Wednesday 14 August 2013

ஃப்ரீடம்

அலுவலத்தில்
அளவற்ற நேரம்
அடைபட்டுக் கிடக்கும்
எனக்கு,
வெளியே வரும் 
வேளையில் சொல்லும்
“அப்பாடா ஃப்ரீடம்” தான்
எனக்குத் தெரிந்த ஃப்ரீடம்!

கல்லூரியில்
பேராசிரியரிடம் மாட்டி
வெளியே வரும்
வேளையில் சொல்லும்
“அப்பாடா ஃப்ரீடம்” தான்
எனக்குத் தெரிந்த ஃப்ரீடம்!

வண்ணத் திரையில்
ஹீரோக்கள் காட்டும்
சாகசங்கள்தான்
எனக்குத் தெரிந்த ஃப்ரீடம்.

ஒரு வீரன்
எல்லையில்
சுடுபட்டுச் செத்து
தலையற்ற பிணமாய்
வந்தாலும்
வருத்தமில்லை.

திரையில்
என் ஆசை ஹீரோக்களின்
முகம் காண
முடியாமல் போவதுதான்
என் உயிரை
மாய்த்துக் கொள்ளுமளவு
வேதனை தரும் சோகம்!

எம்குலப் பெண்கள்
அயல் நாட்டில்
மார்பறுத்து
மான பங்கப் படுத்தப் பட்டாலும்
கவலையில்லை.

எனக்குப் பிடித்த ஹீரோயின் அழகா?
உனக்குப் பிடித்த ஹீரோயின் அழகா என
போட்டியிட முடிந்தால்
போதும்.

எங்களால்
குடியரசு தலைவரையும்
குறை சொல்ல முடியும்,

ஆனாலும் எங்களுக்கு
பொய் சுதந்திரம்
கிடைத்ததென்று
வாதம் செய்வோம்.

சுதந்திர தினம்
விடுமுறை நாள்.
டிவியிலும்,
இன்டர் நெட்டிலும்
மூழ்கிக் கிடந்தால் போதும்.
வேறென்ன வேண்டும் நமக்கு?

No comments:

Post a Comment