Wednesday 22 October 2014

முத்துக்குட்டி


முத்துக் குவியலை
மொத்தக் குத்தகையெடுத்தவள்
முத்தம் தருகிறாள்
முங்கி மகிழ்கிறேன் நான்..!


அன்பின் வெகுமதி

அலுத்து சலித்து வீட்டிற்குள் நுழைந்த முத்துவேலுக்கு அம்மா காபி கொண்டுவந்து கொடுத்தாள். குடித்துக் கொண்டிருக்கும்போது ஓடிவந்த தங்கை, “அண்ணா என் சுடிதார் சரியாக தைத்துக் கொடுத்திருக்கின்றார் நம்ம டெய்லர்” என்று தனது புது உடுப்பைக் காட்டினாள். அப்போதுதான் தனது உடுப்பை எவ்விதம் டெய்லர் தைத்திருக்கின்றான் என்று பார்க்க தனது அறைக்குள் நுழைந்த முத்துவேல், பேண்டை இட்டு நோக்க, அது நீளம் கூடுதலாக தைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உடனே மனைவியை அழைத்து, “எனது பேண்டை சிறிது நீளம் குறைத்துக் கொடு” என்று கூறினான். அவளோ தனக்கு அடுப்படியில் வேலை இருப்பதாகக் கூறிச் சென்றுவிட்டாள்.
உடனே அம்மாவை அழைத்து தனது பேண்டை அளவு குறைத்துத் தரும்படி கேட்க அம்மாவோ தனக்கும் அடுப்படியில் நிறைய வேலை இருப்பதாகக் கூறி சென்றுவிட, தங்கையைக் கேட்க அவளும் தனது தோழி வீட்டிற்குச் செல்வதாகக் கூறி சென்று விட்டாள்.
இரவு மன சஞ்சலத்துடன் உறங்கிவிட்டான் முத்துவேல்.
வேலைகளை முடித்துவிட்டு வந்த மனைவி, கணவனை ஆதங்கத்துடன் பார்த்து, “அடடா, இவர்தான் நமக்காக எத்தனை கஷ்டப்படுகின்றார்” என்று மன விசனத்துடன் அவரது பேண்டை எடுத்து 2 இஞ்ச் நீளம் குறைத்துத் தைத்து வைத்துவிட்டு படுத்தாள்
பின்னர் வந்த அம்மா, தனது மகன் குடும்பத்திற்காக எத்தனை கஷ்டப்படுகின்றான் என்னும் கரிசனத்துடன் அவனது பேண்டை எடுத்து 2 இஞ்ச் குறைத்து தைத்துவிட்டுப் படுத்தாள்.
லேட்டாக படுக்க வந்த தங்கை, தனக்காக தன் பாசமுள்ள அண்ணன் எத்தனை அன்புடன் புதிய உடுப்பை வாங்கிவந்து தந்தான், அவனது வேண்டுகோளிற்கு செவி சாய்க்காமல் போய்விட்டோமே என நினைத்து பேண்டை எடுத்து 2 இஞ்ச் குறைத்து தைத்துவிட்டுப் படுத்தாள்.

அதிகாலையில் குளித்துவிட்டு வந்து தீபத்திருநாளுக்கான படையல் முடித்து புத்தாடை உடுக்க பேண்டை எடுத்து உடுத்தான். அது முக்கால் பேண்டாகி இருந்தது

திக்கு முக்காடிப்போனேன்

















எழுதுகோல் பிடித்து
எண்ணங்களை விதைத்துக் கொண்டிருந்தவன்மேல்
எண்ணற்ற கோபம் பொங்கியிருந்தது அவளிடம்

உணவுண்ண அழைக்கையில்
உஷ்ணங்கள் தெறிக்கும்
பாத்திரங்கள் பல நேரம்
பரிதவித்து உருளும்
யாரேனுமெனை அழைத்தால்
எரிமலையங்கு வெடிக்கும்

என் கவிதைகளை காதலித்த அவளுக்கு
வர்ணித்தவிதம் பிடிக்கவில்லையென
தொடக்கத்தில் நினைத்தேன்
பின்னர்
கவிதைக்கருவாய் அவளில்லையென
சினந்ததாய் அனுமானித்தேன்

தன் நிலாத்தோழியிடம்
சொல்லியனுப்பினாள்
கோப விளைச்சலின் விதைகள்
புரிந்துணர்வின்மையில் வேரூன்றியதாக

கவிதைகளை விடுத்து
கவனத்தை அவளிடம் செலுத்த
கட்டவிழ்ந்தன பலவுண்மைகள்

அன்பு செலுத்துவதிலும்
அக்கறை காட்டுவதிலும்
என்னையும் என் தேவைகளையும்
பாசங்களையும் நேசங்களையும் புரிந்திருப்பதிலும்
அவளுக்கு நிகரவளேயென அறிவேன்

பின்னொரு தினம்
சொன்னேனவளிடம்
விதைகளின் வேர்களை கண்டறிந்தேனடி
அன்பு நீரூற்றி வளர்க்கபட்ட அவை

உனக்கென நேரத்தை நான்
ஒதுக்காமையிலும்
போய் வரவா என்று சொல்லும்
பொழுதுகளிலும் தான்
நிலம் கண்டு நீண்டு வளர்ந்ததென..

அன்றலர்ந்த தாமரையாய் அகமலர்ந்தவள்
அருகில் வந்து இறுக்கிக் கொண்டு
முத்தங்களை வாரியிறைக்கும் வள்ளலானாள்
திக்கு முக்காடிப்போனேன் நான்.

