Wednesday 7 August 2013

பயணம்

     கிழக்கு கடற்கரையோர தேசிய நெடுஞ்சாலை. இரவு நேரம். நீண்ட நெடுஞ்சாலையில் எனது காரை ஓட்டியபடி இருந்தேன். நான் மட்டும் தனிமையாக சென்னையை நோக்கி. வாயில் “கண்டேன், கண்டேன், காதலை” எனப் பாடலை முணுமுணுத்தவாறே.
     இரவு நெடு நேரம் வாகனம் ஓட்டி வருவதால், கண்களில் லேசான எரிச்சலும், உடலில் சிறிது அயற்சியும். அப்போது, எதிரில் வந்த லாரியை வேகமாக ஓவர்டேக் செய்த கார் ஒன்று என்னை நோக்கி வேகமாக வந்தது. நான் செய்வதறியாது வேகமாக இடது புறம் எனது காரை திருப்பி அங்கிருந்த பள்ளத்தில் கொண்டு காரை செருகினேன். நல்லவேளை. எதுவும் பாதிப்பின்றி நானும் காரும் தப்பினோம்.
காரை ரிவர்ஸ் எடுத்து சாலையில் கொண்டு வந்து மீண்டும் சென்னையை நோக்கி செலுத்தினேன்.
     முழுக்க முழுக்க எதிரில் வந்த காரின் தவறு. நான் மிகச் சரியாக என்னுடைய பாதையில் சென்று கொண்டிருந்தேன். ஆனால், எதிராளியின் தவறாய் இருந்தாலும், விபத்து நடந்து இருந்தால் எனக்கும் தானே பாதிப்பு?
     என் சாலை, என் பகுதி என்று இங்கு எதுவும் இல்லை. வருபவன் பாதையை நானும் கவனிக்க வேண்டும். அதற்கேற்றார்ப்போல என் பாதையை நான் வகுக்க வேண்டும்.
     தேவைப்பட்டால் ஒதுங்க வேண்டும். சில சமயங்களில் அவசியப்பட்டால் நேராய் மோதுவதாய் பாவனை செய்து தவறுபவனை விலகச் செய்ய வேண்டும்.
     வாழ்க்கையும் அப்படித்தான். வளைவு சுளிவுகளிலும், பள்ளம், மேடுகளிலும் ஒரே மாதிரி பயணித்தல் எளிதில்லை. தேவைப்படும் சமயங்களில் சிறு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
     அடிப்படையான வாகன ஓட்டுதலுக்குத் தேவையான ஸ்டீயரிங்க் பிடித்து திருப்புதல், ஆக்சிலேட்டர் அமுக்குதல், பிரேக் அழுத்துதல் போன்ற காரியங்கள் ஒருபோதும் மாறுவதில்லை.
     வாழ்க்கையிலும் மனிதத்துக்குத் தேவையான அடிப்படை குணங்கள் மாறப் போவதில்லை. ஆனால் எந்த குணத்தையும் எந்த நேரத்திலும் எப்படி பயன்படுத்த வேண்டுமெனத் தெரிந்திருக்க வேண்டும்.
     நிறைய பேரின் வாழ்க்கை வேதனையாவதற்கு காரணம் எந்த குணத்தை எங்கே எப்படி உபயோகப் படுத்த வேண்டுமென தெரியாமலிருப்பதுதான்.

     நமது வாழ்க்கை நல்ல சொகுசான அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத பயணமாக அமைய நமது அடிப்படை குணங்களை தேவைப்படும் விதத்தில், தேவைப்படும் இடத்தில் சிறிய மாற்றங்களைச் செய்து மகிழ்ந்து வாழ்வோமா?

No comments:

Post a Comment