Wednesday 23 September 2015

காத்திருப்பு


புழுதியை வாரிக்கொண்டு வந்திருந்த அனல்காற்று
புன்னகையை தருவித்திருந்தது எனக்கு

சில நாட்களாகத் திறக்கப்படாத
அப்புத்தக அலமாரியின் மேல்தட்டில்
அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்
புராதனமோவெனும் எண்ணத்தை என்னுள் எழுப்ப

படர்ந்திருந்த பழுப்பு நிற தூசிகளை
எச்சிலில் கோர்த்து இழையாக்கி
எனது புதிய வீட்டை நிர்மாணித்தேன்

வாழ்நாளின் பெரும்பகுதி
காத்திருப்பின் கையிருப்பில்
கரைந்துபோவதே முறையென்றிருக்க
இரைதேடி நானும்
பொறுமைக்கு எடுத்துக்காட்டாய்
வீற்றிருக்கத் தொடங்கினேன்

ஊர்ந்து வந்த பல்லிகள்
உருவத்தில் பெரிதாயிருக்க
பறந்துவந்த கரப்பானோ
நில்லாமல் கடந்துபோக
எப்படியேனும் ஏதோவொன்று
விரைந்து வருமென
உள்ளுக்குள் சொல்லிக்கொண்டிருந்தேன்


அறையின் தென்மூலையில்
மேசை நாற்காலியிட்டு
அனுதினமும் எழுதி குவித்தபடி
வயிற்றுப் பசியோடும்
வாசகருக்கான பசியோடும்
காத்திருக்கையிலும்
நேர்சிந்தனையை கைவிடாத
எனது நெஞ்சமர் நாயகனை போல்......

No comments:

Post a Comment