Monday 26 August 2013

வாழ்க்கை



















முடிவறியா வாழ்க்கை
பாதையறியா பயணம்,
தூரங்கள் எத்துணையாயினும்
துணிந்து நான்
கடக்கத்தான் வேணும்.

வருவதை தவிர்ப்பதோ,
விரைந்ததை கடப்பதோ,
முடியாது.

மேகத்துள் கலக்கவோ,
மண் பறித்து மறையவோ,
கல்லிடித்து ஒளியவோ,
காரிருளில் கரையவோ
இயலாது.

நக மிழந்து நின்றாலும்
விரல் ஒடிந்து வீழ்ந்தாலும்
குரல் கசந்து கனத்தாலும்
முகம் சிதறிப் போனாலும்,
முடிந்தவரை முட்டி
கடைசிவரை எட்டித்தான்
ஆகணும்.

சுற்றத்தார் பலருண்டு
நட்பென்னும் துணையுண்டு
பாதியாய் இணையுண்டு
பெருமையில் உடனுண்டு,
எனினும்

அவரவர் சுமைகளே
அவரவர்க்கு பாரமாய்,
சில நாள் சுமப்பார்,
பல நாள் தொடுவார்,
வெகு நாளென்றால்
விரைந்தவர் மறைவர்.

இதுதான் வாழ்க்கை,
இதுதான் இயல்பு,
என் சுமை சுமக்க
எனைக் கொண்டே பற்றும்.

ஒற்றைக் கால் கொண்டு
உந்தியுந்தி நடந்தேனும்
இருகால் இல்லாது
இழைந்தே போயேனும்
எப்படியாவது நான்
வாழ்ந்துதான் ஆகணும்.

இயன்றதை செய்து
இயல்பாய் மகிழ்ந்து,
ஒரு கரம் கொண்டு
என்சுமை தூக்கி
மறுகரம் என்றும்
மற்றவர்க்கே என
மகிழ்ந்து கை கொடுத்து
வாழ்ந்திட வாழ்க்கை
இனிமையாய் ஆகும்!

No comments:

Post a Comment