Friday 26 July 2013

புழுவாய்



கரும்பச்சை இலைதொட்டு
கனவொன்றில் புகவந்தேன்.
இலைதின்னும் புழுவாக
இயல்பில்லா கற்பனையில்,
எங்கோ என் பிறப்பு
எங்கோ என் இறப்பு,
வாழ் நாளில் பெற்றதென்ன
வயிற்றுக்கு உணவன்றி?

மழை சிந்தும் நீர் விழவே
இலை மறைவில் ஒளிவேனோ?
கதிரவனின் கடும் ஒளியில்
காய் பூவில் மறைவேனோ?
இயல்புக்குள் வாழ்ந்தபடி
என்வாழ்வே இயற்கையென்பேன்..

மனிதருக்குள் மனமிருந்தும்
மாற்றங்கள் கொண்டிருந்தும்
இயற்கையினை நசிப்பித்து
என்ன சுகம் கண்டுகொண்டார்?
உடல் சோர்வைக் கூட்டி பல
நோய்களிடை வாழுகின்றார்.
சுக வாழ்க்கைக்கு அடிமையென
சுமை பலவும் கூட்டுகின்றார்.
இயற்கையினை எருவாக்கி
இயல்பு நிலை மாற்றுகின்றார்.

மூச்சடைத்து போனபின்பு
முடிவினிலே கண்டதென்ன?
புழுவாயும் மனிதனெனும்
உருவாயும் பூமிதனில்
இறப்புற்ற பின்பிங்கு
எடுத்துச் செல்ல ஏதும் உண்டோ?

No comments:

Post a Comment