Sunday 18 August 2013

நாம் நாமாக

அதிகாலைப் பனிக்குளிர்
அமைதியான மெல்லிசை
அசைந்தாடும் காற்று
அத்தனையும் நீயின்றி!

நிஜமில்லா நினைவுகளில்
நிழல் படிந்த பொழுதுகளில்
கடிவாளம் கட்டாத
கனவுகளில் நான்!

காத்திருப்பை வாழ்வாக்கி
கனவுகளில் வளம் சேர்த்து
கதைப்பேசா பொழுதுகளின்
காவலனாய் காண்!

நேசக் கரம் தொட்டு
சுவாசம் தனில் முட்டி
உலர் கூந்தல் நுனி பட்டு
பிறர் காதல் உயிர்ப் பெறலாம்.

உயிர் தொட்டு உறவாடி
உணர்வுக்குள் உனை நாடி
சுயம் போற்றி நமைத் தேடும்
சுவைக் காதல் நமதன்றோ?

நீயின்றி நானில்லாக்
காதலர்க்குத் தோல்வியுண்டு.
நாமிங்கு நாமாக
நம்காதல் நலிவுறுமா?

நீ சிறக்க நானுதவி
நானுயர நீ உருகி
நீ நீயாய் நான் நானாய்,
நம்காதல் மகிழ்த் தேனாய்!

நீயில்லாப் பொழுதினிலும்
நானிங்கு நானாக,
நிதமெந்தன் நினைவுகளில்
நீயுண்டு தேனாக!

No comments:

Post a Comment