடுத்து
வாழ்ந்திட வாழ்க்கை
இனிமையாய் ஆகும்!

குரங்கு பைலட்

ஒரு விமானம் 360 பயணிகளுடன் கடலில் வீழ்ந்து அனைவரும் மறித்துப்போக, காப்பாற்றும் குழுவால் காப்பாற்ற முடிந்ததென்னவோ அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு குரங்கை மட்டுமே!
விமான வரவேற்பரையில் அந்த குரங்கை கொண்டுவரும்போது பத்திரிகையாளர் அனைவருக்கும் அந்த குரங்கிடம் ஏதேனும் தகவல் கிடைக்குமாவென தெரிந்து கொள்ள விரும்பி அந்த குரங்கிடம் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
முதல் கேள்வி, “விமானம் விபத்துக்குள்ளாகும் சமயம், உன் பக்கத்து இருக்கையில் இருந்தவர் என்ன செய்து கொண்டிருந்தார்?” கேள்வி எளிமையாக கேட்கப் பட்டது.
குரங்கு தூங்குவது போல் பாவனை செய்தது. “ஓ, பக்கத்து இருக்கையாளர் உறங்கிக் கொண்டிருந்தாரோ, சரி, மற்ற பயணிகள்?” என்று கேட்க, குரங்கு அதற்கும் தூங்குவது போல் பாவனை செய்தது.
“எல்லோரும் உறங்கி கொண்டிருந்தனரா? எனில் விமான பணிப்பெண்கள்?” என்று கேட்க குரங்கு அதற்கும் உறக்கத்தின் பாவனையையே செய்து காண்பித்தது.
ஆச்சர்யத்துடன், “அப்போ, அந்த சக பைலட், மற்றும் பைலட்?” எனக் கேட்க அப்போதும் குரங்கு அதே பாவனையை காண்பித்தது.
அனைவரும் திகைத்துப் போய் நிற்க, ஒரு இளம் பத்திரிகையாளர் இடையில் நுழைந்து, “நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?” என கேட்க, குரங்கு விமானம் ஓட்டுவதாக பாவனை செய்தது.
நம் வாழ்க்கையும் இப்படித்தான். நாம்தான் நம் வாழ்க்கைப் பயணத்தின் ஓட்டுநர். வேறு யார் கையிலும் நமது வாழ்க்கையை கொடுத்து நாம் உறங்கினால், குரங்கின் கையில் மாட்டியதாகத்தான் ஆகும்.

வரம் தா!


இதம் தரும் குளிராகி
இமை வழி கனவாகி
எனுள் பூத்த மலரே!
என் வாழ்வென்றும்
வசந்தமாக
வரம் தா!

உணர்தலும் புரிதலும்உணர்தலும் புரிதலும் வேறு வேறு...

அன்பு உணர வைக்கும்
அறிவு புரிய வைக்கும்.நீ என்னை புரிந்து கொண்டாய்,
நான் உன்னை உணர்ந்து கொண்டேன்.
என்று உன் நிலை மாறுமென் அன்பே?

பலூன்உண்மை மகிழ்வுக்கு
அர்த்தம் தேடி நான்
உன்னிடம் வந்தேன்.

உன்முக முறுவலில்
உள்ளம் தொலைந்திட
ஊமையாய் நின்றேன்.

உன் ஊதலில் விரிந்தது
பலூன் மட்டுமல்ல,
என் உள்ளமும் தான்...!

ஓருடையில்

நீர் சுழித்த நிலத்தில்
முகம் சுழிக்காமல்
தலை கிழித்து 
ஒழுகும் நீரை
வழித்தோழித்து
உடை பிழிந்து மாற்ற
வழியின்றி
ஓருடையில் நாள் முழுக்க
தலை சுமந்த சட்டியினைக்
குடையாக்கி
வாழும்
உன்னதர்கள்!

நீ அங்கு வாழ்வதால்...!

