Saturday 12 September 2015

சுனட்சேபன்

ஆழி பெரிது என்னும் புத்தகத்தில் நான் படித்த கதை

இதில் எனக்கு ஒரு கேள்வி இருக்கின்றது

வேத காலத்திலேயே செல்வத்துக்காக அந்தணன் கூட தனது பிள்ளையை பலிகொடுக்க முன்வந்தது ஒரு நிகழ்வென்றால், இப்போது நடக்கும் தவறுகளுக்கு என்ன சொல்ல?

இக்கதை ரிக்வேதத்தில் சொல்லப்பட்டதாகத் தெரிகின்றது

மனிதப் பலியிடுதல் உலகமெங்கும் உள்ள ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. தான் மிகவும் விரும்பும் ஒரு மனித உயிரை ஒரு பக்தனிடம் இறைவன் வேண்டுவதும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் உணர்ச்சிகர தொடர் நிகழ்ச்சிகளும் ஓர் உச்சத்தை நோக்கிச் சென்று இறுதியில் ஓர் அற்புதச் செயலின் மூலம் பலியிடப்பட்ட உயிர் மீண்டெழுவதும் அனைத்தும் பக்தியை சோதிப்பதற்கான திருவிளையாடலாக அமைவதும் உலகெங்கிலும் பக்தி இலக்கியங்களில் காணப்பட முடிந்த ஒரு படிமம். தமிழ்நாட்டில் சீராளன் சிறுத்தொண்டர் கதை மிகவும் பிரபலம்.

உலகளாவ பரந்துவிட்ட மற்றொன்று யூத-திருமறையில் உள்ள ஆபிரகாம்-ஈசாக்கு தொன்மம். வேதத்திலும் இதே தொன்மக் கதை உண்டு. அது சுனட்சேபன் எனும் அந்தணச் சிறுவனின் கதை.

ஹரிச்சந்திரன் எனும் அரசன் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. அவனுக்கு குழந்தை இல்லை. வருணனிடம் குழந்தை வேண்டித் தவமிருக்கிறான். குழந்தை பிறந்தால் வருணனிடம் கொடுத்துவிட வேண்டும். குழந்தையும் பிறக்கிறது. ரோஹிதன் எனும் அக்குழந்தையை வருணன் வந்து கேட்கும் தோறும் தள்ளிப்போடுகிறான் ஹரிச்சந்திரன். இன்னும் நான் மழலை மொழி கூட கேட்கவில்லையே” “இன்னும் அவன் நடந்து நான் பார்க்கவில்லையே” “ஒரு முறை அவன் வில்வித்தை பயிலும் அழகையாவது பார்த்துவிட்டு பிறகு நீ எடுத்துக்கொள்இப்படி சாக்கு போக்குகள் நீள்கின்றன. ரோஹிதனுக்கு விஷயம் புரிந்துவிடுகிறது. தன் தந்தை தன்னை வருணனுக்கு பலியிடப் போகிறார். அவன் வீட்டை விட்டு ஓடி விடுகிறான். ரோகிதனை உலகையெல்லாம் சுற்றிப் பார்க்கும்படி இந்திரன் தூண்டுகிறான், ஆறு ஆண்டுகள் ரோகிதன் காடு மேடு ஊர்கள் பல்வேறு சமுதாயங்களைச் சுற்றுகிறான். இன்னும் அவனுக்குத் தன்னை பலியாக அளிக்கும் மனப்பாங்கு வரவில்லை.
இறுதியாக அங்கீரச மகரிஷியின் கோத்திரத்தில் வந்த அஜிகர்தன் எனும் அந்தணனின் வீட்டுக்கு வருகிறான். அஜிகர்தன் பணத்துக்காக எதுவும் செய்பவன் என ரோகிதனுக்குத் தோன்றுகிறது. அவனது மூன்று மைந்தர்களில் ஒருவனைத் தனக்கு அளித்தால் நூறு பசுமாடுகளை அளிப்பதாகச் சொல்கிறான் ரோகிதன். அஜிகர்தனின் கண்கள் ஆசையால் விரிகின்றன. ஆனால் மூத்தமகன் எனக்கு மிகவும் வேண்டியவன். ஏனென்றால் அவன் செய்யும் சடங்குகள் மூலமே நான் மேல் உலகங்களை அடைய முடியும்அன்னை வருகிறாள். கடைக்குட்டி என் செல்லம்ஆக மிஞ்சி நிற்பவன் எவராலும் குடும்பத்தில் வேண்டப்படாதவன் சுனட்சேபன். அவனுக்குப் புரிகிறது, தனது விலை நூறு பசுமாடுகள்.
ஹரிச்சந்திரனிடம் ரோஹிதன் வருகிறான். இதோ எனக்கு பதிலாக இவனை வருணனுக்குக் கொடுங்கள். வருணனிடம் வேண்டுகிறான் ஹரிச்சந்திரன். தனக்கு மிகவும் பிரியப்பட்ட ரோஹிதனுக்கு பதிலாக இதோ இந்த அந்தணச் சிறுவனை அவன் குடும்பத்தவராலேயே அன்பு காட்டப்படாதவனை ஏற்றுக்கொள்வீர்களா? வருணன் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான். அறமறிந்தவனைக் காக்க வேண்டிய அரசனுக்கு மாற்றுப்பலியாக அந்தணனா.. இது நல்லதுதான்.