மழைமீது காதல்


மழைவாசம் மிகுந்த இளங்காலை பொழுதில்
குடைதேட மறந்த குழந்தை மனதுடன்
உடை நனைய மலர்ந்த உற்சாகத் துள்ளலுமாய்
நடை பயின்ற எந்தன் நினைவு கோலங்கள்

சேறென்றோ சாலை பழுதென்றோ உணரா
சீற்றங்கள் கொண்ட தாய் குரலை மதியா
காற்றோடு வந்த கருஞ்சேறை அணிந்த
வற்றாத மகிழ்ச்சி மழையைக்கால் மிகுதி

நண்பர்கள் கூடி ஆனந்தம் பொங்க
விண்ணதிரு மெங்கள் கூத்தாடல் கேட்டு
விண்சோம்பல் களைந்து வேகத்தை கூட்ட
கொண்டோமே காதல் மழைமீது அன்று

மழைமேகம் கண்டு உடை நனையுமென்று
குடைதேடு மெந்தன் தற்கால வாழ்வில்
கரையாத சோகக் கதை சேர்த்து வைத்து
விரைகின்றோம் வாழ்க்கை சுவையிழந்த தென்று..!

காதல் பிறந்த கவிதை நொடிகள்


















கற்பனை தென்றலின் வாசனை தழுவலில்,
உருவங்களற்ற உள்ளங்களின் உரசலில்,
சிறுபொழுது சொற்றாடல் சிதறல்களில்
சிந்தனை கடிதங்களை வாசித்தலில்,
வானம் தொட்டு விடியச் சொல்லி
விரல் துடைத்த இரவுகளில்,
சிறகுகள் விரித்து பறத்தல் வேண்டி
சிலுவைகள் களைய துடித்த கணங்களில்,
இவையாக இருப்பினும்,
இவை மீறிய அந்நொடி,
அகிலம் சுமக்கும் பேரன்பின் ஒருதுளி
ஒத்த அலைவரிசையின் உற்சாக அதிர்வுகளை
ஒன்றிணைக்கும் பாலமாக உயிரிணைத்த போதென
உணர்ந்தவன் நான்,
நீ?

தனிமைத்தீவில் நான்


















குளிர்மழை பெய்து
நினைவுகளில் அனல் தூவியது
சிலிர்த்தவுடல் சிணுங்கல்களின்
சலங்கையொலியை யாசித்தது
முகம் நனைத்தத் துளிகள் முத்த
முத்துக்களை நினைவில் விதைத்தன
சாரல் காற்று காதுமடல்களைத் தழுவி
சங்கீத மொழியை இசைத்துச் சென்றது
தூரத்தொரு மின்னல் பிறந்துன்
விழிகளின் வெளிச்சத்தை வாரியிறைத்தது
சடுதியிலது கடுமழையாய் மாறி
இருள் போர்வை கொண்டெனை போர்த்தி
தனிமைத்தீவில் நானென
தகவல் சொன்னது..!

EDGE OF TOMORROW



நேற்று THE EDGE OF TOMORROW என்ற ஒரு ஆங்கில சினிமா பார்த்தேன் டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்த படம். 2010ல் வெளிவந்த INCEPTION என்னும் லியனார்டோ டி காப்ரியோ கதாநாயகனாக நடித்த நோலான் இயக்கிய சினிமாவைப்போல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது இந்த படமும்.
ஹொரொஷொ சகுரஷகா என்னும் ஜப்பானிய எழுத்தாளரின் ALL YOU NEED IS KILL என்னும் கதையை மூலமாகக் கொண்ட THE EDGE OF TOMORROW நேற்று தோழி NIRAI MATHI யின் பதிவொன்றில் நான் இட்ட பின்னூட்டத்தைக் குறித்து மீண்டும் சிந்திக்க வைத்தது.
இந்த பிரபஞ்சத்தில் அறியப்படாதவை 95%ம் அறிந்தவை எஞ்சிய 5%வும் மட்டுமே என்று விஞ்ஞானிகள் கூறியதாகப் படித்திருக்கின்றேன்
அவ்வாறு இருக்கும்போது இங்கு நமக்குள் வரும் கற்பனைகள் எதுவுமே நிகழக் கூடிய வாய்ப்பில்லை என்று கூற முடியாது. அதீத கற்பனை என்று எதுவுமே இல்லை. ராமாயண, மகாபாரதங்களும் நடந்திருக்கலாம், கனவுகளைத் திருடுவதும், காலங்களை மாற்றி அமைப்பதும் நடக்கலாம், அல்லது நடந்திருக்கலாம்.
இந்த வாழ்வின் அர்த்தம் புரியாமல் ஒவ்வொருவரும் அதற்கான விடையைத் தேடியே இங்கு பயணிக்கிறோம். நமக்கான சந்ததியை நாம் இங்கு படைப்பதுவும் அந்த கேள்விக்கான விடையைத் தேடுவதற்காகக் கூட இருக்கலாம்.என்றேனும் விடை கிடைக்கலாம். கிடைக்காமலே போகலாம். தேடல் மட்டும் நிற்கப் போவதில்லை.
சரி நான் பார்த்த THE EDGE OF TOMORROW வைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஒரு படத்தில் வடிவேலுவிடம் ஒரு நடிகர் சொல்வார், நாம ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோமா? என்று. THE EDGE OF TOMORROW பார்த்ததும் அந்த டையலாக்தான் நினைவுக்கு வந்தது.