Thursday, 8 August 2013

கள்ளி

துயில் கொள்ள வந்தாள்
துயர் ஏந்தி வந்தாள்
மயில் தோகை மூடி
மனம் பின்னல் கொண்டாள்.

விழியோர கோபம்
விலகாது போலும்,
இதழ் தீண்டினாலும்
இனிக்காது போலும்.

விரல் தேடல் கூட
வியர்ப்பாகிப் போக
மனம் சோர்ந்து வாடி
மதிலேறிப் போச்சு

கனாக் கூட காதல்
துயர் சொல்லிப் பாட
வழியற்றப் பாதை
துணையற்ற பயணம்.

விடிகாலை நேரம்
குளிர் காற்றில் நீந்தி
சுடு தேநீ ரிட்டு
சுவைகென்னைச் சேர்த்து

அருந்தாயோ வென்று
அவள் கையில் நீட்ட
துளிர்க்கின்ற காதல்
விழியியோரம் மின்ன

அருகாமை வந்து
அணைப்போடு நின்று
மலர் சூடச் சொல்லி

மணந்தாளே கள்ளி!

No comments:

Post a Comment