Tuesday 25 June 2013

சுவை மது

சுவை தரும் மதுவென
சுகம் தரும் இதழென
மணம் தரும் மலரென
உனைத் தரும் வரமளி!

கனியிதழ் தேன்துளி
கவிதையில் புதுமை நீ,
பனித்துளி போலொரு
பார்வையை வீசடி!

உன்னெழில் மூச்சிலே
உருகுவேன் நானடி,
கன்னி உன் பேச்சிலென்
கவிதையின் கருவடி!

துளிர்கரம் பற்றையில்
துவளுமுன் கொடியிடை,
வளர்பிறை நாளிலுன்
வளைக்கரம் பற்றுவேன்!

வலி

கள்ளிக்காட்டு
முள் குத்தி
வலித்ததில்லை.
அலுவலக
குண்டூசி குத்தி
வலித்தது.

அன்றவன்
சொல் கேட்டு
வலித்ததில்லை.
இன்றது
வலிக்கிறது.

வலி
சொல்லிலா?
சூழ் நிலையிலா?

சம்பிரதாயம்



     அந்த பிரசாரகர் கோவிலுக்கு சரியாக மாலை 6 மணிக்கு பிரசாரத்திற்கு வந்து சேர்ந்து, இறைவன் நாம்ம் சொல்லி சொற்பொழிவைத் தொடங்கினார். தெருக்கோடி நாய் ஒன்று வேகமாக ஓடி வந்து பிரசாரகரைப் பார்த்து இடைவிடாது குரைக்க ஆறம்பித்தது.
     பொருத்துப் பார்த்த பிரசாரகர் அந்த நாயை அங்கிருந்த தூணில் கட்டியிட ஆணையிட்டார்.
     அடுத்த நாளும் இவர் வந்து சொற்பொழிவைத் தொடங்கிய உடனே, நாய் எங்கிருந்தோ ஓடி வந்து குரைக்க தொடங்கியது. பிடித்து தூணில் கட்டி வைத்து பிஸ்கட் போட்டனர்.
     அடுத்த நாளும் இதே போல் நிகழ்வு. அந்த பிரசாரகர் வந்து பேசிய அந்த வார நாட்கள் அனைத்திலுமே இந்த சம்பவம் நடந்தது.
     அடுத்த வருடம் பிரசாரகர் வந்தார். நாயும் காத்திருந்து ஓடி வந்தது.
எனவே பிரசாரகர் சொன்னார். இனி நாயை நான் வருமுன்னே தூணில் கட்டி வைத்து பிஸ்கட் போட்டு விடுங்கள் என்று. இப்படியாக பிரசாகர் வந்து பேசும் முன்னே அந்த தூணில் நாயைக் கட்டி வைத்து பிஸ்கட் இடும் பழக்கம் தோன்றியது.
     இரண்டு வருடங்களில் பிசாரகர் மாறினார், நாயை தூணில் கட்டும் பணி தொடர்ந்தது. நாய் மறித்தது, எனினும் வேறு நாயைக் கட்டி வைத்தனர்.
     ஆக, எந்த பிரசாரகர் வந்தாலும், அந்த கோவிலில், சொற்பொழிவைத் தொடங்கும் முன்னே ஒரு நாயைத் தூணில் கட்டி வைப்பது வழக்கமாகி விட்டது. எதற்கு கட்டுகிறோம் என்று இன்று எவர்க்கும் தெரியாது. ஆனால், கட்டி வைத்தல் தொடரும்.
     இப்படித்தான் நாம் எல்லா சம்பிரதாயங்களையும், எதற்காக செய்கிறோம் என அறியாமல், கண்மூடித் தனமாக பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம்.

ஊடல்

காதலில் புரிதல் மகத்துவம்,
கனவெனும் வாழ்க்கை வசப்படும்
மலரிடை முள்ளென ஊடலாம்
காதலைக் கூட்டிடும் சாரலாம்,
மழையது சாரலாய் தூவட்டும்,
புயல் மழைக் காற்றைத் தவிர்த்திடு!

