Monday, 8 July 2013

என்ன தவம் செய்தேனடி,



      என் பத்து வயது சுட்டிபெண் கயல்விழி அவளது அம்மாவிடம் அடம் செய்து கொண்டிருந்தாள். எப்போதும் போல சாப்பிடத் தான். நான் செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருந்தேன்.
     “என்னங்க, இவள என்னன்னு கேக்க மாட்டிங்களா? 2 இட்டலி கூட சாப்பிட மாட்டேன்றா” என் மனைவி என்னையும் இழுத்து விட்டாள்.
     “தங்கம், அம்மா சொல்றாளே, கேளேண்டா! உனக்கு தானே உடம்புக்கு நல்லது!”
     “சரிப்பா! நீங்க சொல்றதுக்காக நான் சாப்பிடறேன். 4 இட்டலியும் சாப்பிடுறேன். ஆனா, எனக்கு நீங்க ஒரு ப்ராமிஸ் பண்ண்ணும்”
     சின்னக் குழந்தை தானே, என்ன கேட்கப் போகிறாள்? ம்ம், ஒரு சைக்கிள், இல்லையென்றால் ஒரு கடிகாரம், ம்ம் “சரிம்மா!”
     பின்னர் ஒரு வார்த்தைப் பேசாமல் 4 இட்டலியையும் தின்றுவிட்டு கைகழுகி விட்டு என்னிடத்து வந்து, “அப்பா!, நீங்க ப்ராமிஸ் பண்ணி இருக்கிங்க”
     “சரிம்மா! என்ன பண்ணணும்?”
     “அப்பா! எனக்கு மொட்ட போடணும்!” எனக்கு திடுக்கென்றது. பெண் குழந்தை, எப்படி இவளுக்கு மொட்டை போடுவது? கருகருவென வளர்ந்த அவள் கூந்தல்  தோள்களில் துள்ளி விளையாடுகிறது.
     “இவளுக்கு என்ன கொழுப்பா? என்ன தைரியம் இருந்தா இந்த வயசிலயே உன் இஷ்டத்துக்கு மொட்ட போடணும்னு நிப்ப?” என் மனைவி கோபமாக சத்தம் போட்டாள்.
     “அப்பா! நீங்கதான் எனக்கு மகாத்மா, அரிச்சந்திரன் கதையெல்லாம் சொல்லி ப்ராமிஸ் கொடுத்தா மீளக் கூடாதுண்ணு சொல்லி இருக்கிங்க” என் மகள் என்னை மடக்கி விட்டாள்.
     மனைவியின் கடும் கோபத்துக்கிடையே, கயல்விழியை முடி திருத்தும் இடத்திற்கு கொண்டு சென்று மொட்டை போட வைத்தேன். மனம் வலித்தது. இந்த காலத்து குழந்தைகளுக்கு எப்படி எல்லாம் ஸ்டைல் பண்ண வேண்டி இருக்கு!
     அடுத்த நாள் காலை எனது காரில் என் மகளை கொண்டு பள்ளி காம்பவுண்ட் கேட்டருகே விட்டு திரும்பினேன். அப்போது இனி ஒரு காரில் என் மகளை ஒத்த பிராயம் கொண்ட பையன் ஒருவன் இறங்கினான். என் மகள், “ஹாய் ரசூல்!” என்று கூறி ஓடிச் சென்று கை பிடித்துக் கூட்டிப் போனாள். அந்த பையனும் மொட்டை போட்டிருந்தான். நான் இதுதான் இந்த காலத்து நாகரீகம் போல என்று எண்ணியவாறு காருக்கு நகர்ந்தேன்.
     அப்போது அந்த காரிலிருந்து ஒரு யுவதி இறங்கி வந்து என்னை நோக்கி, “சார், நீங்க தான் கயல்விழியோட அப்பாவா?” என்று கேட்டார்.
நான் ஆமாம் என்றேன்.
     “சார், நீங்க இந்த கயல்விழிய பொண்ணா கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்கணும்” என்றார். நான் விழித்தேன்.
     “சார், என் மகன் ரசூல், உங்கள் மகளுடன் தான் படிக்கிறான். அவனுக்கு ரத்த கான்சர். சிகிச்சை எடுத்ததில் தலை முடியெல்லாம் போய்விட்டது. என் மகன் வெட்கப் பட்டு பள்ளிக்கு வரவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் கயல்விழி இவனை பார்க்க வந்தாள். அப்போது ரசூலிடத்தில், நீ பள்ளிக்கு வா, உன்னை யாரும் ஏளனம் செய்யாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள். அதற்கு அவள் இப்படி ஒரு வழி கண்டு பிடிப்பாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார்.
     நான் அசடு வழிந்து, “பரவா இல்லைங்க” என்று சொல்லி காரில் ஏறும் போது என் கண்கள் கலங்கி இருந்தன.
     “என்ன தவம் செய்தேனடி, உன்னை மகளாய் பெற!”

No comments:

Post a Comment