Saturday 8 November 2014

நிதர்சன நிலம்

















மாறும் உறவுகளின் மடியிருக்கைகளில்
உறங்கிக்கிடந்த மனதை
அன்புக் கயிர் கொண்டு சுருக்கிட்டு
வான்வெளியில் தொங்கவிட
மேக ஊஞ்சல்களின் மத்தியில்
மின்னல்களின் துணையுடன்
அந்தரத்தில் தொங்கிய அப்பாவி மனதை
வெகுண்ட வாழ்க்கைக்காற்று சுழன்றடித்து
பாசக் கயிற்றின் முனையறுத்து

நிதர்சன நிலத்தில் வீழச் செய்தது

வாசனை














கண்மூடி
கற்பனையில் லயித்து
அவளன்பை ஆழமாய் உள்வாங்கி
நினைவுச் செல்களில் துழாவியெழுதிய வரிகளில்

அவளின் வாசனை
அமிழ்ந்திருப்பதாக நினைத்து
ஓடிச் சென்று அருகமர்ந்து
ஒவ்வொரு வரியாக வாசித்துக் காட்டியபோது

உணர்வற்றுச் சொன்னாள்
அவ்வாசனை தனதில்லையென..

அதே வரிகளை
அன்றொரு நாள் வாசித்தபோது
அன்பு முத்தமொன்றை ஈந்து
வைரனா நீயென்றவளை

ஊடல்குளிர் உள்சென்று
இதயத் தமனிகளில்
வாசனையறியும் உணர்வை

அடைத்து விட்டதோ..?

பூஜ்ஜியம்













இயலாமைகளில் விளைந்த
இழப்பீடுகளின் விகிதாச்சாரமறிய
வாய்ப்பாடு தவறிய வாய்க்கணக்கில்
பின்ன இலக்கங்கள் முன்னுக்கு பின்னாகிட
முரண்பட்ட வாழ்க்கையை
கடன்வாங்கி கழித்துக் கூட்டிப் பார்க்க

அனைத்தின் முடிவும் பூஜ்ஜியம் என்றது

இமைச் சிறகசைவில்

























ஆற்றாமையின் பின்விளைவுகளில் உருவான
அனர்த்தங்கொண்ட அவ்வெழுத்துக்களை
குற்றஞ்சொல்லவியலாது
வடித்தெடுக்க முற்பட்ட கவிதையினை
முற்றுமிடாது வைத்திருந்தேன்
உனது இமைச் சிறகசைவிலது

முற்றுப் பெறலாம்..!

மேலுமொரு கவலை


















ஒவ்வொரு படியிலும் கூடிய வேதனையின் முனகல்கள்
உச்சம் தவிர்த்திட உள்ளூரும் ஆசை
நடப்பதை விடுத்து தவழலாமாவெனும் கேள்வி

இடையிடையே இயக்கத்தை நிறுத்தி
சும்மாவிருத்தலில் மிகுந்தெழும் ஆவலுடன்
மேலேறிய பயணத்தில்
தோளேறிய வேதாளமாய்
கவலைகள் கழுத்தை கவ்வ

சுமந்து நடப்பதற்கு
வீழ்ந்து கிடப்போமென விரும்பியபோது
சுமை கூடி மூச்சுமுட்ட
முக்கி முனகி மேலெழுந்து
அடுத்தபடியை அடைந்தேன்
மேலுமொரு கவலை யெனை ஆட்கொள்ள..!

சிறகுதிர்ந்தமனம்


உயிர்க்குடிக்குமுந்தன் விழிக்கதிர்வீச்சில்
உருக்குலைந்தவுளம் உனைக்கொண்டதடி
கயற்விழியாளின் காதல் தேடலில்
கரையுடைந்தமனம் புலம்பெயர்ந்ததடி!

மயில்தோகையென இமைமூடுகளி
மதயானையென எனைக்கொல்லுதடி,
செயல்போதையுற சுவைத்தேனெனவே

சிறகுதிர்ந்தமனம் உனில் சரிந்ததடி !!

ஏக்கமுள்

















பல்வேறு நிகழ்வுகளில்
ஒத்த உணர்வுகள்
எட்டிப் பார்க்கின்றன.

விட்டுக் கொடுத்தலில்
முந்திக்கொள்ளும் மனப்பாங்கு
பாசவேர்களாய் பதிந்திருக்கிறது

அக்கறை கொள்வதில்
அன்பு முகிழ்ந்து மலர்
கொத்தாய் மணக்கிறது

பிறரிடம் பகிரவியலா நேசம்
ஆளுமை கொண்டு உயர்
ஆட்சி செய்கின்றது

அவையில் முந்தியிருப்பச் செய்து
ஆனந்தம் கொள்ளும் பாங்கில்
அன்னையின் சாயல் தெரிகிறது

வாடிவதங்கும் கொடி
படர்ந்து மேலெழும்பி
தாங்கும் கோலாய் நிற்கையில்
நட்பின் உயர்ச்சி மிளிர்கிறது

இவையெல்லாம் இருந்துமென்ன?
உணர்வுகளில் அருகிருந்தும்
உயிர் தொட்டு வாழ்ந்திருந்தும்
இடை நிற்கும் தொலைவுகளில்
ஏக்கமுள் முளைத்து

பெருங்காடாய் நிற்கின்றது

நிழல்














என் சுவடுகளை ஒட்டிகொண்டு எங்கும் திரிகிறாய்
எனது பாதைகள் உனக்கானதாய் நீள்கின்றன.
அகமும் புறமும் இருளாகும் பொழுதினில்
அகப்படாமல் ஒளிகிறாய்.
உறுத்தும் உச்சிப்பொழுதுகளில்
காலடியில் காணாமல் கரைந்துவிடுகிறாய்.
தன் பார்வைகளால் உன்னை காண்பவர்
என்னை அளவீடு செய்கின்றனர்.
நீ நிஜம், நான் நிழல்,
பலர் பார்வைக்கு..
இப்போதெல்லாம்,
என்னைபற்றி நான் தெரிந்துகொள்ள
உன்னை படிக்கிறேன்,
பிற நிழல்களில் பதுங்குகையில் மட்டுமே
உன்னை விலக்குகிறேன்.
நான்தான் நானென பிறர் அறிய
வெளிச்சத்திற்கு வர விழைகிறேன்.
நீயற்ற நான் நிலைபடும் பொழுதிற்கான
நிஜம் உணர்த்தும் பயணம் தேடி

நெடுந்தொலைவு யாத்திரை தொடங்கிவிட்டேன்.