உறங்காமல் உறங்கியெழும்
உறக்கத்தினிடை
ஊசிமுனை பட்டாலும்
துடித்தெழும் என்னை

கூரம்பு, 
கொடுவாளைக் கொண்டு
கொல்லாமல் கொன்று
எரிவதேன் நீ?

பாலின்றி
சோரின்றி
பரிதவித்ததில்லை நான்,
பசியொன்றும் அறியாத
பிள்ளை தான்.

ஊர் சுற்றும் பையனில்லை.
உனை சுற்றும் தன்மையில்லை.
இருந்தும்,
உளம் மட்டும்
உனை விட்டுப் போகவில்லை.

பாசத்தின் விளை நிலமுன்
பேர் சொல்லி தூங்கினேன்.
பால் சொட்டும் வதனமதில்
புன்னகையே வேண்டினேன்.

நேசத்தை கொண்டு நான்
நினைவுப்பூ பூக்கிறேன்.
நீ சென்ற வழி கண்டு
நீரின்றி வாடினேன்.

உடலெல்லாம் குத்து கொண்டு
ரணமாகிப் போனாலும்
உள்ளத்தை மட்டும்
காத்து நின்றேன்,
நீ அங்கு வாழ்வதால்...!


Friday, 23 August 2013

மலர் தொடுக்கும் மான் விழிமலர் தொடுக்கும் மான் விழியே!

மன மினிக்கும் தேன் மொழியே!
துயி லறியா வான் நிலவே!
துணை எனக்குன் கூர் மதியே!மாலை யிருள் சேர்ந்திருக்க
மன மகிழ்ந்து காத்திருக்க,
காளை யெனைக் கண்ட வுடன்
கண் ணொளிரும் கனி ரசமே!

கரம் தொடுக்கும் பூச் சரமும்
கனந்தொழுகும் வார் குழலும்
சுர மிழைக்கும் தே னிதழும்
சுவைகூட்டி கலந்திட வா!

கருத்தானும், வெளுத்தானும்

வெளுத்தானும்
கருத்தானும்
வாடகைக்கு...
வெளுத்தான் விலை அதிகம்,
கருத்தான் விலைக் குறைவு,

கருத்தானை வாங்கியவர்
கவனமின்றி
கை விடுத்து நடக்க,
வெளுத்தானை வாங்கியவர்
வெற்றிப் புன்னகையில்,

களவுக் கண்களுடன்
கருத்தானை வாங்கியவர்,
கனவுக் கண்களுடன்
வெளுத்தானை வாங்கியவர்,

வெளுத்த கணவனை
உடனிருத்தும் உற்சாகம்,
கருத்த கணவனை
முன்னிருத்தல் அரிதாகும்.

கருத்தவனின்
காதல் மொழி
வேம்பாக..
வெளுத்தவனின்
அன்பு மொழி
கரும்பாக..

காலம் போக,
முகமூடி உருக,
கருத்தவன் மனம்
வெளுத்ததெனப் புரிய,
வெளுத்தவன் மனம்
கருத்ததென உணர,
யவ்வனம் போச்சு,
இன்ப வாழ்வு
தொலைச்சாச்சு.

இப்போது,
கருத்தவன்
மடியிருத்தி
உருக,
வெளுத்தவனோ
விலகி நடக்க,

வாங்கிய இருவரும்

விக்கித்து நிற்க...!