ராஜசூய யக்ஞம். நாடெங்கும் ஒரே உற்சாகம். வசிஷ்டர் சாட்சியாக விஸ்வாமித்ரரே முன்னின்று நடத்தப் போகும் யாகம். வேள்வி எனும் அந்தப் புனிதப் பயணத்தின் வழிநடத்தும் பூசகரோ ஜமதக்னி. வேள்வியின் இறுதி நாள். யூப ஸ்தம்பத்தில் கட்ட யாகப்பசுவை அழைத்து வரச் செல்கிறார் ஜமதக்னி. அங்கே பசுவுக்கு பதிலாக நிற்பதோ ஒரு பதின்ம வயது அந்தணச் சிறுவன், இவன் தான் யாகப்பசு என்கிறான் யக்ஞத்தின் எஜமானனான ஹரிச்சந்திரன். எதுவும் பேசாமல் மௌனமாக யாகப்பசுவுடன் வருகிறார் ஜமதக்னி. இப்பசுவை யூபஸ்தம்பத்தில் யார் பிணைப்பார்கள்? வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் மறுக்கிறார்கள்.

இப்பெருந்தகையாளர்கள் கூட்டத்தில் அதைச் செய்யும் இரக்கமற்ற நெஞ்சுரம் யாருக்கு உண்டு? அங்கீரச கோத்திர அந்தணர்கள் அமர்ந்திருக்கும் கூட்டத்திலிருந்து ஒரு கை உயர்கிறது. சுனட்சேபனின் தந்தை நூறு பசுக்களை எனக்கு அளித்தால் நான் யாகப்பசுவை யக்ஞ ஸ்தம்பத்தில் பிணைக்கிறேன்

தந்தேன் என்கிறான் ஹரிச்சந்திரன். எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சுனட்சேபன் யக்ஞ ஸ்தம்பத்தில் தன் தந்தையால் பிணைக்கப்படுகிறான். இனி யாகப்பசுவை யார் பலியிடுவார்கள்? மீண்டும் எவரும் தயாராக இல்லை. மீண்டும் ஒரு கை உயர்கிறது. சுனட்சேபனின் தந்தை. இன்னும் நூறு பசுக்களைத் தாருங்கள். நான் யாகப்பசுவை பலியிட்டு வருணனின் உலகுக்கு அனுப்புவேன், ஹரிச்சந்திரன் தலையசைக்க வாளை கையேந்தி யாகப்பசுவை நெருங்குகிறான் அஜிகர்தன்.

பிறந்த குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சொந்த தாய் தந்தையரால் விற்கப்பட்டு இதோ பெற்ற தந்தையால் கொல்லப்படப் போகிறான் சுனட்சேபன். பொருட்பாசத்துக்காக பெற்ற கடமையை மறந்த தகப்பன். பெற்ற பாசத்துக்காக சமுதாயக் கடமையை மறந்து மாற்றான் மகனை பலியிடத் துணிந்த அரசன். இந்த முழு அநீதியின் முன் செயலிழந்து அமைதி காக்கும் சமுதாயம். முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சுனட்சேபன். அவன் கண் மூடி தியானிக்கிறான். மந்திரங்கள் அவன் அகவெளியில் உதயமாகின்றன.

அவன் பிரஜாபதியைத் துதிக்கிறான். பின்னர்  அக்னியைத் துதிக்கிறான். சூரிய உலகின் தேவதையான சவிதாரைத் துதிக்கிறான். வருணனைத் துதிக்கிறான். மீண்டும் அக்னியைத் துதிக்கிறான். விஸ்வதேவர்களை துதிக்கிறான். இந்திரனைத் துதிக்கிறான். அஸ்வினி இரட்டையர்களைத் துதிக்கிறான். இறுதியாக விடிகாலையின் தேவதையான உஷஸை துதிக்கிறான். இத்தேவதைகளையெல்லாம் ஆனந்தப்படுத்தும் மந்திரங்கள் அவனுக்குள் உதயமாகின்றன. அவனைப் பிணித்திருந்த கயிறுகள் தானாக அவிழ்ந்து விழுகின்றன. அரசனின் நோய் அகலுகிறது. அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட சுனட்சேபன் அகவெளியில் மந்திரங்களைக் கண்டறியும் மந்த்ரதிருஷ்டாவாகிவிட்டான் என்பதை அங்கிருந்தோர் அனைவரும் உணர்கின்றனர். அவன் இனி தெய்வங்கள் அளித்த வரம். தேவரதன்.

