Tuesday 8 September 2015

விற்பனையாளன்























சிறிது கலைந்த கேசம்.
அலைச்சலின்
அயர்ச்சியில்
ஆட்கொண்ட முகம்

தோளிலொரு
தோல் பை.
அதனுள்
என்னல்லாம் உண்டு?
அவனே அறியான்.

காலையில் இருந்து
கழுதை போல்
இரு நூற்றைம்பது வீடுகள்
ஏறி இறங்கியாகி விட்டது.
இனியும் ஐம்பது
எப்படியாவது.
இன்றைய தினம்
ஒழியணும்.

ஒவ்வொரு வீடும்
ஒவ்வொரு விதமாய்.
எத்தனை வீட்டுக் கதவுகள்
திறக்கவேயில்லை,
எத்தனை வீட்டுக் கதவுகள்
முகத்திலறைந்து
சாத்தப்பட்டன,
எத்தனை வீட்டில்
வேண்டாமெனும்
ஒற்றை சொல்லிலவன்
திருப்பி அனுப்பபட்டான்,
எல்லாம் கடக்கணும்.

இன்னும் சில வீடுகளில்
எதிர்பார்ப்பே வேறு.
அத்தகைய வீடுகளில்
அருந்த நீர் கொடுத்தாலும்
பருக மனத்தில்
பயமே எஞ்சும்

எப்படியோ இதுவரை
ஏழு வீடுகளில்
விற்று விட்டான்.
இனியும் மூன்றெங்கிலும்
எப்படியாவது...!
ஐம்பதும் தீரும்போது
அதுவும் நடக்கும்.

கடந்த ஒரு வருடத்தில்
கிடைத்த அனுபவங்கள்
கணக்கிலடங்கா!
எத்தனை மனிதர்கள்!
எத்தனை வேடங்கள்!
எத்தனை மறுதலிப்பு!

எல்லாம் கடக்கையில்
அங்கங்கே
மென் மலர் தூவலாய்
சிற்சில வெற்றிகள்.

தனை நம்பியிருக்கும்
மூன்று உயிர்களுக்காக
அன்றாடம் தன்னை அலங்கரித்து
மாலையில் வாடிப்போகும்
மலர் அவன்..

நம்பிகை நீரூற்றை மட்டுமே குடித்து
நாட்களெனும் பயிரை வளர்ப்பவன்

இதுதான் வாழ்க்கையின் சாராம்சமென
உணர்ந்தவன்

உணர்த்துபவன்….!

No comments:

Post a Comment