பச்சை நிறம்

ஒரு நாட்டின் ராஜாவுக்கு தீவிரமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அரசரும் எல்லா வித வைத்தியரையும் அழைத்து சிகிச்சை சேது பார்த்தார். பலனில்லை.
இறுதியாக அந்த நாட்டின் வெளிப் புறமாக இருந்த ஒரு வைத்தியர் வரவழைக்கப் பட்டார். அவரும் பரிசோதித்து பார்த்தார். அவருக்கு தெரிந்து விட்டது. அரசர் நெடு நாட்கள் உயிரோடிருக்க போவதில்லை என்று.
எப்படி சொல்வது என ஆலோசித்து ஒரு உபாயம் செய்தார். அரசே, நீங்கள் எதைப் பார்த்தாலும் பச்சை நிறமே காண வேண்டும். அப்படி செய்தால் நீங்கள் குணமடைய வாய்ப்புண்டு என்றார்.
அரசரும் உடனே அரண்மனை சேவகர்களை அழைத்து உத்தரவு பிறப்பித்தார். எங்கு நோக்கினும் பச்சை வண்ணமே தெரிய வேண்டுமென ஆணையிடப் பட்டது.
நாடு முழுவதும் பச்சை வண்ணமானது. அரண்மனையும் பச்சை நிறமானது, அங்கு வரும் அனைவரும் பச்சை ஆடை அணிந்தே வந்தனர்.
அரசர் சிறிது மனத்தளவில் தெம்பாகி வெளியே வந்து பார்த்தார், எங்கு நோக்கினும் பச்சை.
அப்போது அவரது பேரன் சிவப்பு நிற சட்டை அணிந்து ஓடி வந்தான். உடனே காவலர் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஓடி வந்த சிறுவன் ஒரு பச்சை நிற கண்ணாடி எடுத்து ராஜா கண்ணிலே மாட்டி விட, அகில உலகமும் பச்சை ஆனது.
உலகத்தை மாற்ற நினைப்பதை விட நம்மை மாற்றிக் கொள்ளல் சாலச் சிறந்தது. இல்லையா?

வதம்

முத்துக்கள் பதித்த
சுவைமது ஊற்றினால்
எனை வதம் செய்கிறாள்,

இறுதியில் தோற்கிறாள்.

Thursday, 22 August 2013

மலைப் பயணம்நெடிய மலைப்பாதையில்
நெஞ்சு நிமிர்த்தி
நடக்கத் தொடங்கிய
அதிகாலைப் பொழுது.

தொடக்கம் எளிதாய்,
இடைப் பற்றிய பையில்
கனமாய் ஏதேதோ!

அரைக்கால் சராயும்,
டீ ஷர்ட்டும்,
கச்சிதமான காலணியும்
நடை பயணத்திற்கு ஒத்ததாய்...

வேக நடையல்ல..
விவேக நடையுடன்,
தனிமையாய்,
இனிமையாய்
ஒரு பயணம்.

தினமென் நாட்களில்
போட்டிகள் கண்டு,
போட்டியில்லா பயணம்
புதுமையாகவே...

மரங்களும்,
கனிகளும்,
குயில்களும்,
குரங்குகளும்
மந்தகாசமாய்
மனதிற்கு இனிமையாய்,

குதூகலத்திற்கு குறைவில்லை,
கூச்சலிடத் தடையில்லை,
பாடிடவும், ஆடிடவும்
பயமென்று எதுவுமில்லை.

கையிலிருந்த
பழம் பிடுங்கி
கடித்து விட்டு ஓடியது
ஒரு குரங்கு.

இடையிடையே
சில பாம்புகள்..
அவை கண்டு நான் ஒதுங்க,
எனை கண்டு அவை பதுங்க..
யாருக்கு யார் மேல் பயம்?

நெடு நேரம் நடந்து
பின் இருந்தேன் இளைப்பாற,
பயணம் மட்டும்
சுகமில்லை,
பயணித்த வழியைத்
திரும்பிப் பார்த்தலும் தான்...

எத்தனை ஏற்றம்,
எத்தனை இறக்கம்,
வாழ்க்கையைப் போல...
எளிதாக எதுவுமில்லை..
என்றாலும் சுகமே!

பூக்களின் வாசனை,
பனித்துளி காற்று,
மூச்சினில் சுகந்தம்,
முயன்றதே ஆனந்தம்..

மரங்களும்,
மிருகங்களும்,
மலைகளும்,
மிக இனிமையானவை...
மனிதர்களும்

அப்படியே இருந்தால்.......?