Monday 21 September 2015

எப்படிச் சொல்லுவேன்

அவளின் கூவியழைத்த குரலுக்கும் செவிமடுக்காது
ஆழ்ந்திருந்த புதினத்தின்
ஒப்பற்ற நாயகியை
உள்ளத்தில் நாயகனாய் எனையே நினைத்தவாறு
ரசித்துக் கொண்டிருந்தேன்

அடர்ந்த வனம்
நிலவொளிரும் வானம்
சலசலக்கும் நீரோடை
மரமல்லி உதிர்த்த மலர்கள்
அதனிடையே மந்திரப் புன்னகையுடன் அவளென
வர்ணனையில் வசப்பட்டும்

தூரத்தே வரும் சமரனை கொல்ல
இடுப்பிலில்லா வாளை
இருப்பதாயெண்ணியும்
வாசிப்பில் அமிழ்ந்திருந்தேன்

சட்டென்று முன்வைக்கப்பட்ட
காபியின் மணத்திலும் கலையாது
கனவுலகத்தே லயித்திருந்தவனை
சுட்டெரிக்கும் பார்வையினால் பார்த்து
சட்டென்று புத்தகத்தை பிடுங்கி
அப்புறத்தே வைத்தாள்

துணுக்குற்று அவளை நான் நோக்க
தெறிக்கும் சொற்களில்
எனை மறக்கச் செய்யும்படிக்கு
என்ன உண்டு அங்கேயென வினவ

படிக்கும் பல்வேறு கதைகளிலும்
எத்தனை நாயக நாயகியர் வந்தாலும்
என்னவிதமாய எண்ணங்கள் கொண்டாலும்

சுருள் முடியும்
பனி தேகமும்
கனி மொழியும்
ஒளிரும் விழிகளும்
மலர் நாசியும் கொண்ட
செப்புச் சிலையவளையும்

அச்சத்தையறியாத என்னையுமே
கதாபாத்திரங்களில் பொருத்தி
அவளடுத்திருக்கும்போதும்
இல்லாத பொழுதுகளிலும்
களிப்புறுகிறேனென
எப்படிச் சொல்லுவேன்?

No comments:

Post a Comment