Monday 14 July 2014

முதல் கவிதை

முதல் கவிதை

நினைவடுக்குகளில் எழுத்துக்களை
தேடிக் கொண்டிருந்தேன்,
முதல்முறையாய்
அவளையென் காகிதத்தில் வடிக்க..

ஒவ்வொரு எழுத்தையும்
வேண்டுதல்களுடன்

விதைத்துக்கொண்டிருந்தேன்.

ஒலி வடிவமில்லா எழுத்துக்களில்
உயிர்வடிவம் கொடுக்க
உற்சாகத்தையும் இணைக்க
முயன்று கொண்டிருந்தேன்.

சிற்பியின் செதுக்கல்களில்
சிதறிய துகள்களாய்
காகித குப்பைகள் குவிந்தன.

என்னுள் பதட்டபூமி
சுற்றலின் வேகம்
அபரிமிதமானது.

இரவுத் தென்றல் தொலைந்து
நிலவுத் தோழனும்
அகன்றுவிட்டான்.

எண்ணத்தை வடிக்கவா?
என்னவளின்
வண்ணத்தை வடிக்கவா?

கேள்விகள் மட்டுமே
வியாபித்த மனதில்
விடைக்கு இடமின்றி
முடிந்தது இரவு.

அலுவலக வாசலில்
அவளை கண்ட நொடி
என்னை மறந்து
எனது சட்டைபையிலிருந்து
வெற்றுக் காகிதத்தை
எடுத்துக் கொடுத்தேன்.

வாங்கியவள்,
காகிகத்தை பார்க்கவில்லை,
என் கண்களை பார்த்தாள்.
புன்முறுவல் பூத்தாள்,
வெற்று காகிதத்தில்
முத்தத்தை ஈன்றாள்.

என் வானில்
ஆயிரம் மின்னல்கள்
அவசர தோரணம் கட்டியது.
முதல் கவிதையே

முத்தத்தை ஈன்றது!

No comments:

Post a Comment