Wednesday, 23 September 2015

Rishaban Srinivasan


அன்பான பண்பான நண்பரான இவர் எனக்கு நீண்ட நாட்களாக நட்பில் இருப்பவராவார்.
தொடக்கம் முதலே இவரது எழுத்தாற்றல் கண்டு வியந்தும் பயந்துமே இருக்கின்றேன். சின்னச் சின்ன மூன்று நான்கு வரி கவிதைகளாகட்டும், பெரிய உணர்வுகளை அப்படியே உரித்துக் காட்டும் கவிதைகளாகட்டும், அட்டகாசமான நடையில் அனைவரது உள்ளத்தை கவரும் கதைகளாகட்டும் மிக உயர்ந்த தரத்தை கொண்டது இவரது படைப்புகள்.
நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கும் சிறந்த எழுத்தாளரான இந்த நண்பரை கருத்தாய்வு பதிவிட எனக்கு இயலுமா என எண்ணம் இருந்த போதிலும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவராக இவர் இருப்பதனால் கருத்தாய்வு பகுதியில் இவரையும் எடுத்துக்கொண்டேன்.
எனக்கு தொடக்கம் முதலே இவருக்கு பின்னூட்டம் இட தயக்கம் உண்டு. நான் மிகவும் அதிகமாக பின்னூட்டம் இடத் தயங்குவது இவருக்கும், எனது முதல் முகநூல் குரு
ரேவா பக்கங்கள்க்குமே ஆகும்
ஏனெனில் இவர்களது எழுத்துக்களில் மேலோட்டமாக ஒரு அர்த்தம் இருந்தாலும் அவர்களது எழுத்துக்களின் உள்ளுறையும் அர்த்தங்கள் அநேகம்
ஒற்றைச் சொல் கொண்டு சடசடவென பெருமழையாக பலப்பல கவிதைகளை பொழிந்துவிடுவார். நதி, மேகம், ப்ரியம், ஜ்வல்யாவென இவருக்கு பரிச்சயமான சொற்கள் இவர் உபயோகப்படுத்துகையில் மிக அழகு
இதன் பின்னரே
உன் ஞாபகங்களைச்
சேர்க்க ஆரம்பித்தேன்..
முதன் முதலில்
என்னடா ஆச்சு உனக்கு
என்று நீ கேட்டதும்..
உன் பார்வை என்னைத் தழுவியதும்
உன் சிறகுகளை
நீ ஒளித்துக் கொண்டதுமான
ஒரு தேவ தருணத்தில்
சொல்லாமல் புரிந்து கொண்டேன்
விழித்திருக்கும் கண்கள்
பார்க்கத் தவறிக் கோண்டிருந்த
உன் அன்பை !
விழிகளில் துளிர்த்த அன்பை உணர்வதின் அழகு எத்தனை அழகாக வெளிப்பட்டிருக்கிறது
வானம்
எனக்குப் பிரியமான
நட்சத்திரத்தை
இன்று ஒளித்து வைத்தது..
என்ன தேடியும் கிட்டாமல்
மொட்டை மாடியிலிருந்து
கீழிறங்கிப் போனேன்.
வானம் உறங்கியதும்
நட்சத்திரம் வெளிவந்து
என்னைத் தேடிக் கொண்டிருந்ததாம்..
கண் விழித்த காலையில்
பறவை சொல்லிப் போனது
என்னிடம்
பறவையின் மொழி புரிந்தவரோ, வானிலுறையும் நட்சத்திரத்தின் மீதும் பிரியம் கொண்டு தேடிக் களைத்தபின் அவரை தேடி நட்சத்திரமும் வந்ததாமே, அழகோ அழகு
என்னுயிரைக் குடிக்குமுன்
யோசித்திருக்க வேண்டும்..
அல்லது..
பிரபஞ்சக் கிளையை உலுக்குமுன்..
அதுவுமின்றி
உயிர் முட்டையின் ஜீவ கருவினைக்
கொண்டாடத் தவறிய உன் குற்றத்தை
என் மீதே கழுவேற்றிக் கொண்டாய்.
பூபாரம் தொலைத்த நாளில்
உனக்காகவேனும்
என்னை விட்டு வைத்திருந்திருக்கலாம்..
அனாதையாய் அலையப் போகிற
உன் ஆன்மாவின் முனகலை
யாருமற்ற நாளில்
நீயாவது கேள்..
வாழ்நாளை வசப்படுத்தத் தெரியாமல்
வாழாமல் முடித்ததெப்படி என்று..!
இக்கவிதைக்குள்தான் எத்தனை அர்த்தங்கள் ஒளித்துகொண்டிருக்கின்றன. வாசித்து நீங்களே உணருங்கள்
முட்டுக் கொடுத்து
நிறுத்தியதை
உருவி விட்டாய்..
சரிகிறது ஒவ்வொன்றாய்
உன் பக்கம்
என் நினைவுகள் !
முதலில் காலைத்தான்
நனைக்க நினைத்தேன்..
முழுவதும்
உள் வாங்கிக் கொண்டது
அந்த நதி !
இவ்வகை குட்டிக் கவிதைகளில் நம்மை அப்படியே நிலைகுத்தி நிற்கச் செய்து மனதை கொள்ளை கொள்கிறார்.

மிகச் சிறந்த எழுத்தாளரான நண்பரை எனது அன்பான தோழமைகளுக்கு அறிமுகப் படுத்துவதில் பெருமை கொள்கிறேன். வாழ்த்துங்கள் நண்பர்களே

No comments:

Post a Comment