தாமரை

விரல்நகங்கள் விண்மீனைத் தெறிக்க
விழியோர வெண்ணிலவை ரசிக்க
பொன்வானம் பூப்பந்தல் அமைக்க
நல்லுறவாய் அவளென்னை அணைக்க

மயிலிரகால் மேகத்தைக் குழைத்து
காரிருளில் கண்புருவ மமைத்து
இதழோரம் அமுதங்கள் படைத்து,
கனவொன்றைத் தந்தாளே எனக்கு.

விடிகாலை விழியிமைகள் மலர்ந்து
மலர்சோலை வாசமதை நுகர்ந்து
இயல்பான வாழ்க்கையினை தொடங்க
எழுந்தேனென் தாமரையை நினைந்து!

இனியவளே

என் இனியவளே!
எனக்கு இனி அவளே என்றானவளே!
என் உயிர் மூச்சின் உன்னத ஒலியாய்,
உள்ளிழுக்கும் சுவாசமாய்,
உதிரத்தின் ஓட்டமாய்,
உற்சாக பெரு மழையாய்,
உறவின் உயிர் துடிப்பாய்,
என்றும் என்றென்றும் இருப்பவளே!
விழி மூடி
உன் அணப்பில் கட்டுண்டு
யுகங்கள் பல காண
ஆவலடி!

உயிர் தேடல் நீயாக,
உணர்வினிலென் தாயாக,
என் நினைவு முழுதும்
கலந்தாயே!

எத்தனை பிறவி எடுத்தாலும்
உனக்கென்றே உயிர் வாழ்வேன்.
இது உறுதி!

எந்தனுயிர் நீயாக,
உந்தனுயிர் நானாக….!

காணவில்லை

காணவில்லை...
கடவுளைத் தேடிப் போன
பல்லாயிரம் பேரையும்,
கடவுளையும்...!

தீயிடு

சாதியம் சொல்லிடும்
சாக்கடை சாத்திரம் வேரறு,
பூமியில் மானுடன்
பிறப்பிலும் ஒன்றுதான் என்றிடு,
வாசலில் வந்தவன்
தோள்களில் கையிட்டு அழைத்திடு,
நீயிது நானது
என்றிடும் எண்ணங்கள் தீயிடு!
ஆதியில் வந்த நம்
தமிழர்தம் ஒற்றுமை வென்றிடு!

ஜெய் ஹிந்த்

போர்களத்தில் உயிர்கொடுத்து
பகைவர்களை வேரறுத்து
எம்முயிர்கள் காத்திடுவான்
படை வீரன்.
மலையிடிந்து மரமிடிந்து
வீடிழந்து வனமிழந்து
வாழ்க்கையற்றுப் போன
எம்முயிரையும்
இயற்கையிடம் போராடி
பெறுவதென்றால்
பெறும் சுமைதான்.
அவ்வீர்ர்களை
எங்கள் ஒவ்வோரணுவும்
பாராட்டும்,
எம்முயிர் உள்ளவரை.
ஜெய் ஹிந்த்!

Sunday 23 June 2013

நர்த்தகி

அள்ளி முடித்த சேலை
துள்ளிக் குதித்த கால்கள்
விண்ணை முட்டும் பார்வை
விரல்கள் வண்ணச் சோலை

தன்னில் என்னைக் கொண்டாள்
என்னில் நிறைந்து நின்றாள்
அன்பின் ஆழம் கொண்டு
என்னை ஆள வந்தாள்.

கண்ணில் தாளமிட்டு
விண்ணில் பாதம் தொட்டு
மண்ணில் என்னை வென்ற
மந்திரம் தானென்ன?

