Monday 21 September 2015

உருக்கு வலி


















அந்நொடியின் ரணவேதனை
யாரும் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை

அது ஒன்றும் மரணத்தின் வாசலில் நுழைவதல்ல
மாறாக மரணத்தை தானே சந்திப்பது

எனில் தற்கொலைக்கான ஒத்திகையா அது

அடடா, அப்படியில்லை
தானறிய தனை இழப்பது

காதலில் தன்னை இழந்து
இனியொரு உயிரில்
கலப்பதாக எண்ணுவார்களே அதுவா?

ம்ஹும் அதுவுமில்லை
அது ஆனந்தமான உணர்வு சங்கமம்
வேறென்ன இது?

தான் யாரென்று தானறிந்தும் அறியாமல்
பிறறிந்தும் உணராமல்
பிதற்றும் மானிடனாயும் இல்லாமல்
புத்தியின் சுவடுகளும் தெரியாமல்
மீளும் வழியும் கிடையாமல்
ஆழப் புதைந்துகொண்டிருக்கும்
தன்னையே தான் சிதைத்துக் கொண்டிருக்கும்
உருக்கு வலி

அப்படியா?
இவ்வலி உனக்கும் தெரியுமா?
உனக்குமா?
உனக்குமா?

நாமெல்லோரும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

எனக்கு மட்டுமான பிரத்தியேக வலியில்லையா இது?

அவ்வாறெனில்
வலியுணர்ந்த உங்களில் யாருக்காவது
மீளும் வழியறியுமா?

No comments:

Post a Comment