Saturday 22 June 2013

கரம் பிடிக்க




அழகிய பின்மாலைப் பொழுது,
சில்லென்றக் காற்று,
அமைதியான சாலை,
அழகான அவள்,
அன்பான நான்,
கதைபேசி நடை பயின்றோம்,
கவி பாடி கலகலத்தோம்,
நான்கு வருட காதலிலே
என் விரல் கூட பட்டதில்லை.
உணர்வுகள் தாம்
ஒன்றாயின,
எம் உருவங்கள் அல்ல.
மரங்களிலே நீர் பூக்கள்,
மனங்களிலே சிரிப்பூக்கள்,
மெலிதாய் அவள் விரலென் விரலை
தொட்டது போல் உணர்வு.
இல்லையில்லை,
என் ஆழ்மனதின் ஆசையது.
சிறு குழந்தை
பள்ளிக் கதையை சொல்வது போல
உற்சாகமாய் பேசி வருகிறாள்.
அட ஆமாம்,
அவளறியாமல்
அவள் விரல்கள்
என் விரலைத் தொடுகின்றனவோ?
அவளறிந்தா?
அறியாமலா?
ஆசை என் மூச்சடைக்க
அவள் கரம் பற்றிட
ஆவல் கொண்டேன்.
ரோஜாவின் இதழ் போன்ற
அவள் விரல் நுனி தொடுகையில்
உள்ளத்தில் பனிமலை
பொங்கி வழிந்தது.
பற்றவா?
வேண்டாமா?
கயவா எனக் கூறுவாளோ?
கண்ணியம் காத்திட வேண்டாமோ?
அடுத்த தெரு வளைவில்
திரும்புகையில்
மென் கரம்
மீண்டும் பட
என்னையறியாமல்
அவள் கரம் பற்றினேன்.
நின்றாள்.
கண் கலந்தாள்.
புன்னகைத்தாள்.
பற்றிய என் கையுள்
அவள் கையை
பறி கொடுத்தாள்.
உள்ளத்தில் உற்சாகம்
உருமி மேளம் கொட்டியது.
பற்றிய கரம் விடாது
தரையில் கால்கள் படாது
பறந்து வந்தோம் வீட்டிற்கு...!

No comments:

Post a Comment