Friday 4 September 2015

சுபா- தனி ஒருவன்



சுபா- தனி ஒருவன்

சுரேஷ் பாலா எனும் இந்த இரண்டு நண்பர்களின் கதைகள் மீது எனக்கு சிறுவயது முதலே அலாதி ப்ரியம். சுவையான கதையோட்டம், சிறப்பான மொழி நடை, எளிமையான விவரிப்பு, தேவையான விறுவிறுப்பு, தெளிவான கதாபாத்திரங்களென இவர்களின் கதைகள் படிக்கப் படிக்க மிகுந்த ஆர்வத்தை கொடுக்கக்கூடியவனவாக இருந்தன.

இவர்களது கதைகளில் துப்பறியும் நரேன், வைஜயந்தி மற்றும் செல்வா எனும் கதாபாத்திரங்கள் நினைவை விட்டு நீங்காதவை. இவர்களது சூப்பர் நாவல் என்னும் மாதாந்திர கதைகளை தாங்கும் புத்தகத்தில்தான் கே.வி.ஆனந்த் என்னும் இளைஞர் அட்டைப்பட புகைப்படக் கலைஞராக அறிமுகமானார்.

பின்னர் கே.வி.ஆனந்த் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளராக ஏற்கப்பட்டு அதன் பின்னர் படங்கள் இயக்கத் தொடங்கியபோது அவர் சுபாவின் கதைகளையே தேர்ந்தெடுத்தார். கனாக் கண்டேன், அயன், மாற்றான், கோ என இவர்களது கதையாக்கங்களில் வெற்றி பெற்ற படங்களில் திரைக்கதையமைப்பும் திருப்பங்களும் மிகுந்த ஆர்வத்தை கொடுப்பனவாக இருந்தன.

கோ படத்தில் வில்லனாக வரும் முதலமைச்சர் கதாபாத்திர இளைஞர் இறுதியில் இறக்க நேரிடும்போதும் அவனை நல்லவனாக சித்தரித்து சமூகத்திற்கு இளைஞர்களுடைய எழுச்சி வேண்டுமென காட்டியது திரைப்படம் பார்த்த என்னை அளப்பரிய மகிழ்ச்சி கொள்ளச் செய்தது.

நேற்று பார்த்த தனி ஒருவன் திரைப்படத்திலும் கதை, திரைக்கதை வசனத்தில் இவர்களது பங்கு இருந்தது. திரைக்கதையில் அது தெள்ளெனத் தெரிந்தது. ஜெயம் ரவியின் உடலில் சுவடறிவான் பொருத்தப்படுவதும், அதைக் கொண்டு கதாநாயகனின் ஒவ்வொரு அடியையும் வில்லன் கண்காணிப்பதும் இறுதியில் வில்லனை எல்லா வகைகளிலும் செயலிழக்க வைத்து செக் அண்ட் மேட் என்னும் நிலையில் கதாநாயகன் இருத்துவதும் என படம் பிரமிப்பூட்டும் வேகத்தில் சென்றது என்னை மிகுந்த மகிழ்ச்சியிலாக்கியது.

தனி ஒருவன் திரைப்படத்தை பொறுத்தவரை இயக்குனர் மோகன் ராஜா தன்னை ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என நிரூபித்திருக்கிறார். படத்தில் எந்த தேவையற்ற காதலோ, காமெடியோ இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை நம்மை நாற்காலியின் நுனியில் இருத்தி வைத்திருக்கிறார்,

இவ்வளவு சொன்ன நான் எனக்கு படத்தில் மிகவும் பிடித்த காட்சியை சொல்லாமல் விடமுடியாது.

கதாநாயகன் வெறுப்பின் உச்சத்தில் துடித்தவாறு தனது உயிரை கொடுத்தாவது வில்லனை பிடிப்பேனெனச் சொல்லும்போது கதாநாயகி சொல்லும் வசனத்தில் எவ்வளவு அர்த்தம் பொதிந்திருக்கின்றது. எழுச்சி ஆழப் பதிந்திருக்கிறது என்பதௌ நீங்களே பாருங்கள் தோழமைகளே! பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள். நன்றி

எழுத்தாளர்கள் சுபா குறித்த விக்கிப்பீடியா லிங்க்

No comments:

Post a Comment