Wednesday 23 September 2015

என்ன சொல்லி நானெழுப்ப?

வெட்கம் பிடுங்கித் தின்றது
அவளை மட்டுமல்ல

முதன்முறை பயணமே
மூச்சு முட்டுமென அறியாதவனாய்
உடலசதியிலும் கூட
உறங்கும்வழி தெரியாதவனாய்
கற்பனையின் காலங்கள்
கைவரக்கூடுமென நினையாதவனாய்
நானிருக்க

கால் விரலில் கண்பதித்து
கட்டை விரலால் கோலமிட்டு
இதழ்கடையில் முறுவல் கோர்த்து
இறுக்கமான மூச்சுக்களுடன்
இருக்கவியலாமல் அவளிருக்க

சுற்றுமிருந்த உறவுகளும்
சீண்டிக்களிக்கும் நண்பர்களும்
வெட்கத்தை எம்மிடம் வாரியெடுக்க

கட்டிவைத்த சாதங்களுடன்
கலகலப்பையும் அவிழ்த்து
சிரிப்பு மழையை சிதறவிட்டு
அத்தனை பேரும் ஆரவாரிக்க

எதிரிருந்தவளை
எவ்வாறேனும் விரலாலொரு முறை தொட்டு
முகவாயுயர்த்தி
விழிகளிலவள் தேக்கி வைத்திருக்கும்
காதல் மழையை அள்ளிப் பருக ஆவல் கொண்ட
உள்ளத்துடிப்புகளை
முரட்டுக் கயிற்றால் முடிச்சிட்டு
நானிருந்த வேளை

அய்யன் அழைத்தாரென்று
அவரையடுத்த காலியிடம் நோக்கிச் செல்ல
ஆயத்தமாகி அவளெழும்ப

அவளுடன் ஒட்டிக்கொண்ட என்னிதயமும்
எனைவிட்டெழும்ப

இத்தனை காலமும் கற்றுவந்த
கலாச்சார பண்பாட்டில்
ஊறிய உள்ளத்தை
பெண்மையை மதித்தே
பெருமை கொள்ளவேண்டுமென கற்பித்த

பெற்றோரின் மாண்பையெல்லாம் மறந்து
இருக்கையில் சிலையான எனை
என்ன சொல்லி நானெழுப்ப?

No comments:

Post a Comment