Tuesday 6 August 2013

அதிகாலை

ஆர்ப்பாட்டமில்லா
அதிகாலை வேளை.
இழுத்துப் போர்த்தி
இன்பக் கனாவில்
இழைந்து கிடந்தேன்.
சற்றே திறந்தேன்
சாளரக் கதவை,
வெளிச்சமில்லா
விடிகாலை.
பறவைகளின் பாடல்,
காற்றுடன் கூடிய
இலைகளின் ஊடல்,
பட்டாம் பூச்சிகளுக்கென்றே
பூக்களின் வாசம்,
இடையில் நான்
திருடனாய் சுவாசிக்க,
சூரியன் ஒளியுடன்
கைது செய்ய வந்தான்.
சட்டென ஒரு மழை.
சடசடவென
பறவைகள் பறந்து
மரங்களை அண்ட,
பூக்களில் படிந்த
பனித்துளி மறைந்து
புதியதாய் பூத்து நிற்க,
நான் படபடவென ஓடி
சாளரம் திறந்து
முகம் நீட்டி
மழை வாசம் பிடிக்க,
பக்கெட் வாளியை
மேலே கொட்டி
அம்மா திட்டினாள்.

“எந்திரிடா கழுத, நேரமாகல வேலைக்கு?”

No comments:

Post a Comment