Thursday 22 August 2013

மலைப் பயணம்















நெடிய மலைப்பாதையில்
நெஞ்சு நிமிர்த்தி
நடக்கத் தொடங்கிய
அதிகாலைப் பொழுது.

தொடக்கம் எளிதாய்,
இடைப் பற்றிய பையில்
கனமாய் ஏதேதோ!

அரைக்கால் சராயும்,
டீ ஷர்ட்டும்,
கச்சிதமான காலணியும்
நடை பயணத்திற்கு ஒத்ததாய்...

வேக நடையல்ல..
விவேக நடையுடன்,
தனிமையாய்,
இனிமையாய்
ஒரு பயணம்.

தினமென் நாட்களில்
போட்டிகள் கண்டு,
போட்டியில்லா பயணம்
புதுமையாகவே...

மரங்களும்,
கனிகளும்,
குயில்களும்,
குரங்குகளும்
மந்தகாசமாய்
மனதிற்கு இனிமையாய்,

குதூகலத்திற்கு குறைவில்லை,
கூச்சலிடத் தடையில்லை,
பாடிடவும், ஆடிடவும்
பயமென்று எதுவுமில்லை.

கையிலிருந்த
பழம் பிடுங்கி
கடித்து விட்டு ஓடியது
ஒரு குரங்கு.

இடையிடையே
சில பாம்புகள்..
அவை கண்டு நான் ஒதுங்க,
எனை கண்டு அவை பதுங்க..
யாருக்கு யார் மேல் பயம்?

நெடு நேரம் நடந்து
பின் இருந்தேன் இளைப்பாற,
பயணம் மட்டும்
சுகமில்லை,
பயணித்த வழியைத்
திரும்பிப் பார்த்தலும் தான்...

எத்தனை ஏற்றம்,
எத்தனை இறக்கம்,
வாழ்க்கையைப் போல...
எளிதாக எதுவுமில்லை..
என்றாலும் சுகமே!

பூக்களின் வாசனை,
பனித்துளி காற்று,
மூச்சினில் சுகந்தம்,
முயன்றதே ஆனந்தம்..

மரங்களும்,
மிருகங்களும்,
மலைகளும்,
மிக இனிமையானவை...
மனிதர்களும்

அப்படியே இருந்தால்.......?

No comments:

Post a Comment