Monday 28 September 2015

வளர்மதி சிவா



கனடாவில் வாழும் இலங்கை தமிழரான இவர் எனக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக நட்பாக இருக்கின்றார். எனக்கு இவரை, இவரது எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது சரவணா ஹரி. மிக அற்புதமான பலப்பல கவிதைகளை இதுகாறும் படைத்திருக்கின்றார்.
மிகக் குறைவாகத்தான் எழுதுகின்றார். ஆனால் ஒவ்வொன்றுக்கும் இவர் தேர்ந்தெடுக்கும் களங்கள் அதியற்புதமானவை. வாசிக்கையில் நமது மனம் அப்படியே அக்களத்தில் அக்கணத்தில் லயித்துப் போகும்.
சுடச் சுட தேநீரும்
பத்திரிகைச் செய்தியுமாய்
நாட்டு நடப்புத் தெரிந்து கொள்ள
நாற்காலியில் அமர்ந்த கோமான்களே !
தொலைக்காட்சிப் பிரியர்களே!
சற்று நேரத்தில்
இறந்தவர் தொகை இன்னும்
எண்ணிக்கையில் அதிகரிக்கலாம்
இந்த மணித்துளியில்
காணாமல் போனவர்
பட்டியல் பெரிதாகியிருக்கலாம்
வன்புணர்வு செய்யப்பட்ட சகோதரிகள்
வாழ்வைத் தொலைத்துமிருக்கலாம்
ஒலி ஒளியோடு
மனித வேட்டைக் காட்சிகளை
மனிதம் தொலைத்த மனத்தோடு
உற்றுப் பார்க்கின்றீர்களா?
எதுகை மோனையுடன்
கற்பனை வண்ணம் கலந்தளித்த
கற்பழிப்புச் செய்தி
சுவாரஸ்யமாக இருக்கிறதா?
உயிருக்குப் போராடும்
ஜீவன்களின் கதறல்கள்
காதில் தெளிவாக விழவில்லையா?
இன்னும் ஒலியளவைக் கூட்டுங்கள்.
குருதி வெள்ளமா ?அதற்கென்ன?
அடுத்த சுற்றுலாப் பயணம்
அடுத்த கண்டத்தில் எங்கே போகலாம்?
தீர்மானியுங்கள் உணர்வற்ற தீரர்களே !
உயிர்த் துடிப்பு அடங்கும்வரை
சித்திரவதைச் செயல்கள்
கண்காட்சித் திருவிழாவாக இருக்கின்றதா?
ரசியுங்கள்
குழந்தைகள் குற்றுயிராக்கபடுகிறார்களா ?
கண்ணை மூடிக் கொண்டீர்களா?
அநீதி கண்டு பொங்கியெழ
அதற்கு மனிதம் வேண்டும்.
உயிருள்ளவரெல்லாம் மனிதரல்ல.
மனிதம் கொண்டவரே மனிதர்
என்னும் இக்கவிதையில் மனிதமிழந்த மனிதர்களின் குணங்களை சாடுகையில் வெட்கித் தலைகுனியத் தோன்றுகின்றது
வெற்றிடமாய் ஓரிடம்
---------------------------------------
சுப நிகழ்வுகளில்
முகூர்த்த நேரங்களில் மட்டுமே
தீய்ந்த வாசனை வருவதாய்
அடுக்களைக்கு அனுப்பப்படும் சாமர்த்தியம்
அறிந்தும் அறியாததுபோல் நடிக்கும்
அபலையவள்.
https://www.facebook.com/photo.php?fbid=858291740868247&set=a.470867989610626.110031.100000622888657&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் கைம்பெண்ணின் அவலக்குரல் கேட்டு மனம் கசியாதவர்கள் இருக்கமுடியாது
கண்டுபிடி......!!!
கயல்விழியாளே !
மறைந்திருந்து பார்க்கும்
மடி சுமந்த மல்லிகை மலரே!
என்னைக் கண்டு பிடி ...!!
https://www.facebook.com/photo.php?fbid=996246623739424&set=a.470867989610626.110031.100000622888657&type=1
எனத் தொடங்கும் இக்கவிதை நேற்று இவர் பதிவிட்ட்து. இனப்படுகொலையில் அழிந்த சமூகத்தின் வேதனை கண்ணாமூச்சி விளையாட்டின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது மனதை எனக்கு வெகுவாக பாதித்த்து.
வாசியுங்கள் தோழமைகளே, இவரது ஒவ்வொரு கவிதையும் களஞ்சியமே.

வாழ்க அன்னாரது எழுத்துப்பணி.

No comments:

Post a Comment