விஸ்வாமித்ரரின் கோத்திரத்தில் இணைகிறான் தேவரதன் எனும் சுனட்சேபன். அவனைப் பெற்ற தந்தையார் இப்போது அவனை அவன் பிறந்த கோத்திரத்தினருடன் வந்து அமரச்சொல்கிறார். அனால் இனி அவன் அவருடைய கோத்திரத்துக்கு சொந்தமல்ல. கடிய மனம் படைத்த ஏவலாட்கள் கூட செய்யத் தயங்கும் காரியத்தை பொருளாசைக்காக செய்ய துணிந்தவர் அவர். வேள்வி முதன்மை பூசகனாக இருந்தும் மானுடப் பசுவை வருணனுக்கு பலியிட யூப நெடுந்தூணில் பிணைக்க மறுத்த விஸ்வாமித்திரரே அவனது ஆன்மிகத் தந்தை. விஸ்வாமித்திரரின் குல முதல்வனாக அவன் ஏற்கப்படுகிறான்.

ரிக் வேதத்தின் ஐத்ரேய பிராமணத்தில் வரும் தொன்மம் இது. ரிக் வேதத்தில் சுனட்சேபர் கண்டறிந்து அளித்த பல மந்திரங்கள் இருக்கின்றன. அவை இத்தொன்மத்துடன் தொடர்பு படுத்தப்படுகின்றன (1.24.1 தொடங்கி 1,30,20-22 வரையிலாக பல பாடல்கள்) யூத திருமறையில் காணப்படும் ஆபிரகாம் ஈசாக்கு தொன்மம் யூதப் பண்பாட்டின் நடுநாயகமான தொன்மங்களில் ஒன்று. வரலாற்றாராய்ச்சியாளர்களாலும், இறையியலாளர்களாலும், மனவியலாளர்களாலும் அலசப்பட்டுள்ளது. ஈசாக் தான் பலியிடப்படும் வரை அறியமாட்டான் என்பதும், ஆபிரகாம் ஒரு தந்தையாக தன் இறைவனுக்கு தன் ஒரே மைந்தனை பலி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகும்போது அடையும் மன உளைச்சலையும் யூதத்திருமறை சொல்லாமல் சொல்வதாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முக்கியமான யூத மறைஞானப் பிரிவினரான ஹாஸிடிக் பிரிவினர் ஈசாக்கு உண்மையில் பலியிடப்பட்டு பின்னர் மூன்று நாட்கள் ஆதி தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உயிர்த்தெழுந்ததாகக் கருதுகின்றனர்.

இந்த யூத தொன்மத்துக்கும் வேத தொன்மத்துக்குமான வேறுபாடுகள் தெளிவானவை: ஈசாக்கு ஏற்கனவே ஆசிர்வதிக்கப்பட்டவன். அவன் பிறப்பே ஆபிரகாமின் தேவனுடைய வலிமைக்கான சான்று. சுனட்சேபனோ அவ்வித ஆசிர்வாதம் ஏதும் பிறப்பிலேயே கொண்டவனல்ல. ஆபிரகாமிய தொன்மத்தில் ஈசாக் எந்த வழிப்பிறப்பில் வந்தவன் என்பது முக்கியமானது. இன்றைக்கும் அரேபிய யூத சண்டைகளில் ஆபிரகாமின் தேவனால் /அல்லாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பலியிட கொண்டு செல்லப்பட்டவன் யார் என்பது பிரதான சர்ச்சையாக உள்ளது. இஷ்மாயில் எகிப்திய அடிமைப்பெண்ணுக்கு ஆபிரகாம் மூலம் மைந்தனாக பிறந்து பின்னர் வாரிசுப் போட்டியில் விரட்டியடிக்கப்பட்டவன் என்றும் அவனது வழித்தோன்றல்களே அராபியர் என்றும் கூறுகின்றனர் யூதர்கள். ஆனால் மூத்த மகன் என்ற முறையில் இஷ்மாயிலே வாக்களிக்கப்பட்டவை அனைத்துக்கும் வாரிசு என்றும் அவனே இறைவனுக்கு பலியிட எடுத்துச் செல்லப்பட்டவன் என்றும் இஸ்லாமியர் கருதுகின்றனர். தொன்மங்கள் வரலாறுகளாகும்போது ஏற்படும் வலிமையை இன்றைக்கும் இஸ்ரேலிய பாலஸ்தீனிய பரஸ்பர வெறுப்பில் ஒருவர் உணரலாம்.


சுனட்சேபனோ ஒதுக்கப்பட்டவன். சொந்த தந்தையாலும் பாதுகாக்கப்பட வேண்டிய அரசனாலும் பாதிக்கப்பட்டவன். அதனாலேயே அவன் மந்திரஙளை காணும் கவியானவன். அவன் பெற்ற பேறுக்கு காரணம் அந்த புறக்கணிப்பே. புறக்கணிக்கப்படுவோரே ஒதுக்கப்படுவோரே, அந்த வலியை உணர்ந்தோரே, சத்தியத்தின் ஒளியை காண்பார்கள் எனும் உண்மையை உணர்த்தும் வேத தொன்மமாக ஒளிர்கிறான் சுனட்சேபன்.

No comments:

Post a Comment