படித்தது

கணவன் அவசரமாக வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தான். மனைவி அவனுக்கான சமையலை தயாராக்கி அவனுடைய கைப்பையில் வைத்துக் கொண்டிருந்தாள். அவர்களின் சுட்டிப் பெண் அடுத்த வாரம் ஒரு வயது நிரம்பப் போகிறது, கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் எடுத்து வீசி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அக்குழந்தையின் கைக்கெட்டும் தூரத்தில் ஒரு மருந்து குப்பி இருந்தது. அதைப் பார்த்து விட்டு கணவன் மனைவியிடம் சொன்னான், “அந்த பாட்டில குட்டிக்கு கைக்கு எட்டாம எடுத்து வை, அதில் விஷத் தன்மை உண்டு”, சொல்லி விட்டு வேலைக்கு கிளம்பி சென்று விட்டான்.
சென்ற ஒரு மணி நேரத்தில் திடுக்கிடும் தகவல் அலை பேசியில். அவனது குழந்தை அந்த மருந்தைக் குடித்து விட்டு இறந்து விட்டாள். விரைந்து வீட்டிற்கு செல்கிறான்.
மனைவியைக் கண்டதும் அவன் என்ன சொல்லி இருப்பான்? (அ) என்ன சொல்லி இருக்க வேண்டும்?
அவன் சொன்னது, “அழாதே! நான் உன்னோடு உண்டு!”
அந்த குழந்தையின் இழப்பு அவனுக்கு மட்டுமல்ல, அவளுக்கும் தான். இளங்குருத்தை இழப்பது, அதுவும் தவறுதலால் இழப்பது மிகப் பெறும் வேதனை. என்றாலும், அவளை புண்படச் செய்வதால் என்னக் கிடைக்கும்? அவள் இனியும் வேதனைக்குள்ளாகி அவள் நிலையில் மாற்றம் உண்டாகும். அந்த தருணத்திலும் கணவன் ஆதரவாய் இருந்தால்.......!

புது மலரே!

இரவைக் கிழித்து வரும்
ஒளியின் கீற்றினுடை
காற்றின் திசையுடனே
ஆடும் மலர்களவை..

கோடை கதிர் வெயிலும்
வாடை பனி மழையும்
வாழ்வில் மாறி எனை
வாட்டி வதைத்தாலும்

எந்தன் நிலை உணர்ந்து
எண்ணம் மாற வைத்து
வண்ணம் மலர வைக்கும் உன்
கண்களே புது மலரன்றோ?

கொலைகாரி

 

அவனெழுதிய காதல் கவிதையை

ஆயிரம் முறை படித்து
மயிலிறகாய் பாவித்து
புத்தக அலமாரியில்
பதுக்கி வைத்தேன்.

இரண்டு நாள் அவனெழுத்தைக்
காணாத ஏக்கத்தில்
அவன் கவிதைத் தேடி
அலமாரி திறந்தேன்.
எங்கிருந்தோ வந்த
என் எதிரி,
புத்தகத்தின் இடையிருந்து
மீசையை ஆட்டிக்கொண்டு
மிரட்ட
பதற்றத்தில்
புத்தகம் தவற
ஏற்கனவே நைந்திருந்த
கவிதை தாள்
கிழிந்து போனது,

இது நாள் வரை
எதிரியைக் கண்டு
வெகுண்டு ஓடிய நான்
அன்று வந்த ஆத்திரத்தில்
அவனை அடித்தே கொன்றேன்.
நானும் கொலைகாரியானேன்.

Saturday 22 June 2013

வாழ்வெல்லாம் நீ



கண்ணுக்குள் இமை மூடி உனைத் தேட
கனவுக்குள் கவி பாடும் நீ!
விண்ணுக்குள் உனைத் தேடி நான் போக
விண்மீனில் ஒளிர் மதியாய் நீ!
மண்ணுக்குள் விதையாகி விருட்சமென
மனதுக்குள் வியாபித்தாய் நீ!
பொன்வீணை மீட்ட வரும் மெல்லிசையாய்
பெண்ணே என் வாழ்வெல்லாம் நீ!

அழகு தேவதை



அழகு தேவதையை
அலங்கரித்து வைத்தது  ஏன்?
அழகுக்கு அழகு சேர்த்து
அற்புதத்தைக் காணவா?
வானுரையும் தேவரெலாம்
வந்தாரோ உனைக் காண?
குவலயத்தில் தேவரெலாம்
திகைத் தொளிய
குமரியுனை கைபிடிக்க
நான் வரவா?