Thursday 24 July 2014

தீ பிடிக்கும்
















எனக்குத் தீந்தமிழ் பிடிக்கும்
தேமதுர இசை பிடிக்கும்
நல்லோவியம் பிடிக்கும்
நளினங்கொண்ட நடை பிடிக்கும
நற்கதை பிடிக்கும்
நடிப்புலகம் பெருமைகொள்ளும் யாவரும் பிடிக்கும்

கொட்டும் மழையில்
குடையின்றி நடத்தல் பிடிக்கும்
என் கோப முடிச்சுகளை
நீ இதழ் கொண்டு அவிழ்ப்பது பிடிக்கும்
கற்பனையுலகில் உனது தடங்கண்டு
களிநடனமாடப் பிடிக்கும்

விழிமுனையில் எட்டி நிற்கும் துளி கொணருமுன்
கார சமையல் பிடிக்கும்
என்றும் எளிதாய் ஜீரணமாகும்
என் இட்டலியே உனை மிகவும் பிடிக்கும்
அடர்குளிரின் நடுவே
அகமுசுப்பும் சுவை கொண்ட தேநீர் பிடிக்கும்

தெளிந்த நீரோடை
வளைந்து செல்லும் மலைச் சாலை
எங்கும் பசுமையுடன்
எனை கொஞ்சும் காற்று
கார்மேக வானம்
கவி சூல் கொள்ளும் தனிமை
எல்லாம் பிடிக்கும்

அத்தனையும் நான் ரசிக்க
எனை ரசிகனாக்கிய உனை
எனது உயிரெனப் பிடிக்கும்

ஆனால்,
உனக்குப் பிடித்தமானவற்றில்
எனைவிட மேலாயொருவனை நீ சந்திக்க நேர்கையில்
அந்த நொடியே என் ஆதி முதல் அந்தம் வரை
பொறாமையெனும் தீ பிடிக்கும்!

No comments:

Post a Comment